கருப்பை கட்டிகள் (Fibroids)

Spread the love

பெண்களின் கருப்பையில் மிகப்பரவலாக ஏற்படும் பாதிப்பு. ‘அனுகூலமான’ கருப்பைக்கட்டிகள் இவை புற்றுநோய் (Cancer) கட்டிகளல்ல. அதனால் தான் இவைகளை அனுகூலமான (Benign) கட்டிகள் என்கிறோம். புற்றுநோய் கட்டிகளல்ல என்பதை சொல்லவே அனுகூலம் என்ற வார்த்தை உபயோகிக்கப்படுகிறது! இந்த கட்டிகள் சில சமயங்களில் பெரிதாக வளர்ந்து விடும். கர்ப்பிணி பெண்களின் கருப்பையில் இவை வளர்ந்து பெரிதாகி கருவை அழுத்தலாம். இதனால் கருச்சிதைவு ஏற்படலாம். இந்த அபாயம், கட்டிகள் தோன்றிய இடம், அதன் அளவுகளை பொருத்தது. இந்த கட்டிகள் குழந்தையில்லாத பெண்களுக்கும், குழந்தை பிறந்த பெண்களுக்கும் தோன்றும். ஒரே ஒரு கட்டியாக உருவாகலாம். இல்லை அதிக எண்ணிக்கையில் கூட்டமாக உண்டாகலாம்.

கருப்பை கட்டிகள் தசைகளாலும், நார்திசுக்களாலும் ஆனவை. இந்த கட்டிகள் இருப்பதற்கான அறிகுறிகள் சில சமயங்களில் இருக்காது. இந்த கட்டிகள் சிறிய ‘அணு’ சைஸில் இருக்கலாம் இல்லை ஒரு கால்பந்து சைஸிலும் இருக்கலாம்! கருப்பப்பையின் உட்சுவர்களில் அல்லது கருப்பையில் மேல்பகுதியிலும் தோன்றலாம். கருப்பையின் வெளியிலும் உருவாகலாம். இதனால் கருப்பப்பையின் அமைப்பு, உள் அளவுகள் மாறலாம்.

நான்கு வகை கட்டிகள் உள்ளன அவை.

கர்ப்பத்தின் வெளிபாகத்தில் உண்டாகுபவை (Subserous Fibroids) இவற்றால் குழந்தை பிறப்பதில் பிரச்சனைகள் இல்லை.

கருப்பையின் உட்சுவர் பகுதியில் தோன்றுபவை (Intramural Fibroids) இவை 5 செ.மீ. க்கு மேல் வளர்ந்தால், கருத்தரிப்பதில் பிரச்சனை ஏற்படும்.

சில கட்டிகள், கருப்பை பையின் எந்த இடத்தில் கரு வளருமோ, அந்த இடத்தை அடைத்துக் கொண்டு வளரும். (Sub – mucus fibroids) இவற்றை எந்த அளவில் இருந்தாலும் அகற்றி விட வேண்டும். கருப்பையின் உட்சுவர் ‘லைனிங் (Endometrium) கை சுற்றியிருக்கும் Myometrium என்ற இடத்தில் வளரும். (Seedlings Fibroids). இந்த கட்டிகள் ஒன்றாக (அ) கூட்டமாக இருக்கும்.

அறிகுறிகள்

பல சமயங்களில் அறிகுறிகள் இருப்பதில்லை. தென்படும் அறிகுறிகள்.

மாதவிடாய் காலங்களில் அதிக உதிரப்போக்கு அல்லது முறை தவறி சிறு கட்டிகளுடன் உதிரப்போக்கு. இதனால் சோகை உண்டாகும்.

கட்டிகளின் அழுத்தத்தால் அடிவயிற்றில் வலி, அழுத்தம், கனமான, பாரமான உணர்வு ஏற்படும்.

சிறுநீர்ப்பை (Bladder) யை அழுத்துவதால் அடிக்கடி, அவசரமாக சிறுநீர் கழித்தல்.

மலக்குடலை அழுத்துவதால் மலச்சிக்கல் ஏற்படும்.

அடிவயிறு பெருத்து விடும்.

கட்டிகள் உடைந்து சிதையும் போதும், வளரும் போதும் வலி உண்டாகும்.

