தேவையில்லா முடி வீட்டு வைத்தியம்

Spread the love

பெண்களுக்கு தேவையற்ற இடங்களில் முடி வளர்தல் மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்துகின்றது. சில பெண்களுக்கு காதின் பின்பக்கம், கன்னம், மீசை, தாடையின் கீழ் உதடு ஆகிய பகுதியில் அதிகப்படியான முடி வளர்ந்திருக்கும். சில சமயங்களில் சருமத்தில் கருமையான கரடு முரடான முடிகள் வளர்ந்து காணப்படும். இதற்கு ஹிர்சுட்டிசம் என்று பெயர்.

நம் சருமங்களில் தேவையற்ற முடிகள் ஹார்மோன் சமநிலையின்மையால் ஏற்படுகின்றது. இது அழகை விரும்பும் பெண்களுக்கு பெரிய பிரச்சனையாக உள்ளது. உலகிலேயே 5 முதல் 10 சதவிகிதம் பெண்கள் முடிமிகைப்பால் பாதிக்கப்படுகின்றனர்.
நம் முகத்திலோ அல்லது கை, கால், வயிறு பகுதியிலோ வளரும் தேவையற்ற முடிகளை இயற்கையாக மிகவும் எளிமையான முறையில் அகற்ற வீட்டு வைத்திய முறை சிறந்ததாகும். இவற்றைப் பற்றி பார்க்கலாம்.

தேவையற்ற இடங்களில் முடி வளரக் காரணங்கள்

நம் உடலில் குறைந்த அளவில் காணப்படும் டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் அதிகரிப்பதால், ஆண்கள் போன்று அதிக அளவில் முடி வளர்கிறது.
டெஸ்டோஸ்டிரோன் பெண்களில் பிட்யூடரி அட்ரீலின் சுரப்பிகளின் கோளாறுகளால் அதிகமாகலாம். இந்த ஹார்மோன்களே பெண்களுக்கு தேவையற்ற இடங்களில் முடி வளர்வதற்கும், ஆண்களில் வழுக்கை உண்டாவதற்கும் காரணமாகிறது.
கர்ப்பப்பை ஓவரிஸ் வரும் நார்கட்டிகள், ஒவ்வாமை தொற்று நோய்கள் என்ஜைம் குறைபாடுகள், ஹார்மோன் கோளாறுகள் முக்கிய காரணமாகும்.

வீட்டு சிகிச்சை முறை

கஸ்தூரி மஞ்சளுடன் பால் கலந்து முகத்தில் தேவையற்ற முடிகளின் மீது தடவி அரைமணி நேரம் சென்ற பின் கழுவி வரலாம். இது நல்ல பலனைத் தரும்.
நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் கோரைக் கிழங்கு பொடி, பூலாங்கிழங்கு பொடி, குப்பைமேனி இலை பொடி, கஸ்தூரி மஞ்சள் பொடி இவற்றை சம அளவு சேர்த்து நன்கு கலந்து பயன்படுத்தலாம்.

இதனை சிறிதளவு எடுத்து நீர் சேர்த்து ஒன்றாக கலந்து முகத்தில் தடவவும். நன்கு காய்ந்ததும் தண்ணீர் தடவி துடைத்து எடுக்கவும். இதனுடன் கோதுமை தவிடும் சேர்த்துக் கொள்ளலாம். இதனை ஒரு மாதம் வரை தொடர்ந்து செய்து வர முடி வளர்ச்சி குறைந்து இருப்பதை காணலாம்.

கோரைக்கிழங்கு மற்றும் கஸ்தூரி மஞ்சள் ஒரு பங்கு, அம்மான்பச்சரிசி பாதி பங்கு இவற்றை ஒன்றாக சேர்த்து பொடியாக்கவும். இதனை தண்ணீரில் குலைத்து தேவையில்லா முடி உள்ள இடங்களில் பூசி அரைமணி நேரம் கழித்து கழுவ நல்ல பலனை காணலாம்.

அம்மான்பச்சரிசி சிலருக்கு அலர்ஜியை ஏற்படுத்தலாம். இதனை ஒரு முறை பயன்படுத்தி சருமத்திற்கு ஏற்றதா என ஆராய்ந்து தொடர்ந்து பயன்படுத்தவும்.

எலுமிச்சை பழம்

வெது வெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு மற்றும் சர்க்கரை சேர்த்து நன்கு கலந்து அதனை தேவையற்ற முடி வளரும் இடங்களில் ஸ்கிரப் போன்று தேய்க்கலாம். இதனை 10 நிமிடங்களுக்கு ஒரு முறை என அரை மணி நேர இடைவெளியில் மீண்டும் தேய்க்கவும். பின் அரை மணி நேரம் கழித்து காட்டனை நீரில் நனைத்து முடியின் மீது வைத்து அழுத்தி துடைத்து எடுக்க முடிகள் உதிரும். இது முடியின் வளர்ச்சியை மட்டுப்படுத்துகிறது.

