தீபாவளிக்கு அல்வா!, அல்வா என்றதுமே நமது ஞாபகத்தில் வருவது திருநெல்வேலி. அனேகமாக திருநெல்வேலிக்குச் செல்பவர்கள் குற்றாலத்திற்குச் செல்பவர்கள் என எல்லோருமே அல்வா வாங்காமல் வரமாட்டார்கள். திருநெல்வேலியின் மத்தியில் சில கடைகளில் அல்வா ஏதோ இலவசமாக சுண்டல் விநியோகம் செய்வது போல படு ஜரூராக விற்பனையாகிக் கொண்டிருக்கும். அந்தக் கடை அல்வா அந்தக் கடை அல்வா என பிரசித்த பெற்ற பல அல்வாக்களும் கூட உள்ளன. இவை தமிழக சினிமாவிலும் கூட இடம் பிடித்து சில தமிழ்ப்படங்களில் கூட இந்த அல்வாக்களை வைத்து பாடங்கள் கூட வந்துவிட்டது.
ஆனால் இந்த அல்வா என்பது என்ன? இது எங்கே தோன்றியது. இந்த உலகில் எங்கெல்லாம் விற்பனை ஆகிறது. எத்தனை விதமான அல்வாக்கள் உள்ளன. தெரியுமா? உங்களுக்கு தெரிந்து கொள்ள மேலும் படியுங்கள்.
இந்த தீபாவளிக்கு அல்வா கொடுங்கள்! உங்கள் குடும்பத்தினருக்கு அல்வா என்பது மாவு, நெய், சர்க்கரை ஆகிய மூன்று சேர்ந்து அடுப்பில் வைத்து செய்த ஒரு கலவை. இது மூன்று விதமான உருவில் இருக்கும். ஒன்று சாப்பிடுவதற்கு எளிதாகவும் மற்றொன்று சாப்பிடுவதற்கு ஜவ்வு போன்றும் மூன்றாவது மொறுமொறுப்பாகவும் இருக்கும்.
அல்வா இந்தியாவில் மட்டுமல்லாது, மத்திய ஆசியா, மேற்கு ஆசியா, வட ஆப்ரிக்கா போன்ற கண்டங்களிலும் பால்கன் இன மக்கள் வாழும் தென்கிழக்கு ஐரோப்பாவிலும் யூதர்கள் மத்தியிலும் பிரபலமாக விளங்குகின்றது. நடைமுறையிலும் உள்ளது.
உலகளவில் இரு விதமான அல்வாக்கள் தயாரிக்கப்படுகின்றன அவை ஒன்று தானியமாவில் செய்யப்படும் அல்வா இரண்டாவது வெண்ணெய் மற்றும் பருப்புகளில் செய்யப்படும் அல்வா.
பால்கன் இன மக்கள் தயாரிக்கும். அல்வாவான பால்கன் டாஹினி அல்வாவே உலக அளவில் புகழ் பெற்றது. இதற்கும் பெயர் அல்வா தான்! இது எள்ளு, வெண்ணெய் மற்றும் சர்க்கரை கொண்டு தயாரிக்கப்படுகிறது.
நமக்கு நம் திருநெல்வேலி அல்வாவைப் பற்றி நன்றாகவே தெரியும் உலகில் எந்த எந்த அல்வா பிரபலம் என்று தெரிந்து கொள்ள வேண்டாமா? தெரிந்து கொள்ளுங்கள்.
அல்போனியா – சாக்லேட் அல்வா
அர்ஜன்டீனா – மேன்டகால்
பரரெயன் – அல்வா ஷோயித்தா
பங்காளதேஷ் – சுஜீர் அல்வா
பல்கேரியா – தாஹினி அல்வா
எகிப்து – அல்வா தாஹிரியா
ஈரான் – ரோள் அல்வா
இஸ்ரேல் – தாஹினி அல்வா
தமிழகத்தில் நம் திருநெல்வேலியிலிருந்து தயாரிக்கப்படும் அல்வா பிரபலமானது இது கோதுமை, நெய், சர்க்கரை அல்லது வெல்லம் கொண்டு தயாரிக்கப்படுவது.
கேரள மாநிலத்தில் நேந்திரம் பழம் கொண்டும் அல்வா தயாரிக்கப்படுகிறது. கோழிக் கோட்டின் அல்வா, அலுவா என அழைக்கப்படுகிறது. இது மைதா, நெய், சர்க்கரை கொண்டு தயாரிக்கப்படுகிறது. கறுத்த அலுவா என ஒரு வகை அல்வா அரிசி மாவிலிருந்தும் கேரளத்தில் தயாரிக்கப்படுகின்றது. இதுவும் மிக பிரபலம்.
