ஜலவர்க்கம்

Spread the love

“வானத்திலிருந்து பொழியும் நீர் தான் பூமியின் எல்லா நீர்களுக்கும் ஆதாரம்” – சரகஸம்ஹிதை.

மனிதர்களின் அமிர்தம் நீர். நீரின்றி உலகமில்லை. நம் நாட்டில் நீர் தரும் நதிகளை தாயாக, தெய்வமாக வணங்குவது மரபு. “நடந்தாய் வாழி காவேரி” என்று காவேரி நதியை போற்றுகிறார் இளங்கோ அடிகள் சிலப்பதிகாரத்தில். புகழ் பெற்ற உலக நாகரிகங்கள், நதிக் கரைகளில் தோன்றியவை.

கி.மு, 6 ம் நூற்றாண்டில் வாழ்ந்த சரகரால் தொகுக்கப்பட்ட வைத்திய நூலான “சரகசம்ஹிதையில்” நீரின் அருமை பெருமைகள் விளக்கப்பட்டிருக்கின்றன.

ஆயுர்வேதத்தின் அடிப்படை தத்துவங்கள் பஞ்சபூத தத்துவம் மற்றும் த்ரிதோஷ தத்துவம். பஞ்ச பூதங்களில் ஒன்று நீர். நீரையும் நிலத்தையும் சேர்த்து “கப” தத்துவமாக சொல்கிறது ஆயுர்வேதம். உணவுப் பொருட்களை சரகசம்ஹிதை 12 பிரிவுகளாக சொல்கிறது. அவற்றில் ஒரு பிரிவு ‘ஜலவர்க்கம்’-நீர்.

வானிலிருந்து பொழியும் எல்லா வகை நீரும் ஒரே விதமாகத் தான் வருகிறது. ஆனால் அது எந்த இடத்தில் விழுகிறதோ அல்லது தங்குகிறதோ, அந்த நிலத்தை பொறுத்து நீரின் தன்மையும், குணமும் மாறும். வானத்திலிருந்து வரும் போதே கூட மழை நீர் சில மாறுதல்களை அடையலாம்.

மழை நீர்

மழை நீர் குளிர்ச்சியானது, தூய்மையானது, சுவையானது, அறுசுவைகளுடையது. மழை பூமியை அடையும் முன்பு அதை சுத்தமான பாத்திரங்களில் ஏந்தி, பிடித்து வைத்துக் கொண்டால் பல நாட்களானாலும் கெடாது. நல்ல மழைக்காலத்தில் மழை பெய்த 15 நிமிடங்கள் கழித்து, வாயகன்ற சுத்தமான பாத்திரங்களில், வெள்ளைத் துணி போட்டு மூடி, மழைத் தண்ணீர் பெய்யுமிடத்தில் வைத்து ஜலத்தை சேகரிக்க வேண்டும். இந்த நீரை, ஜுரம், உடல் எரிச்சல், நீர்ச்சுருக்கு, முதலிய நோய்களின் போது, நோயாளிக்கு பருக கொடுக்கலாம். குறிப்பாக பூச நட்சத்திரத்தில் மழை நீரை சேகரிப்பது சிறந்தது. பூச நட்சத்திரம் நீரைத் தெளிய வைக்கும் என்பார்கள். வெள்ளி, தங்கம் போன்ற சுத்தமான பாத்திரங்களில் பிடித்து வைத்த மழை நீர் சிறந்தது. இதை ‘ஐந்த்ரம்’ என்பார்கள்.

மழை சில சமயங்களில் “ஆலங்கட்டி” மழை என்று பனிக்கட்டிகளாக பொழியும். இது கோடை காலத்தில் ஏற்படும். சூர்ய வெப்பத்தினால் மேற் கிளம்பும் நீரின் ஆவி (நீராவி), அங்கு அதிக குளிர்ச்சியால் பனிக்கட்டியாக உறைந்து விடும். மறுபடியும் வெய்யிலினால் உருகி, பனிக்கட்டிகளாக, ஆலங்கட்டி மழையாக பொழிகிறது. இந்த பனிக்கட்டி நீரை சேர்த்து, வடிகட்டி பெண்களின் மாதவிடாய் கோளாறுகளுக்கு மருந்துகளுடன் அனுபானமாக கொடுக்கலாம். விக்கல் நிற்கும். கண்ணெரிச்சல், மயக்கம், உடல் வெப்பம் முதலியன தணியும்.

மழை நீர் பருவ காலத்திற்கு ஏற்றவாறு மாறும்.

1.       வர்ஷா ருது (ஆவணி – புரட்டாசி) – மழை நீர் இனிப்பு சுவையும், குரு குணமும் உடையது. கபத்தை உண்டாக்கும்.

