ஒரே தலை.. பல வலி..

Spread the love

எனக்கு தெரிந்த நண்பர் ஒருவர் கிண்டல் பேர்வழி. அவரிடம் யாராவது, ‘ஒரே தலைவலி.. உயிரே போகுது’ என்று சொன்னால், ‘‘பரவாயில்லப்பா.. உனக்கு ‘ஒரே’ தலைவலி. ராவணனனை நினைச்சு பாரு.. அவனுக்கு ‘பத்து’ தலைவலி.. எவ்வளவு துடிச்சுப் போயிருப்பான்..’’ என்று கிண்டலடிப்பார்.

தலைவலியைத் தூண்டும் வாழ்வியல் காரணங்கள் என்று பார்ப்போம்..

காற்றோட்டம் இல்லாத இடங்களில் இருப்பது, எப்போதும் ஏ.சி அறையில் இருப்பது. சரியான நேரத்துக்கு தூங்காதது.  சிலருக்கு நைட் ஷிஃப்ட் பார்த்து வந்து பகல் நேரத்தில் தூங்குவதாலும், காலை உணவைத் தவிர்த்துவிட்டு வேலைக்கு செல்லும் பழக்கத்தாலும் தலைவலி வரும்.  சுயமருத்துவம் எடுத்துக்கொள்வது, மருத்துவர் ஆலோசனை இல்லாமல் தொடர்ந்து மாத்திரைகள் வாங்கிச் சாப்பிடுவது. மன அழுத்தம், டென்ஷன், மனச்சோர்வு, மன உளைச்சல் ஆகிய காரணங்களால் ஏற்படும் வலி என்று தலைவலி ஏற்படுவதற்கு ஆயிரம் காரணங்கள் இருக்கின்றன. 

ஒரே தலைதான்.. ஆனால், வலிகள் பலவகை.. அவற்றை பார்ப்போம்..

முகத்தில் கண் மற்றும் மூக்கு இணையும் பகுதி மற்றும் நெற்றிப் பொட்டில் வலி ஏற்படும். உடல் வலி மற்றும் சுவாசப் பிரச்னைகளால் இது போன்ற தலைவலி ஏற்படும். இந்த வகையில், நெற்றி மற்றும் கண் இமைகளின் கீழ், கன்னங்களில் உள்ள எலும்புப் பகுதியில் வீக்கத்தை ஏற்படுத்தும். வலியும் இருக்கும்.

முகம் மற்றும் தலைப்பகுதியில் ஒருபுறமாகவே வலி ஏற்படும். அது இடது மற்றும் வலது என்று எந்த புறமாகவும் இருக்கலாம். பார்வைக் கோளாறு மற்றும் காது குறைபாடு, குமட்டல், வாந்தி போன்றவற்றால் இதுபோன்ற வலி ஏற்படும்.

நெற்றியில் மட்டும் வலியை ஏற்படுத்தும். தலைசுற்றல் மற்றும் தலைகனத்தால் வலி உண்டாகும். டென்ஷனால் ஏற்படும் தலைவலி, கழுத்தில் இருந்து தலை உச்சி வரை இருக்கும்.

கண் இமைகளில் வலி ஏற்படும். அஜீரணக் கோளாறுகளாலும் இது போன்ற வலி ஏற்படும். கண்ணைச் சுற்றி ஒருபக்கம் மட்டும் வரும் தீவிர வலி இது.

இப்படிப்பட்ட வலிகள் வந்தால், கை வைத்தியம் பார்ப்பதோ, தைலம் தடவினால் சரியாகி விடும் என்று இருப்பதோ, பார்மஸியில் போய் தலைவலி மாத்திரை வாங்கி சாப்பிடுவதோ கூடாது. உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்று தகுந்த சிகிச்சை பெறுவதே நல்லது.


Spread the love