கர்நாடகாவில் ஒரு விதமான அல்வா – காகி அல்வா என தயாரிக்கப்படுகிறது. இது பூசணிக்காய், நெய், சர்க்கரை கொண்டு தயாரிக்கப்படுகிறது.
உலக அல்வா இந்திய அல்வா என அல்வா பற்றி தெரிந்து கொண்டுவிட்டோம். உலகின் மத்திய பகுதியில் எள்ளில் அல்வா தயாரிக்கப்பட்டு அல்வா என்ற பெயரிலேயே அழைக்கப்படுகின்றது. நாம் நமது வீட்டில் வித விதமான அல்வா செய்து அசத்த வேண்டாமா?
உலகில் எந்த அல்வா எப்படியோ நம் வசதிக்கேற்ப நம் ருசிக்கேற்ப அல்வா இருந்தால் தானே அல்வா. இங்கே வகை வகையான அல்வாக்களை வழங்கியுள்ளோம். உங்கள் ருசிக்கேற்ப தேர்வு செய்து உணவு நலம் சார்பில் தயாரித்து உங்கள் அன்பானவர்கள் இனிய தீபாவளி வாழ்த்துக்களை கூறிடுங்கள்.
இனிய தீபவாளி வாழ்த்துக்கள்!
பால் அல்வா
தேவை
கெட்டியான பால் – 5 கப்
சர்க்கரை – 2 கப்
வெண்ணெய் – 2 டே. ஸ்பூன்
செய்முறை
கெட்டியான பாலை அடிபிடிக்காமல் காய்ச்சித் திரட்டவும். சர்க்கரை சேர்த்துக் கிளறி, ஒட்டாமல் வரும் போது, வெண்ணெயைச் சேர்க்கவும். நெய் தடவிய தட்டில் இட்டு ஆறியதும் வில்லைகளாகப் போடவும்.
கேரட் அல்வா
தேவை
சிவந்த ஊட்டி கேரட் – 1/4 கிலோ
சர்க்கரை – 1/2 கிலோ
கெட்டியான பால் – 1 கப்
பால்கோவா – 100 கிராம்
முந்திரி, திராட்சை நெய் – தேவைக்கு
செய்முறை
கேரட்ரை நன்றாக அலம்பி, துருவிக் கொள்ளவும். கெட்டியான பாத்திரத்தில், பாலைக் கொதிக்க விட்டு, கேரட் சேர்த்து வேகவிடவும். வெந்ததும், பால்கோவா சேர்த்துக் கிளறவும். இறுதியாக சர்க்கரை சேர்த்துத் திரட்டவும்.
நெய்யில் பொரித்த முந்திரி, திராட்சையுடன் தேவைப்பட்டால் ஆரஞ்சு நிறம் சேர்த்துக் கிளற வேண்டும். இதைச் செய்ய அரை மணி நேரமே போதும்!
மைதா அல்வா
தேவை
மைதா மாவு – 100 கிராம்
சர்க்கரை – 400 கிராம்
நெய் – 150 கிராம்
பிடித்தமான கலர் எஸென்ஸ்
வறுத்த முந்திரி – சிறிதளவு
செய்முறை
சர்க்கரை கம்பிப் பாகில் கரைத்த மைதா மாவைக் கொட்டி, இதர பொருட்களைச் சேர்த்து கிளறி சுருண்டு வரும் பொழுது இறக்கவும்.
பிரெட் அல்வா
தேவை
பிரெட் துண்டுகள் – 5
மசித்த உருளைக்கிழங்கு – 1 கப்
வேகவைத்து மசித்த பயத்தம் பருப்பு – 1 கப்
பால் – 1/2 லிட்டர்
சர்க்கரைத் தூள் – 1 கப்
நெய் – 2 ஸ்பூன்
முந்திரி, திராட்சை, பாதாம், எஸன்ஸ் – தேவையான அளவு
செய்முறை
பிரெட், பால் மசித்த பருப்பு, உருளைக்கிழங்க, சர்க்கரைத்தூள் அனைத்தையும் சேர்த்து அடுப்பில் ஏற்றிப் பதமாகக் கிளறவும். சுருண்டு வந்ததும் நெய், முந்திரி, திராட்சை, எஸன்ஸ் சேர்த்துக் கிளறவும்.
பிரெட் அல்வா என்று சத்தியம் செய்தாலும் நம்பமாட்டார்கள். ‘பாதாம் அல்வா‘ என்றே நினைப்பார்கள்.
