சாதாரணமாகப் பலருக்கும் ஏற்படக் கூடிய ஒன்று வாய்ப்புண். இது உதட்டின் உட்பகுதியிலும், கன்னத்தின் உட்பகுதியிலும், பல் ஈறுகளிலும், நாக்கிலும் வரக்கூடியது. இதை ஆங்கிலத்தில் Stomatitis என்று கூறுவார்கள். இதற்குத் தனிப்பட்ட நோய்கள் எதுவும் காரணமாக இருப்பதில்லை. நாக்கு, உதடு போன்றவற்றில் சாப்பிடும்போது, பேசும்போதும் தவறுதலாகக் கடித்து விடுவதாலும், பல் கிளிப், பல்செட் போன்றவற்றை வாயில் மாட்டுவதாலும் ஏற்படக்கூடும். மிகக் சூடான பானங்கள் அருந்தும்போதும், நாக்கு புண்ணாகி விடக் கூடும். வெற்றிலை, புகையிலை போடுபவர்களுக்கும் நாக்கு, கன்னம் போன்றவற்றில் புண் ஏற்படக் கூடும்.
கன்னம், உதடு போன்ற சிறு மஞ்சள் நிறப்புண் போல் தோன்றுகின்ற இதனைச் சுற்றிச் சிவந்து இருக்கும். சாப்பிடவோ, குடிக்கவோ முடியாதபடி மிகுந்த வேதனை தரக் கூடும். சாதாரணமாகச் சுமார் 5 முதல் 7 நாட்கள் இருந்து மறைந்துவிடும். இவ்வாறின்றி நீண்ட நாட்களுக்கு இருக்குமானால் மருத்துவர் உதவியை நாட வேண்டும்.
சிகிச்சை
ஆயுர்வேத முறையில் இதற்குத் தக்க சிகிச்சைகள் உள்ளன.
1.அதிமதுரத்தை தேய்த்துக் குழைத்து உலர்ந்த திராட்சையுடன் சேர்த்து 10 கிராம் வீதம் காலை மாலை உட்கொள்ளப் புண் குணமாகும்.
2.உலர்ந்த திராட்சை, கடுக்காய், நெல்லிக்காய், பட்டை ஆகியவற்றைச் சம அளவு எடுத்து அரைத்து தேனில் குழைத்துப் பின்னர் வாயிலிட்டுக் கொப்பளிக்க நல்ல குணம் தெரியும்.
3.திராட்சை, கடுக்காய், அதிமதுரம், சீந்தில்கொடி ஆகியவற்றை கஷாயமாகச் செய்து வாய் கொப்பளிக்கலாம்.