அல்சர் ஆகாரம்

Spread the love

அல்சர் எனும் வயிற்றுப்புண் அது தோன்றும் இடத்தைப் பொருத்து 2 வகையாக சொல்லப்படுகிறது. வயிற்றுப்புண் இது வயிற்றில் தோன்றுவது டியோடினம் புண் (சிறுகுடலிலிருந்து வயிற்றுக்கு வரும் பாகம்)

இரண்டு அல்சர்களையும் சேர்த்து குறிப்பிடும் வார்த்தை பெப்டிக் அல்சர் பெப்டிக் அல்சர் ஜீரணமண்டல அவயங்களின் சுவரில் உண்டாகும் ஒரு புண். நடுத்தர வயதிலிருப்பவர்களுக்கு அல்சர் வருவது இன்று சகஜமாகிவிட்டது. இன்றைய பரபரப்பான வாழ்க்கை சூழ்நிலையில், வயிற்றுப் புண் ஒரு அன்றாட பிரச்சனையாகிவிட்டது.

காரணங்கள்

ஹெலிகோபேக்டர் பைலோரி என்ற பாக்டீரியா. இதைக் கண்டுபிடித்த மார்ஷல் மற்றும் வாரன் என்ற டாக்டாக்களுக்கு சூழ்நிலை, குடிநீர், உணவுப் பொருட்களால் பரவுகிறது. குடலில் மேற்பரப்பின் உள்ள மியூகோஸா படலம் என்ற சவ்வு நாள்பட்ட, எரிச்சல் உண்டாக்கும் அதிக அமில சுரப்பினால் பாதிக்கப்பட்டு, அங்கங்கே சிதைந்து விடும். அதிக அமில சுரப்பு மற்றும் பெப்சின் (ஜீரண என்சைம்) சுரப்பினாலும், காரமான மசாலா மற்றும் பொரித்த உணவுகளாலும் புண்கள் தோன்றும். வயிற்று “லைனிங்கில்” ஓட்டை ஏற்பட்டு புண்கள் உருவாகும்.

முக்கிய காரணம் ‘ஹர்ரி’ அவசரம், டென்ஷன், பதற்றம், ‘வொர்ரி’ கவலை, பொறாமை, ‘கர்ரி’. காரசாரமான உணவு, மசாலா அதிக அமிலத்தை சுரக்க வைத்து, புண்களை உண்டாக்கும்.

ஆஸ்பிரின், இபு புரோஃபென், நேப்ரோசென் மற்றும் இதர அழற்சிக்காக கொடுக்கப்படும் மாத்திரைகள் ஜீரணமண்டலம் பாதை, வயிறு முதலியவற்றை பாதிக்கும். மது அருந்துதல், புகைபிடித்தல் அதிகமாக டீ, காப்பி குடிப்பது.

தவறான உணவுப்பழக்கங்கள், நேரம் காலமின்றி உண்பது, அசுத்தமான பழக்கங்கள் கை கழுவாமல் உணவு உண்பது, நகத்தை கடிப்பது.

அறிகுறிகள்

இரப்பை (வயிறு) அல்சர்

வயிற்றெரிச்சல், (நெஞ்செரிச்சல்), வயிறு மந்தம், வாயுக்கோளாறு,

அஜீரணம், வயிறுஉப்புசம்

வயிற்றில் மேல்புறத்தில் வலி அல்லது சங்கடம். சாப்பிட்டால் வலி உண்டாகும்

வாந்தி ஏப்பம், குமட்டல், மேல்வயிற்று வலி அல்சரின் முக்கிய அறிகுறி, இது இல்லாமலும் அல்சர் உருவாகலாம்.

டியோடினல் அல்சர்

நெஞ்செரிச்சல், வாயுக்கோளாறு

வலி வயிறு காலியானால் ஏற்படும். சாப்பிட்டவுடன் வலி குறையும்

அஜீரணம்

வாந்தி அநேகமாய் இருக்காது.

மேல்வயிற்று வலி அல்சரின் முக்கிய அறிகுறி, இது இல்லாமலும் அல்சர் உருவாகலாம்.

உணவு, வாழ்நிலை மாற்றங்கள்

குளிர்ந்த பால் அல்சரால் வரும் வயிற்று எரிச்சலுக்கு நல்லது. ஆனால் அல்சருக்கு பால்குடிப்பது தற்போது சர்ச்சைக்குரியதாகிவிட்டது. பால் அமிலத்தை கிளப்பிவிடும் என்பது தற்போதைய (சில) நிபுணர்களின் கருத்து. பால் குடித்தால் உங்களுக்கு நெஞ்செரிச்சல் குறைந்தால், பாலை எடுத்துக் கொள்ளவும்.