கார்ன் அல்வா
தேவை
மக்காச் சோள மாவு – 1 கப்
தண்ணீர் – 3 கப்
சர்க்கரை – 2 கப்
எலுமிச்சை சாறு – 1 டீஸ்பூன்
ஏலக்காய்ப்பொடி – 1 டீஸ்பூன்
நெய் – 1 டீஸ்பூன்
முந்திரி – 1 டீஸ்பூன்
திராட்சை – 1 டீஸ்பூன்
கேசரி பவுடர் – தேவையான அளவு
செய்முறை
மக்காச் சோள மாவுடன் 11/2 கப் தண்ணீர் சேர்த்து பிசைந்து வைத்துக் கொள்ளவும்.
வாணலியை சூடாக்கி சர்க்கரை மீதமுள்ள தண்ணீர் சேர்க்கவும்.
பாகு பதத்தில் வந்தவுடன், சோள மாவினை சேர்த்துக் கிளறி விடவும்.
இதனை கிளறிக் கொண்டோ முந்திரி, திராட்சை, கேசரி பவுடர், நெய், எலுமிச்சைச் சாறு, ஏலக்காய்ப்பொடி சேர்த்து கிளறவும்.
இந்தக் கலவை உருண்டு திரண்டு வரும்போது, இதனை ஒரு நெய் தடவிய தட்டில் கொட்டவும்.
முந்திரியால் அதன் மேல் அலங்கரித்து, ஆறியதும் நமக்கு விருப்பமான வடிவங்களில் வெட்டிக் கொள்ளவும்.
ஸ்பெஷல் அல்வா
தேவை
கெட்டி அவல் – 1/2 கிலோ
சர்க்கரை – 200 கிராம்
நெய் – 100 கிராம்
ஏலம், முந்திரி – தேவையான அளவு
செய்முறை
நெய்யில் வறுத்து பொடித்த அவலை நெய்யுடன் சர்க்கரைப்பாகில் போட்டுக் கிளறி முந்திரி ஏலம் தூவி இறக்கவும். இது தீபாவளி ஸ்பெஷல் ஸ்வீட்டாக அமைந்து விடும்.
பூசணிக்காய் அல்வா
தேவை
பூசணிக்காய் – 1/2 கிலோ
நெய் – 175 கிராம்
சர்க்கரை – 300 கிராம்
கன்டென்ஸ்ட் மில்க் – 1 சிறிய டம்ளர் (அ) சர்க்கரை இல்லாத கோவா – 200 கிராம்
ஏலப்பொடி – 1 ஸ்பூன்
ஒடித்த முந்திரி – 2 டேபிள் ஸ்பூன்
கேசரிப் பவுடர் – 1/4 ஸ்பூன்
தண்ணீர் – 11/2 கரண்டி (கோவா போடும் பட்சத்தில்)
செய்முறை
பூசணிக்காயின் தோலைச் சீவி, குடல் பகுதியை அகற்றி விட்டு, அலம்பித் துருவிக் கொள்ளவும். பூசணிக்காயைத் துருவும் பொழுது, தண்ணீர்ச்சத்து நிறைய வெளியேறும். ஆனால் அது உபயோகப்படாது.
சிறிதளவு நெய்யை வைத்து, முந்திரியை வறுத்து எடுத்துக் கொண்டு, அதிலேயே துருவிய பூசணியைப் பிழிந்து போட்டு நன்கு வதக்கவும். வதங்கிய பூசணித் துருவலை மிக்ஸியில் அரைத்து விழுதாக்கவும். சிலர் துருவலாகவே வைத்துக் கொள்ளப் பிரியப்படுவார்கள்.
அடுப்பில் சிறிதளவு நெய்யை விட்டு விழுதைப் போட்டு, சர்க்கரையைச் சேர்க்கவும். நெய்யைச் சுட வைத்துக் கொஞ்சம் கொஞ்சமாகச் சர்க்கரை + விழுதுடன் சேர்க்கவும். கிளறிக் கொண்டு இருக்கவும்.
மேற்கொண்டு, கன்டென்ஸ்ட் மில்க் அல்லது கோவாவாக இருந்தால், தண்ணீரில் கரைத்தாற்போல் செய்து கொண்டு கலவையில் சேர்க்கவும். கேசரிப் பவுடர், ஒடித்த முந்திரி, ஏலப்பொடி எல்லாவற்றையும் போட்டு பாத்திரத்தில் ஒட்டாமல், சுருள வரும் பதத்தில் நெய் தடவிய தாம்பாளத்தில் கொட்டி, ஆறியவுடன் வில்லைகளாகப் போடவும்.