2.       சரத் ருது (ஐப்பசி – கார்த்திகை) – மழை நீர் லகுவாக இருக்கும். கபத்தை தோற்றுவிக்கும்.

3.       சிசிர ருது (மாசி – பங்குனி) – புது நீர் எண்ணைப் பசை உடையது. ஆண்மையை வளர்க்கும். வலுவூட்டும்.

4.       வசந்த ருது (சித்திரை – வைகாசி) – துவர்ப்பு, இனிப்பு சுவைகளுடனிருக்கும். வறட்சித் தன்மையுள்ளது.

5.       கிரீஷ்ம ருது (ஆனி – ஆடி) – இந்த பருவத்து நீர் கபத்தை உண்டாக்காது.

6.       ஹேமந்த ருது (மார்கழி – தை) – லகுவான நீர், மென்மையான உடலமைப்பு உள்ளவர்களுக்கு ஏற்ற நீர்

ஆற்று நீர்

முன்பெல்லாம் ஆடிப்பிறப்பின் போது காவேரியில் நீர் பெருக்கெடுத்து வரும். மழைக்காலத்தில் பெருக்கெடுத்து வரும் ஆற்றின் புது நீர், உடனே உபயோகிக்க தகுந்ததல்ல. புழு, பாம்பு, எலி, இவற்றால் ஆற்று நீரின் புதுப்பெருக்கு அசுத்தமடைந்திருக்கும். இதை உணர்ந்த நமது முன்னோர்கள், ஆற்றின் புது நீரின் அசுத்தங்கள் நீங்க, 18 நாட்கள் தேவைப்படும் என்று கருதி ஆடிப்பதினெட்டை திருவிழாவாக கொண்டாடி, அன்றிலிருந்து ஆற்று நீரை உபயோகிக்க தொடங்கும் பழக்கத்தை உண்டாக்கினார்கள்.

தண்ணீர் நமது அத்யாவசிய தேவை தான். ஆனால் நீரினால் பல நோய்களும் உண்டாகின்றன. காரணம் தண்ணீர் வந்தாரை வாழ வைக்கவும். அதாவது பல கிருமிகளுக்கு புகலிடம் கொடுக்கும். மண் வாடையுடன் வரும் நீர் காலரா, பேதி முதலிய வயிற்றுக் கோளாறுகளையும், குளிர் ஜுரம், விஷ ஜுரம், சரும நோய்கள் இவற்றை உண்டாக்கும்.

எனவே புதிய ஆற்று நீரை தெளிய வைத்து காய்ச்சி குடிப்பது நல்லது.

குடிநீரை சுத்தமாக்க, படிக்காரத்தை 5 லிருந்து பத்து அரிசி அளவு ஒரு குடம் தண்ணீரில் போட்டால், நீர் தெளியும். விளாமிச்சை வேரையும் உபயோகிக்கலாம். தேற்றான் விதையை (Strychnos Potatorum) தண்ணீரில் உரைத்து கரைத்தால் அந்த தண்ணீர் தெளிந்து விடும். ஒரு குடத்திற்கு ஒரு தேற்றான் விதையின் சம பங்கு கரைத்தாலே போதும். தேற்றான் விதை வயிற்றுக்கு நல்லது. நல்ல ஆரோக்கியத்தை தரும். “தேற்றான் கொட்டையிட்டுத் தேற்று மைந்தரை” என்கிறது சித்த நூல்.

இவை தவிர கிணறு, குளம், ஏரி, பூமியடி நீர், ஊற்று நீர்களும் தண்ணீர் தேவைக்கு உதவுகின்றன. பூமியின் ஆழத்திலிருந்து வரும் நீர் தூய்மையானதே. மற்றபடி ஏரி, குளம் இவற்றின் தண்ணீரை சுத்தம் செய்யாமல் உபயோகித்தால் நோய்கள் வரலாம். குடிநீரை காய்ச்சிக் குடிப்பது தான் முறை, அதுவும் பருவமழை. தாமதமானால் அல்லது குறைந்தால் ஆறு, நீர்த்தேக்கங்களில் உள்ள நீர் குறைந்து அசுத்தமடைகிறது. வயிற்று நோய்கள் பெருகும்.   

வெளிநாடுகளில், தண்ணீரையே குடிக்காமல் சிலர் வாழ்கின்றனர். உதாரணமாக ஃபிரான்சில் பல பேர்கள் “ஒயினை” தண்ணீருக்கு பதிலாக குடிக்கின்றனர். நமது நாட்டில் தனியாக நீரைக் குடிப்பது தொன்று தொட்டு வரும் பழக்கம்.


Spread the love