உங்கள் உணவில் நெய் சேர்த்துக் கொள்ளவும். நோயாளிக்கு நெய் ஜீரணமாகவிட்டால் வெந்நீருடன் சேர்த்து கொடுக்கவும். இரண்டு மூன்று வாழைப்பழங்கள் பாலுடன் கொடுத்தால் நல்லது. வாழைப்பழம் அதிக அமிலத்தை சரிப்படுத்தும். மஞ்சள் வாழைப்பழத்தை விட பச்சை வாழைப்பழம் சிறந்தது.

நெல்லிக்காய் சாறை சர்க்கரையுடன் சேர்த்து குடிக்க பலனளிக்கும். வில்வ இலைகள் / பழங்கள் – இவற்றை சேர்த்து கொண்டால் வயிற்றுப்புண்கள் குணமாகும்.

250 கிராம் முட்டைக்கோசை 500 மி.லிட்டர் தண்ணீரில் கொதிக்க வைக்கவும். தண்ணீர் பாதியளவு ஆனதும் அடுப்பிலிருந்து இறக்கி குளிர வைக்கவும். இதை கேரட் சாறுடன் சேர்த்து பருகினால் அல்சர் குணமடையும்.

பாதாம் பால் (தோலுரிக்கப்பட்ட பாதாம் பருப்புகளால் செய்வது) அல்சருக்கு நல்லது. உடைத்த அரிசியை, ஒரு பாகத்திற்கு 14 பாகம் தண்ணீர் சேர்த்து கஞ்சி தயாரிக்கவும். இது அல்சருக்கு நல்லது. பருப்பு, அரிசி தண்ணீர் சேர்த்து பொங்கல் போல் தயாரித்து உட்கொள்ளலாம்.

மாதுளம் பழச்சாறு அல்சருக்கும் நல்லது.

திரிபாலா சூரணம் (ஒரு தேக்கரண்டி) நெய் ஒரு தேக்கரண்டி மற்றும் தேன் 1/2 தேக்கரண்டி கலந்து எடுத்துக் கொண்டால் அல்சர் குணமாகும்.

கொத்தமல்லி விதைகளை பொடியாக அரைத்துக் கொள்ளவும். ஒரு பாகத்திற்கு 6 பாகம் தண்ணீர் என்ற அளவில் கலந்து கொதிக்க வைக்கவும். இரவு ஊற வைத்து மறுநாள் காலையில் இந்த நீரை வடிகட்டி வெறும் வயிற்றில் குடிக்கவும்.

உங்களுக்கு அல்சர் இருந்தால் உளுந்து, கொள்ளு, மதுபானங்கள், சிகரெட், கத்திரிக்காய், மசாலா கலந்த காரசாரமான உணவு இவற்றை தவிர்க்கவும்.

உண்ணும் போது கோபம், தாபம், வருத்தங்களை தவிர்க்கவும்.

ஒரே வேளையாக அதிகம் உண்பதை தவிர்த்து, இடைவெளி விட்டு சிறிதாக உட்கொள்ளவும்.

குறைந்த அளவில் அடிக்கடி உண்பது நல்லது. காரசாரமான உணவை தவிர்க்கவும். நார்ச்சத்து அதிகமுள்ள உணவுகளை சேர்த்துக் கொள்ளவும். நார்ச்சத்து வயிற்றின் உட்புறம் உள்ள சளிப்படலத்தை வலுப்படுத்தக் கூடியது. நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகள் மற்றும் தீட்டப்படாத அரிசி, கோதுமை முதலியவற்றை உண்ணும் போது அந்த சளிப்படலம் வலிவடைந்து மீண்டும் வயிற்றுப்புண் வருவதை தடுக்கிறது.

எவ்வகை மருத்துவம் செய்தாலும் வயிற்றுப்புண் மீண்டும் மீண்டும் வராமல் பார்த்துக் கொள்வது மிகவும் அவசியம். வயிற்றுப்புண் மருத்துவம் செய்தவுடன் எளிதாக ஆறிடும் ஆனால் அதுவே உணவுப்பழக்க வழக்கங்கள் முறையாக இல்லையெனில் மீண்டும் ஏற்பட்டு தொல்லையைத் தரும். எனவே மீண்டும் தாக்காமல் பார்த்துக் கொள்ள மிக மிக அவசியம் உணவு முறை மாற்றம்.