கோவாவைத் தண்ணீரில் கரைத்துச் சேர்ப்பதற்குப் பதில் பூசணித் தண்ணீரைக் கூட உபயோகப்படுத்தலாம். இதை ‘காசி அல்வா‘ என்றும் சொல்வார்கள்.
கோதுமை அல்வா
தேவை
சம்பா கோதுமை – 1 டம்ளர்
நெய் – 3/4 டம்ளர் (அ) 1 டம்ளர்
சர்க்கரை – 3 டம்ளர்
ஏலக்காய்த்தூள் – 1 டீஸ்பூன்
முந்திரி – 75 கிராம்
அல்வா பவுடர் – 1/2 டீஸ்பூன்
செய்முறை
கோதுமையை முதல் நாளே ஊற வைக்கவும். ஊற வைத்த கோதுமையை மிருதுவாக அரைத்துக் கொள்ள வேண்டும். அதை சுத்தமான வெள்ளைத் துணியில் போட்டு வடிகட்டி பால் எடுக்கவும்.
மீண்டும் அந்த மாவை நன்கு அரைத்து, வெள்ளைத் துணியில் போட்டு வடிகட்டி பால் எடுக்கவும். இதே போல் நாலைந்து முறை செய்ய வேண்டும்.
வடிகட்டிய பாலை ஒரு பாத்திரத்தில் ஊற்ற துணியால் மூடி வைக்கவும். சில மணி நேரம் கழித்துப் பார்த்தால் மேலாகத் தெளிந்த நீர் இருக்கும். அதை வடிகட்டி எடுத்து விட வேண்டும்.
அடியிலுள்ள கோதுமை மாவு கூழ் போல் காணப்படும். இதில் அல்வா பவுடரைக் கலந்து வைக்கவும்.
முந்திரியை சிறு சிறு துண்டுகளாக உடைத்து நெய்யில் வறுக்கவும்.
அடுப்பில் அடிகனமான பாத்திரத்தை வைத்து, சர்க்கரையைச் சேர்த்து தண்ணீர் விட்டுக் கரைத்து, கம்பிப் பாகு வைக்கவும். நெய்யை உருக்கி வைத்துக் கொள்ளவும்.
அந்தப் பாகில் கோதுமை கூழை ஊற்றி கிளறிக் கொண்டே இருக்கவும். கூழ் வெந்து வரும்போது கொஞ்சம் கொஞ்சமாக காய்ச்சிய நெய்யை ஊற்றி கிளறிக் கொண்டே இருக்கவும். அடுப்பு குறைந்த தீயில் எரிய வேண்டும். கை விடாமல், அடிபிடிக்காமல் கிளற வேண்டும்.
எல்லாம் சேர்ந்து நன்கு வெந்ததும், அதில் ஊற்றிய நெய் தனியே பிரிந்து வரும். கையில் தொட்டுப் பார்த்தால் ஒட்டாது. அகலமான தட்டில் நெய் தடவி அல்வாவைக் கொட்டவும். நெய்யில் வறுத்த முந்திரி, ஏலக்காய்த்தூள் ஆகியவற்றை அல்வா மீது தூவவும். சூப்பரான கோதுமை அல்வா தயார்.
பாதாம் அல்வா
தேவை
பாதாம் பருப்பு – 50
சர்க்கரை – 3 டம்ளர்
நெய் – 2 டம்ளர்
குங்குமப்பூ – சிறிதளவு
பாதாம் எஸன்ஸ் – சில துளிகள்
டிரேஸ் பேப்பர்
செய்முறை
பாதாம் பருப்பை வெந்நீரில் ஊற வைத்து தோல் நீக்கி அரைத்துக் கொள்ளவும். நெய்யை உருக்கிக் கொள்ளவும். அடிகனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து, சர்க்கரையைப் போட்டு, கம்பிப்பாகு வைக்கவும். பாகில் அரைத்த விழுதைப் போட்டுக்கிளறவும். உருக்கிய நெய்யை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றவும்.
நன்கு வெந்து அல்வா பதம் வந்ததும், குங்குமப்பூவை பாலில் கரைத்து ஊற்றவும். பாதாம் எஸன்ஸ் தேவையென்றால் சேர்க்கவும். நன்கு கிளறி ஆற வைக்கவும். டிரேஸ் பேப்பரை சதுரமாக கத்தரித்து அதில் அல்வாவை ஒவ்வொரு ஸ்பூனாக வைத்து அழுத்தாமல் மடிக்கவும்.