கர்ப்பம் தரிக்கும் முன் அறிகுறிகளை காண்பிக்காத கட்டிகள், கர்ப்பமானதும் பாதிப்புகளை தொடங்கும். கருச்சிதைவு, குழந்தை பிறந்ததும் அபரிமித உதிரப்போக்கு இவற்றை உண்டாக்கலாம்.

மெனோபாஸ் (நிரந்திர மாதவிடாய் நிறுத்தம்) ஆன பிறகும் உதிரப்போக்கை Fibroid கட்டிகள் உண்டாக்கலாம். உடலுறவுக்கு பின் கூட உதிரப்போக்கு ஏற்படலாம்.

கருப்பை கட்டிகள் ஏன், எப்படி ஏற்படுகின்றன என்ற காரணங்கள் இதுவரை சரிவர தெரியவில்லை.

ஆயுர்வேத அணுகு முறை

கட்டிகளை ஆயுர்வேதம் ‘அர்புதா’ (திடமான வீக்கம்), கிரந்தி மற்றும் ரக்த குல்மா (அடிவயிற்றின் வாய்வுக்கட்டிகள்) என்கின்றது. மூன்று தோஷங்களின் சீர்கேட்டினால் அர்புதா, கிரந்திகள் ஏற்படும். அசுத்த ரத்தத்தால் இரத்த குல்மா உண்டாகும்.

தோஷ சிதைவுகளால் உருவாகும் கட்டிகள்

வாத பாதிப்பு – வாத தோஷ கோளாறுகளால் ஏற்படும் கட்டிகள். இவை பெரிதாக இருக்கும். குடலில் இரத்தக் கசிவை உண்டாக்கலாம். அபாயமான கட்டிகள். மாதவிடாயில் வெளியாகும் இரத்தம் கருநிறமாக, நீர்த்து, உலர்ந்திருக்கும். மலச்சிக்கல், தூக்கமின்மை, உடல் வலி இருக்கும்.

பித்த தோஷ கெடுதியால் உண்டாகும் கட்டிகள் – அதிக உதிரப்போக்கை உண்டாக்கும். அதிக அமில சுரப்பு (Acidity), சிறுநீர் கழிக்கையில் எரிச்சல், அதீத தாகம் இவை இதர அறிகுறிகள்.

கப தோஷ கோளாறுகளால் ஏற்படும் கட்டி – மெதுவாக வளர்ச்சி அடையும். கட்டிகளுடன் வரும் உதிரப்போக்கு, களைப்பு, ஆயாசம், அதிக தூக்கம், உடல் கனம் முதலியவை அறிகுறிகள்.

மேத அர்புதா – இவை கொழுப்பு, நீர், கபம், சீபம் அடங்கியவை அதீத உடல் பருமனால் உண்டாகுபவை.

மாமிச அர்புதா – தசை, நார்களால் உருவான கட்டிகள்.

ஆயுர்வேத சிகிச்சை

ஆயுர்வேத மூலிகைகள் அதீத இரத்த போக்கை நிறுத்தி, கட்டிகளை தவிர்த்து பாதிக்கப்படும் பெண்களின் பொது ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன.

பயன்படும் மூலிகைகள்

அசோகம்(Saraca Indica), கருவேலம் (Acacia Arabica), வில்வம் (Aegle Marmelos), குக்குலு, லோத்ரா, லக்ஷா z), மஜுபால் (Quercus Infectoria) முதலிய பல மூலிகைகள் பெண்களின் கர்பாசய கோளாறுகளுக்கு பயன்படுத்தப்படுகின்றன.

ஆயுர்வேத சிகிச்சையின் போது அயச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்வதை பரிந்துரைக்கிறது. இதனால் அதிக உதிரப்போக்கினால் ஏற்படும் சோகை குறையும். வாழைப்பழம், ஆப்பிள், நெல்லி, பசலைக்கீரை, கொட்டைகள், வெல்லம் முதலியவற்றை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

கர்ப்பக்கட்டிகளை அலட்சியம் செய்ய வேண்டாம். உங்களுக்கு கீழ்க்கண்ட அறிகுறிகள் இருந்தால் டாக்டரை அணுகவும்.

அதீத உதிரப்போக்கு இடுப்பு, அடிவயிற்றில் கடுமையான வலி

தலைச்சுற்றல், மூச்சுத்திணறல், மார்வலி இவை அதிக உதிரப்போக்குடன் சேர்ந்து இருந்தால் கர்ப்ப காலத்தில் உதிரப்போக்கு.


Spread the love