பிராணாயாமம்

Spread the love

மூச்சைகட்டுப்படுத்தும் கலை – 2  அனுலோமா – விலோமா பிராணாயாமா

செய்முறை

உட்காரும் யோகாசன நிலைகளில் எதில் வேண்டுமானாலும் உட்காரவும். உடலை நேராக நிமிர்த்தி உட்கார வேண்டும். கைகளை முழங்கால்கள் மீது வைத்துக் கொள்ளவும்.

இரண்டு நாசி துவாரங்களால் மூச்சை நிதானமாக, முழுமையாக வெளியிடவும்.

பிறகு உடனடியாக அடிவயிற்றுத் தசைகளை இயக்கி மூச்சை உள்ளிழுக்கவும். மூச்சை உள்ளிழுக்கும் பொழுது எந்த சப்தமும் எழாமல் பார்த்துக் கொள்ளவும்.

பிறகு மூச்சை உடனே வெளியே விடவும். மூச்சை அடக்கிக் கொள்ளக் கூடாது.

உஜ்ஜை பிராணாயாமா

பத்மாசனம் (அ) வஜ்ராசனம் போன்ற உட்காரும் நிலை யோகாசனங்களில் உட்கார்ந்து கொள்ளவும்.

நுரையீரலிலுள்ள காற்றை இரண்டு நாசிகளின் வழியே வெளியே விட்டு பிறகு உள்ளிழுத்துக் கொள்ளவும். உள்ளிழுத்து கொள்ளும் நேரம் மூன்றிலிருந்து நான்கு விநாடிகளாக இருக்க வேண்டும். அடிவயிற்று தசைகளை பயன்படுத்தி மூச்சை உள்ளிழுக்க வேண்டும். உள்ளிழுத்த பின் மூலபந்தத்தை செய்யவும். இதை ஆசனவாயை சுருக்கி செய்ய வேண்டும். அதே சமயம் நுரையீரலில் மூச்சை நிறுத்திக் கொள்ள வேண்டும். இந்த மூச்சு நிறுத்துவதை ஜலாந்தர பந்தத்தின் மூலம் (முகத் தாடையை மார்பில் அழுத்தி) செய்ய வேண்டும். 10 (அ) 15 விநாடிகள் கும்பக நிலையில் மூச்சை நிறுத்த வேண்டும்.

நிதானமாக உஜ்யான பந்தாவை செய்து மூச்சை வெளியிட்டு பந்தங்களில் இருந்து வெளிவர வேண்டும். மூச்சை விடுவது 8 லிருந்து 10 விநாடிகள் செய்ய வேண்டும். மூச்சை வெளியிடுவது இடது நாசி மூலம் செய்ய வேண்டும். அப்பொழுது வலது நாசியை வலது கை கட்டை விரலால் மூடிக் கொள்ள வேண்டும். ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள் – உஜ்ஜையினி பிராணாயாமத்தில் எப்பொழுதும் மூச்சை உள்ளிழுப்பது இரண்டு நாசிகளாலும், மூச்சை வெளிவிடுவது இடது நாசியால் மட்டுமே செய்யப்பட வேண்டும்.

பலன்கள்

உஜ்ஜையினி பிராணயாமம் நரம்பு மண்டலத்தை சீராக வைக்கிறது.

உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு பிராணாயாமம் செய்வது நல்லது.

ஆஸ்துமா, இருமல் மற்ற சுவாச மண்டல கோளாறுகளுக்கு இந்த பிராணாயாமம் பலனளிக்கும்.

சூரிய பேதன பிராணாயாமா

சூரியா என்றால் சூரியன் பேதனா என்றால் திறப்பது.

