பெண்களை வதைக்கும் யூரினரி இன்ஃபெக்ஷன்

Spread the love

டாக்டர் H . சௌந்தரராஜன்,  ராமச்சந்திரா பல்கலைக் கழகம்.

ஈவ்டீசிங், வரதட்சனைக் கொடுமை, மாமியார்&மருமகள் சண்டை, கணவனிடம் அடி, உதை என்று பெண்களுக்குத்தான் எத்தனை விதமான இம்சைகள்.  இவற்றோடுகூட, ‘நானும் விட்டேனா பார்’ என்கிறது இயற்கை.  மாதாந்திரத் தொந்தரவு, பிரசவம் என்று கஷ்டங்களோடே பழகிப்போன பெண்களுக்குச் சிறுமியாக இருக்கும்போதே சிறுநீரகம் தொடர்பான பிரச்சினைகள் ஆரம்பித்து விடுகின்றன. முக்கியமான தொந்தரவு யூரினரி இன்ஃபெக்ஷன்.

ஆண்களுக்கு ரொம்பச் சின்னப் பையன்களாக இருக்கும்போதும், வயதான பிறகும் எப்போதாவது யூரினரி இன்ஃபெக்ஷன்  ஏற்படுகிறது.  பெண்களுக்கு ஜலதோஷம் மாதிரி வாழ்நாள் முழுக்க அடிக்கடி இன்ஃபெக்ஷன்தான்.

அது ஏன் என்று பார்ப்பதற்கு முன், யூரினரி இன்ஃபெக்ஷன் என்றால் என்ன? என்று தெரிந்துக் கொள்வோம்.

சிறுநீரகம், சிறுநீரை எடுத்துச் செல்லும் குழாய், சிறுநீர்ப்பை, பையிலிருந்து சிறுநீர் வெளியேறும் பாதை & இந்த இடங்களை பாக்டீரியா போன்ற நோய்கிருமிகள் தாக்குவதால் வரக்கூடிய பாதிப்புதான் யூரினரி இன்ஃபெக்ஷன்.

இது எப்படி வருகிறது.

உள்ளே, வெளியே என இரண்டு விதத்தில் இது வருகிறது.  சில வகை பிறவிக் கோளாறுகளால் சிறுநீர்ப்பை மற்றும் சிறுநீர் வெளிவரும் பாதையில் உள்ளேயே பாக்டீரியா உருவாவது ஒரு வகை.  மிகச சொற்பமான கேஸ்களில்தான் இந்த வகை பாதிப்பிருக்கும்.

வெளியிலிருந்து சிறுநீர்ப்பாதையின் உள்ளே நோய்க்கிருமிகள் நுழைந்து தாக்குவதால் வருகிற பாதிப்பு இரண்டாவது வகை.  இதுதான் மிகப் பொதுவாக ஏற்படுகிற இன்ஃபெக்ஷன்.  இந்த வகை இன்ஃபெக்ஷன் பெண்களில்தான் அதிகம். ஏன் அப்படி?

பெண்களின் உடலமைப்பு அப்படி, பெண்களுக்கு சிறுநீர் வெளியேறும் இடத்துக்கு அருகிலேயே ஆசனவாய் உள்ளது.

ஆண்கள் உடம்பில் அப்படியில்லை.  சிறுநீர் வெளியேறும் பகுதிக்கும் ஆசனவாய்க்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.  ஆசனவாய்தான் உடம்பின் ஒட்டுமொத்தக் கழிவுகளும் வெளியேறும் இடம்.

அதாவது, கிருமிகள் அதிகம் சேரும் இடம் இங்குதான்.  பெண்கள் நம்பர் டூ போய்விட்டுச் சுத்தம் செய்யும்போது, அருகிலேயே இருக்கிற சிறுநீர் வெளியேறும் துவாரதின் பக்கத்தில் பாக்டீரியா போக வாய்ப்புகள் ரொம்ப ரொம்ப அதிகம்.

