கர்ம யோகம்

Spread the love

உழைப்பே உயர்ந்தது

உலகில் பிறந்த மானிடர் அனைவரும் உழைத்தே ஆகவேண்டும். உழைப்பின்றி உணவில்லை. உயிருமில்லை. உழைப்பை தவிர்க்க முடியாது. ‘கர்மா’ எனப்படும் உழைப்பு இவ்வளவு இன்றியமையாததாக இருக்கும் போது, நாம் ஏன் உழைப்பை கொண்டாடி, விரும்பத்தக்க விஷயமாக மாற்றிக் கொள்ளக் கூடாது? மனிதன் உழைப்பினால் பணம் சம்பாதிக்கிறான். உண்ண உணவும், வசிக்க வீடும், உடுக்க உடையும், சம்பாதிக்கும் பணத்தால் ஏற்பாடு செய்து கொள்கிறான். மனிதன் சிந்திக்கும் திறனுடைய ‘மிருகம்’ ஆனதால் இவை மட்டும் போதாமால், வாழ்க்கையை நன்கு வாழ வேண்டும், அறிவை அதிகரித்துக் கொள்ள வேண்டும். புகழடைய வேண்டும் என்றெல்லாம் விரும்புகிறான். உழைப்பே இவற்றை அடைய உதவும்.

உழைப்பே இறைவழிப்பாடாகும். கடவுளை அறிய, அடைய மூன்று வகை யோகங்கள் முக்கியமானவைகளாக கருதப்படுகின்றன. அவை பக்தியோகம், ஞானயோகம், கர்ம யோகம், எனவே கர்ம யோகமும் இறைவனை அறியும் வழியாகும். வழிகள் பலவிதமாக இருந்தாலும், முடிவு ஒன்று தான்.

கர்ம யோகி, தினசரி கோவிலுக்கு போக வேண்டும், இல்லை தினமும் தியானம் செய்ய வேண்டும் என்றெல்லாம் இல்லை ஒரு குருவை தேடியும் போக வேண்டாம் முதலில் தன்னை, தன் குறை, நிறைகளை அறிய வேண்டும். கள்ளம் கபடமில்லாமல் தெளிந்த சிந்தனையோடு எல்லோருடனும் நன்கு பழக வேண்டும். தன்னை சுற்றி உள்ள உலகத்தை புரிந்து கொள்ள வேண்டும். தீண்டாமை, ஏழைகளை ஏமாற்றுதல் போன்ற தீய செயல்பாடுகளை தனது சொந்த வாழ்க்கையிலேயோ, அலுவலக வேலைகளிலோ செய்யக்கூடாது. இவை உழைப்பை தடுக்கும். நேர்மை தவறாமல் உழைக்க வேண்டும். நம்மை சுற்றி உள்ள கெடுதல்கள், நம்மை பாதிக்காத வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும்.

கர்ம யோகிகளை இரண்டு வகையாக கூறலாம். பற்றின்றி உழைப்பவர். ஒரு வகை. உழைப்பின் பலனை கடவுளுக்கு சமர்ப்பிபவர் இன்னொரு வகை.

பற்றின்றி உழைப்பது எப்படி? உழைப்புக்கேற்ற ஊதியம் இல்லாவிட்டால் வாழ்வது எப்படி? நீங்கள் உங்கள் உழைப்புக்கேற்ற ஊதியத்தை பெற்றுக் கொள்ளலாம். ஆனால் அதைப்பற்றிய பேராசையோ, பற்றோ கூடாது. வெற்றி, தோல்விகளை பற்றி கவலையின்றி செயல்கள் அமைய வேண்டும். அந்த மாதிரியான மனதிடத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். “என் தலையிலேயே எல்லா வேலைகளும் விழுகின்றன” என்று அலுத்துக் கொள்ளாதீர்கள். அதிக உழைப்பு உடல் நல குறைவை உண்டாக்காது. அதிக உழைப்பு என்று அலுத்துக் கொள்வதுதான் அதிக உழைப்பை விட மனதிற்கும் உடலுக்கும் அதிக பாதிப்பை ஏற்படுத்தும். வேலையை வெற்றிகரமாக முடித்தால் ‘நான்தான் செய்தேன்’ என்று மார் தட்டிக் கொள்ள வேண்டாம்! அந்த புகழை இறைவனுக்கு அணியுங்கள்.

கீழ்க்கண்டவற்றை கடைப்பிடியுங்கள்

வீட்டு வேலையாகட்டும், அலுவலக வேலையாகட்டும் – திறமையாகவும், புத்தி சாலித்தனமாகவும் செய்ய வேண்டும். செய்வதை செவ்வனே செய்ய வேண்டும்.

செக்கு மாடு போல் ஒரே மாதிரி உழைப்பதை விடுத்து அவ்வப்போது உங்கள் உழைப்பை திரும்ப நோக்கி, மாறுதல்கள் செய்ய முடியுமா? புதிய முறைகளை கடைபி டிக்க முடியுமா? தவறுகளை தவிர்ப்பது எப்படி என்றெல்லாம் யோசித்து புதிய உத்திகளில் ஈடுபடுங்கள்.

முழுமனதுடன், உங்கள் வேலையில் ஈடுபடவும்.

பற்றின்று வேலை செய்ய வேண்டும் என்பது சரி. இதை புரிந்து, நடைமுறையில் செய்வது சுலபமல்ல. பற்றின்மையை தான் “தாமரை இலை தண்ணீர் போல் வாழ வேண்டும்” என்கிறார்கள். தாமரை இலை மேல் உள்ள தண்ணீர் துளி, இலையுடன் ஒட்டாது, உருண்டு வந்து வெளியில் சிந்தாது!

கடவுள் நம்பிக்கை இருந்தால், பிரார்த்தனையுடன் உங்கள் வேலையை ஆரம்பிக்கலாம். தியானம் தேவையில்லை என்று சொன்னாலும், செய்வதில் தவறில்லை.

உங்கள் வேலையை உற்சாகமாக மாற்ற, அதை வேலையென்று நினையாமல் பொழுது போக்கு என்று நினையுங்கள். சீட்டாடுவது, கிரிக்கெட் விளையாடுவது எவ்வளவு மகிழ்ச்சியை தருகின்றன? வேலையை சீட்டாட்டம், கிரிக்கெட் போல விளையாட்டாக நினைத்து கொண்டு செய்யுங்கள்.

வேலையில் பொறாமை வேண்டாம். கோபம், பழிவாங்கும் உணர்வுகள் வேண்டாம்.

நீங்கள் எந்த வேலை செய்கிறீர்கள் என்பதை விட, எவ்வாறு செய்கிறீர்கள் என்பது முக்கியம். சிவ பூஜை செய்தாலும் சரி, செருப்புகளை துடைக்கும் வேலையாக இருந்தாலும் சரி, கர்மயோகிக்கு இவை இரண்டும் ஒன்று தான்.

உங்களுக்கு பிடித்தமான வேலையை தேர்ந்தெடுங்கள். முடியாவிட்டால் கிடைத்ததை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டு செயல்படுங்கள்.


Spread the love