செய்முறை

வஜ்ராசனம் போன்ற சௌகரியமான ஆசன நிலையில் உட்காரவும். இந்த ஆசனத்தில் நன்றாக முழுமையாக மூச்சை வெளிவிட வேண்டும். பிறகு இடது நாசியை இடது கை கட்டை விரலால் மூடிக் கொண்டு வலது நாசியால் மூச்சை உள்ளிழுக்கவும். உள்ளிழுப்பது முடிந்தவுடன் மூல, ஜலாந்தர பந்தங்களை செய்யவும். இவற்றை செய்யும் பொழுது வலது நாசியை இடது கையில் நடுவிரலால் மூடிக் கொள்ள வேண்டும். இதனால் மூச்சு நிலைபெற்றிருக்கும். 15 லிருந்து 20 விநாடிகள் மூச்சை நிலை நிறுத்தினால் போதுமானது. மெதுவாக பந்தங்களை விடுவிக்கவும். பிறகு வலது நாசி வழியாக 8 விநாடிகள் மூச்சை வெளிவிடவும். இது ஒரு சுழற்சி இந்த சுழற்சியை 10 முறை செய்யவும்.

பலன்கள்

இந்த பிராணாயாமத்தில் உடலின் உஷ்ண நிலை கட்டுப்படுத்தப்படுகிறது. எனவே நரம்பு மண்டலமும், ஜீரண மண்டலமும் சீராக வைக்கப்படுகின்றன.

ஜலதோஷம், தலைவலி, தொண்டைவலி முதலிய சுவாச மண்டல கோளாறுகள் குணமாகின்றன.

சந்திர பேதன பிராணாயாமா

சந்திர என்பது சந்திரனைக் குறிக்கிறது. பேதனா என்றால் திறப்பது என்று பொருள். இந்த பிராணாயாமத்தில் உடல் உஷ்ணம் குறைக்கப்படுகிறது. சந்திரன் குளிர்ச்சியை குறிப்பதால் இந்த பிராணாயாமம் சந்திர பேதன பிராணாயாமம் எனப்படுகிறது.

செய்முறை

வஜ்ராசனம் போன்ற உட்காரும் யோகாசன நிலையில் சவுகரியமாக அமரவும்.

வலது நாசியை மூடிக் கொண்டு 4 லிருந்து 5 நொடிகள் இடது நாசி மூலம் மூச்சை உள்ளிழுக்கவும். கும்பகத்தை 10 லிருந்து 15 விநாடிகள் பந்தங்கள் மூலம்  செய்யவும். கும்பகம் என்றால் மூச்சை உள்நிறுத்தல். செய்யும் பொழுது இடது நாசியை மூடிக் கொள்ளவும்.

பந்தங்களை விடுவிக்கவும். இடது நாசியால் 6 லிருந்து 8 விநாடிகள் மூச்சை வெளிவிடவும். இது ஒரு சுழற்சி. இதை 5 லிருந்து 10 முறை செய்ய வேண்டும்.

பலன்கள்

இந்த பிராணாயாமம் உடலின் அதீத உஷ்ணத்தை எடுத்து விடுவதால் கண்ணெரிச்சல், மூக்கில் ரத்தம் வருதல் முதலியன குணமாக்கப்படும்.

உடல் உஷ்ணத்தால் முடி உதிர்தல், இதர சரும நோய்கள் குணமாகும்.

உயர் ரத்த அழுத்தம், தூக்கமின்மை, நரம்பு வியாதிகள் குணமாகும்.

மறுபடியும் சொல்கின்றோம், பிராணாயாமம் நன்கு தேர்ந்த யோகாசன குருவிடம் கற்றுக் கொண்ட பின்பே செய்ய வேண்டும்.

பிராணாயாமங்களின் பரிமாணம் அற்புதமானது. மூச்சு விடுதலை கட்டுப்படுத்துவதின் முக்கியத்துவத்தை நமது முன்னோர்கள் அறிந்திருந்தனர். தற்போதைய ஆய்வுகள் மூச்சு விடும் சுழற்சிகள் ஒரு நிமிடத்தில் 16 லிருந்து 20 தடவை நடக்கின்றன என்று தெரிவிக்கிறது. உறங்கும் போது இந்த எண்ணிக்கை ஒரு நிமிடத்திற்கு 10 லிருந்து 12 சுழற்சிகளாக குறைகிறது. இதுவே ஆழ்நிலை தியானத்தின் போது ஒரு நிமிடத்தில் 4 லிருந்து 6 சுழற்சிகளாக குறைந்து விடுகிறது! பிராணாயாமமும் தியானமும் நெருங்கிய தொடர்புடையவை.


Spread the love