காரம், மசாலா, எண்ணெய், புளிப்பு, காபி, டீ போன்றவற்றைக் குறைத்து, புகை, மது நீக்கி, நேராநேரத்திற்கு குறைவான அளவு எளிதாக ஜீரணமாகக் கூடிய உணவுகளை உண்டு தக்க மருத்துவம் செய்து வந்தால் வயிற்றுப்புண்ணை எளிதாக ஆறிடச் செய்யலாம் மீண்டும் வராமலும் பார்த்துக் கொள்ளலாம்.

வயிற்றுப்புண்ணை ஆற்றும் வெள்ளரி சூப்

தாதுப் பொருட்கள் அதிகம் நிறைந்தது வெள்ளரி அதில் முக்கியமானவை பொட்டாஷியம். மென்கீஷியம், சல்ஃபர், சிலிகான், குளோரின் ஃபுளோரின் ஆகும். வெள்ளரி அதிக நீர்ச்சத்தும் நார்ச்சத்தும் கொண்டது. கோடையில் வெள்ளரி தாகத்தை தணிக்கும். வெள்ளரியில் கலோரி குறைவாக இருப்பதால் இது உடல் எடையைக் குறைக்க அருமையான மருந்து.

நீழிழிவு நோயாளிகளும் கொலஸ்ட்ரால் அதிகம் உடையவர்களும் இதனை தாராளமாக உண்ணலாம். வெள்ளரி உடலின் உள்ளே உள்ள நீர்ச்சத்தை மேம்படுத்துகின்றது. வெள்ளரி 65% காரத்தன்மை கொண்டது. ஆகவே, வயிற்றுப்புண் உடையவர்கள் இதனை சாறு பிழிந்தும் உண்ணலாம். அல்லது, சமைத்தும் சாப்பிட காரத்தன்மை பெருகி அமிலத் தன்மை போக்கி வயிற்றுப்புண்ணை ஆற்றிடும் வயிற்று எரிச்சல், நெஞ்செரிச்சல், வாய்வுத் தொல்லை போன்றவை விலகும்.

வெள்ளரியை பச்சையாகத்தான் சாப்பிட்டு பழகி இருப்பீர்கள். ஒரு மாறுதலுக்காக சூப்பாக செய்து சாப்பிட்டுப் பார்க்கலாமே.

வெள்ளரி சூப்

தேவையான பொருட்கள்

வெள்ளரி – 1 (சிறு துண்டுகளாக நறுக்கியது)

வெங்காயம் – 1 (சிறு துண்டுகளாக நறுக்கியது)

வெண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்

தயிர் – 2 கப் (புளிப்பில்லாதது)

உப்பு, மிளகு, சீரகம் – தேவைக்கேற்ப

கோழி கறி, காய் அவித்த நீர் – 3 கப்

கொத்தமல்லி – 1 கொத்து (நறுக்கியது)

செய்முறை

வெண்ணெய்யை வாணலியில் இட்டு வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கவும். வெள்ளரித்துண்டுகளைப் போட்டு சிறிது வேக விட்டு காய் வேக வைத்த நீரை விட்டு மிதமான சூட்டில் 15 நிமிடங்கள் கொதிக்க விட்டு பின்பு ஆறிய பின்னர் மிக்ஸியிலிட்டு அரைத்து அத்துடன் தயிர், உப்பு, மிளகு, சீரகம் போன்றவற்றை சேர்த்து அதனை சிறிது அடுப்பில் வைத்து வேக வைத்து பின்னர் கொத்தமல்லி இலையை தூவி சூடாக பரிமாறிட வெள்ளரி சூப் ரெடி.

உணவு நலம் ஆகஸ்ட் 2010

அல்சர், ஆகாரம், வயிற்றுப்புண், டியோடினம், பெப்டிக் அல்சர், ஜீரணமண்டலம், காரணங்கள், ஹெலிகோபேக்டர் பைலோரி, பாக்டீரியா, குடல், மியூகோஸா படலம், பெப்சின், டென்ஷன், கவலை, பொறாமை, ஆஸ்பிரின், இபு புரோஃபென், நேப்ரோசென், மாத்திரைகள், ஜீரணமண்டலம் பாதை, மது அருந்துதல், புகைபிடித்தல், வயிற்றெரிச்சல், நெஞ்செரிச்சல், வயிறு மந்தம், வாயுக்கோளாறு, அஜீரணம், வயிறு உப்புசம், வெள்ளரி, சூப், செய்முறை, வெள்ளரித்துண்டுகள், தயிர், உப்பு, மிளகு, சீரகம்.


Spread the love