தவிர, மாதவிலக்கு சமயங்களில் மிகச் சுலபமாக பாக்டீரியாக்கள் உண்டாகும்.  அதிகபட்சம் பெண்கள் இன்ஃபெக்ஷனுக்குள்ளாவது இந்தச் சமயத்தில்தான்.  காற்றும் வெயிலும் படாத மறைவிடத்தில் இந்த பாக்டீரியாக்கள் நன்றாக வளர்கின்றன.  இவை சுலபமாக சிறுநீர்ப் பாதையினுள் போய் இன்ஃபெக்ஷனை உண்டாக்குகின்றன.

ரொம்ப நேரம் நம்பர் ஒன் போகாமல் அடக்கி வைத்தாலும் இன்ஃபெக்ஷன் வரும்.  சிலர் பேருந்து மற்றும் ரயில் பயணங்களில் பல மணி நேரம் கூட நம்பர் ஒன் போகாமல் இருப்பார்கள்.  இந்தச் சந்தர்ப்பங்களில் சிறுநீர் நிறையச் சேர்ந்துபோய், உள்ளேயே தங்குவதால் பாக்டீரியா உருவாகிறது.  முக்கியமாக பள்ளிச் சிறுமிகள் இதுமாதிரி இன்ஃபெக்ஷனால் அவதிப்படுகிறார்கள்.

ஒருமுறை ஒரு சிறுமிக்கு அடிக்கடி காய்ச்சல் வந்துகொண்டே இருந்தது.  என் மனைவியிடம் (டாக்டர் தமிழிசை) வந்த அந்தச் சிறுமியின் காய்ச்சலுக்கு யூரினரி இன்ஃபெக்ஷன்தான் காரணம் என்பது பரிசோதனையில் தெரிந்தது.

அந்த சிறுமியிடம் ‘ நீ ஒரு நாளைக்கு எத்தனை முறை நம்பர் ஒன் போவே?’ என்று கேட்டு இருக்கிறார் என் மனைவி.  பதில் சொல்லவே தெரியவில்லை அந்தச் சிறுமிக்கு.  காலை எழுந்ததும் ஒரு முறை. . . மாலையோ, இரவோ ஒருமுறை சிறுநீர் போவாளாம்.  அதுவும் வலியில் அடிவயிற்றைப் பிடித்துக் கொண்டு அப்படியே குனிந்து கஷ்டப்பட்டுப் போவாளாம்.

மாத்திரைகள் கொடுத்துவிட்டு, “நிறைய தண்ணி குடிக்கணும், எப்போ நம்பர் ஒன் வந்தாலும் உடனே போகணும்” என்று சொல்லியிருக்கிறார் என் மனைவி.  அந்தச் சிறுமியோ, தண்ணி குடிச்சா நிறைய உச்சா வரும்.  எங்க ஸ்கூல் டாய்லெட் நாற்றமடிக்கும்.  அங்கே உச்சா போக மாட்டேன், போகவே மாட்டேன் என்று திரும்பத் திரும்ப அழுத்தம் திருத்தமாகச் சொல்லி இருக்கிறாள்.

பள்ளி நிர்வாகம், தங்கள் வகுப்பறைகளுக்குத் தரும் முக்கியத் துவத்தில் கால்வாசியைக்கூட கழிப்பறைக்கு தருவதில்லை என்பது கசப்பான உண்மை.  பிரபலமான பள்ளிகளே மாணவிகளுக்கான கழிப்பறையை மாற்றாந்தாய் கண்ணோட்டத்தில் தான் வைத்திருக்கின்றன.

இவை தவிர, பெண்கள், கருத்தடைச் சாதனங்களை உபயோகிக்கும்போதும் இன்ஃபெக்ஷன் ஆகும்.  புதிதாகத் திருமணமான பெண்களுக்கு யூரினரி இன்ஃபெக்ஷன் ஏற்படும்.


Spread the love