புரதம் செறிந்த துவரை

Spread the love

பொதுவாக பருப்பு வகைகள், அரிசி, கோதுமை போல், தனி உணவாக உண்ணப்படுவதில்லை. காரணம் அவற்றின் வாயுவை உண்டாக்கும் தன்மை தான். தவிர மலத்தையும், சிறுநீரையும் கட்டும் குணமுடையவை என்ற கருத்தும் காரணம். ஆனால் பருப்புகள் நல்ல புரத புஷ்டியை தருபவை.

பருப்பு வகைகளில் இந்தியாவின் மிக முக்கியமானது துவரம் பருப்பு. இது இல்லையென்றால், புகழ் பெற்ற தென்னிந்திய ‘சாம்பார்’ இல்லை. நாலு வகை முக்கிய பருப்புகளில், (கடலை, உளுந்து, பயத்தம் பருப்பு) துவரையும் ஒன்று.

துவரம் பருப்பின் தாவரவியல் பெயர்       –  Cajanus cajan

                                                          Syn    –   Cajanus Indicus

                                                      Family   –   Fabaceae

வேறு மொழிகளில் – சமஸ்கிருதம் – துவரி,  ஹிந்தி – அரஹர்தால், தெலுங்கு – கந்தலு, ஆங்கிலம் – Red gram

துவரம் பயிர் தொன்மையானது. நைல் நதி பள்ளத்தாக்கில், 3000 வருடங்களுக்கு முன்பே பயிரிடப்பட்டு வந்தது. அதே சமயத்தில் இந்தியாவிலும் உருவாகியிருக்கலாம். இந்தியாவிலிருந்தே ஆப்பிரிக்காவிற்கு துவரம் பயிர் பரவியிருக்கலாம். உலகின் பல உஷ்ண பிரதேசங்கள், வறண்ட பகுதிகளில் தற்போது பயிரிடப்படுகிறது. தற்போது உலகின் உற்பத்தியில் 82% இந்தியாவில் தான் பயிராகிறது. இந்தியா, கிழக்கு ஆப்ரிக்கா, மத்திய அமெரிக்கா இவை மூன்றும், இதே வரிசையில், துவரையை பயிரிடும் தேசங்களில் முன்னணி வகிக்கின்றன.

துவரை, விதைகளை நட்டு பயிரிடப்படுகிறது. கம்பு, சோளம் போன்ற வேறு பயிர்களுடன் சேர்த்தும் பயிரிடப்படும். வறட்சி பூமியில் பயிரிட்டாலும் வளர்வதால், எல்லா தர விவசாயிகளுக்கும் பலனளிக்கிறது. பயிரிடப்படும் மண்ணுக்கு மீண்டும் நைட்ரஜன் சக்தியை மீட்டு வளர்ந்த மண்ணை வளமாக்கும் பயிர் துவரை. இதன் இலை, தழைகள் உரமாக பயன்படுகின்றன. துவரை செடி மண் அரிப்பை தடுக்கிறது.

துவரை பயிர் ஆழமாக பரவும் வேர்களுடையது. வறட்சியை நன்றாக சமாளிக்கும். ஆப்ரிக்க வகைகள் 5-6 அடி வளரும். இந்திய ரகங்கள் இன்னும் உயரமாக வளரும். பூக்கள் மஞ்சள் நிறமுடயவை. குறைந்த அளவு உரம், பூச்சி மருந்துகள், தண்ணீர் போதும். வருடத்திற்கு 650 மி.மீ. மழை போதுமானது. களை எடுக்கும் வேலையும் குறைவு. நட்டபின், வகையை பொருத்து 5 லிருந்து 12 மாதங்களில் அறுவடை செய்யலாம். ஒரு ஹெக்டேருக்கு 700 கிலோ மகசூல் கிடைக்கும். போகப்போக மகசூல் குறைந்து வரும். பயிர் 5 ஆண்டுகள் வரை பலன் தரும். நல்ல விலை கிடைப்பதால், பல வித ரகங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன.

பயன்கள்

1.       துவரம் பருப்பு (இரண்டாக உடைத்த பருப்பு) பலவகை உணவுப்பொருட்கள் செய்ய பயன்படுகிறது. முக்கியமாக சாம்பார், ரசம் போன்றவை. பல “தால்” (பருப்பு) உணவுகளில் பயன்படுகிறது. உலகம் முழுவதும் உணவில் பயன்படுகிறது.

2.       துவரம் பருப்பு புரதம் நிறைந்தது. சைவ உணவு உண்போர்களுக்கு முக்கியமான புரதம் அளிக்கும் பருப்பு. இதில் மெதியோனின் (Methionine) லைசின் (Lysine), ட்ரிப்டோபான் (Tryptopham) போன்ற புரத அமினோ அமிலங்கள் உள்ளன.

3.       துவரம் பருப்பு சத்துள்ள உணவு. களைப்பை போக்கி, தசைகளை வலுப்படுத்தும்.

4.       செடி நல்ல பச்சை உரமாக பயன்படும். ஒரு ஹெக்டேருக்கு 40 கிலோ வரை நைட்ரஜனை சேர்க்கும்.

5.       இலைகள் மடகாஸ்கரில் பட்டுப்பூச்சிகளின் உணவாக பயன்படுத்தப்படுகின்றன.

மருத்துவ பயன்கள்

1.       துவரம் பருப்பை அரைத்து, நெருப்பில் வைத்து கொதிக்க வைத்து, கிளறி, வீக்கங்களில் வைத்துக்கட்ட, அவை குறையும். இலைகளையும் நீரில் அரைத்து வீக்கங்களுக்கு போடலாம். இலைகளில் 10 கிராம் எடுத்து, 7 கருமிளகுகளை சேர்த்து மைய அரைத்து தண்ணீர் கலந்து குடித்தால் உள்வீக்கம் (கல்லீரல் , வயிறு, குடல், வீக்கங்கள்) குறையும்.

2.       துவரம் பருப்பை வேக வைத்த தண்ணீர் குடிக்க, உடல் வலிமை பெருகும். பட்டினி முடிவுக்கு பின்னும், உப்பில்லா பத்தியத்திற்கும், சுரத்திற்கும், பஞ்சணையிலிருந்து எழுந்திருக்க முடியாதவர்களுக்கும், மெலிந்தவருக்கும் உதவும் உணவு துவரம் பருப்பு என்கிறது சித்த வைத்தியம்.

3.       வாய்ப்புண் உள்ளவர்கள் துவரை இலை கொழுந்தை வாயிலிட்டு மென்று வரலாம்.


Spread the love
error: Content is protected !!