கோதுமை மாவு

கோதுமை மாவினை தண்ணீரில் கலந்து தேவையற்ற முடி வளரும் இடத்தில் தடவவும். பின் எதிர் திசையில் ரப் செய்வதினால் மெதுவாக முடி உதிர்ந்து, முடி வளர்ச்சி தடுக்கப்படுகிறது. இது பழங்காலத்தில் பின்பற்றி வரும் முறையாகும்.

பப்பாளி

இயற்கையாகவே பப்பாளியில் முடியை அகற்றும் என்சைம்கள் நிறைந்துள்ளது. இதனை சருமத்தில் முடி உள்ள இடத்தில் தொடர்ந்து தடவி வர நல்ல பலனைக் காணலாம்.

சோற்றுக் கற்றாழை

சோற்றுக் கற்றாழையுடன் கருப்பட்டி சேர்த்து சாப்பிடலாம் அல்லது ஜூஸாக தயாரித்து குடிக்கலாம். இதனால் ஹார்மோன் சமநிலையடைந்து தேவையற்ற முடிகள் வளர்வது தடுக்கப்படும்.

இயற்கை குளியல் பொடி

தேவையற்ற முடிகளை அகற்ற இயற்கையான குளியல் பொடி மற்றும் பேஸ் மாஸ்க் தயாரித்து உபயோகிக்கலாம்.

குளியல் பொடி

தேவையான பொருட்கள்

பச்சை பயிறு – 250 கிராம்
கஸ்தூரி மஞ்சள் – 100 கிராம்
வெட்டி வேர் – 100 கிராம்
சீமை கிச்சிலிக் கிழங்கு – 100 கிராம்
கோரைக்கிழங்கு – 100 கிராம்
விலாமிச்சை வேர் – 100 கிராம்

செய்முறை

பச்சை பயிரை வெயிலில் உலர வைத்து அதனுடன் மேற்கூறிய பொருட்கள் அனைத்தையும் சேர்த்து நன்கு அரைத்து பொடியாக்கவும். குளியல் பொடி தயார்.
இதனை தேவையில்லா முடி உள்ள இடங்களில் தடவி அரை மணி நேரம் சென்ற பின் நல்ல நீரில் கழுவவும். இவ்வாறாக தொடர்ந்து ஆறு மாதம் வரை செய்து வர முடியின் வளர்ச்சி குறைந்து முடிகள் உதிர்ந்திருப்பதை காணலாம்.

கிரீம் மாஸ்க்

தேவையான பொருட்கள்


பால் – 5 தேக்கரண்டி
வெள்ளை பற்பசை
[டூத் பேஸ்ட்] – ஒரு தேக்கரண்டி
கடலை மாவு – 2 டீஸ்பூன்

செய்முறை

மேற்கூறிய மூன்று பொருளையும் ஒன்றாக கலந்து தேவையற்ற முடி உள்ள இடங்களில் தடவவும். அரைமணி நேரம் சென்ற பின் சிறிய அளவில் காட்டனை எடுத்து முடியின் எதிர்ப்பக்கத்தில் மெதுவாக தேய்த்து சுத்தமான நீரில் முகத்தை கழுவவும். நன்கு கழுவியதும் சருமத்தில் மாய்ஸ்சுரைசரை பயன்படுத்தவும். இம்முறை தேவையற்ற முடிகளை எளிதில் அகற்ற உதவுகிறது.

முட்டை மாஸ்க்


முகத்தில் உள்ள தேவையற்ற முடியை நீக்க முட்டை மாஸ்க் மிகச்சிறந்ததாகும். இதனை வாரத்திற்கு இரண்டு முறை பயன்படுத்தி வர நல்ல பலனை காணலாம்.

செய்முறை


ஒரு முட்டையின் வெள்ளைக்கரு, சர்க்கரை மற்றும் சோள மாவு ஒரு டேபிள் ஸ்பூன் இவற்றை ஒன்றாக கலந்து முகத்தில் தடவி 20 நிமிடங்கள் ஊற வைக்கவும். பின் குளிர்ந்த நீரில் கழுவி வர சருமத்தில் உள்ள தேவையற்ற முடிகள் மற்றும் அழுக்குகள் நீங்கும். இதனை வாரத்திற்கு இரு முறை செய்யலாம்.
தேவையற்ற முடிகளை அகற்ற இயற்கை முறையே மிகச்சிறந்ததாகும். செயற்கை முறையில் பயன்படுத்தும் அழகுப் பொருட்கள் தற்காலிகமான தீர்வு மட்டுமே . இதனால் முடி வளர்ச்சி கட்டுப்படுவதில்லை.

ஆயுர்வேதம்.காம்


Spread the love