தாஹினி அல்வா
தேவை
சர்க்கரை – 300 கிராம்
தண்ணீர் – 100 மி.லி.
எள்ளு – 300 கிராம்
எசன்ஸ் – தேவையெனில்
பிஸ்தா, பாதாம், வேர்க்கடலை – 1/4 கப் தேவையெனில்
செய்முறை
பாதாம், பிஸ்தா, வேர்க்கடலை போன்றவற்றை வெறும் வாணலியில் நன்றாக வறுத்து, தோல் நீக்கி வைத்துக் கொள்ளவும். சர்க்கரையை தண்ணீரில் இட்டு கரைத்து மிதமான சூட்டில் வைத்து கிளறிக் கொண்டேயிருக்கவும் பாகு பதம் வரும் வரை பதம் வந்ததும் அத்துடன் வறுத்து தோலுரித்து வைத்துள்ள பாதாம், பிஸ்தா, வேர்க்கடலை ஆகியவற்றை கொட்டி நன்கு கிளறவும். வாசனை தேவையெனில் எசன்ஸ் 1/2 ஸ்பூன் (வெனிலா) விட்டு கிளறவும்.
இந்த ஒரு பாத்திரத்தில் எள்ளை போட்டு அதில் இந்த கலவையை சிறிது சிறிதாக சேர்த்து நன்கு கிளறவும். வேகமாகவும் பத்திரமாகவும் கிளற வேண்டும். நன்கு கிளறி அதனை ஒரு தட்டில் நெய் தடவி அதில் கொட்டி பரப்பி விட அது அப்படி கட்டியாகவும் ஆறி மொறுமொறுப்பாகவும் வந்து விடும். இதனை தேவையெனில் முதலிலேயே சதுரம் சதுரமாக வெட்டியும் விடலாம். இதுவே தாஹினி அல்வா.
உணவு நலம் நவம்பர் 2010
தீபாவளி, பலகாரங்கள், அசத்தும், அல்வாக்கள், தீபாவளிக்கு அல்வா, திருநெல்வேலி, மாவு, நெய், சர்க்கரை, மத்திய ஆசியா, மேற்கு ஆசியா, வட ஆப்ரிக்கா, யூதர்கள், தானியமாவு, பருப்பு, பால்கன் டாஹினி, எள்ளு, வெண்ணெய், சாக்லேட் அல்வா, மேன்டகால், அல்வா ஷோயித்தா,
சுஜீர் அல்வா, தாஹினி அல்வா, அல்வா தாஹிரியா, ரோல் அல்வா,
தாஹினி அல்வா, கோதுமை, நெய், வெல்லம், கேரள மாநிலம், நேந்திரம் பழம், கோழிக் கோடு அல்வா, அலுவா, கறுத்த அலுவா, பால் அல்வா, செய்முறை,
கெட்டியான பால், சர்க்கரை, வெண்ணெய், கேரட் அல்வா, செய்முறை, கேரட், பால்கோவா, நெய், முந்திரி, திராட்சை, மைதா அல்வா, செய்முறை, மைதா மாவு,
நெய், வறுத்த முந்திரி, பிரெட் அல்வா, செய்முறை, பிரெட், பால், மசித்த பருப்பு, உருளைக்கிழங்கு, சர்க்கரைத்தூள், நெய், முந்திரி, திராட்சை, எஸன்ஸ், கார்ன் அல்வா, செய்முறை, மக்காச் சோள மாவு, முந்திரி, திராட்சை, கேசரி பவுடர், எலுமிச்சைச் சாறு, ஏலக்காய்ப்பொடி, ஸ்பெஷல் அல்வா, செய்முறை,
கெட்டி அவல், சர்க்கரை, நெய், முந்திரி, ஏலம், பூசணிக்காய் அல்வா, செய்முறை,
பூசணிக்காய், நெய், சர்க்கரை, கன்டென்ஸ்ட் மில்க், சர்க்கரை இல்லாத கோவா, ஏலப்பொடி, ஒடித்த முந்திரி, கேசரிப் பவுடர், கோதுமை அல்வா, செய்முறை,
சம்பா கோதுமை, நெய், சர்க்கரை, ஏலக்காய்த்தூள், முந்திரி, பாதாம் அல்வா, செய்முறை, பாதாம் பருப்பு, சர்க்கரை, நெய், குங்குமப்பூ, தாஹினி அல்வா, செய்முறை, சர்க்கரை, எள்ளு, எசன்ஸ், பிஸ்தா, பாதாம், வேர்க்கடலை,