வகை வகையான கீரைகள்!

Spread the love

பசலைக் கீரை (கொடிப் பசலை)

கொடிப்பசலை ஒரு சிறந்த கீரை வகையாகும். பசலைக் கீரையை மிகக் குறைந்த அளவு தண்ணீருடன் சேர்த்துச் சமைக்க வேண்டும். பாசிப்பருப்பு சேர்த்துக் கூட்டுப் போல் சமைக்கலாம். பிசின் போன்ற சத்தும், பொட்டாஷியம் ஆக்ஸலேட்டும் நிறைந்த பசலைக்கீரையின் இலைகள் மற்றும் கொழுந்துகள் சமைக்காமலே உண்ணத்தக்கவை. பசலைக் கீரையில் விட்டமின் ‘ஏ’ யும் ‘சி’ யும் அதிகமிருக்கிறது. இதில் காணப்படுகின்ற அமினோ அமிலங்கள் மற்றும் கால்ஷியம், அயன் மற்றும் பிற தாதுப் பொருள்கள் இரத்த விருத்தி உண்டாக்குகின்றன. பசலைக் கீரை சிறுநீரக நோய்கள், மூத்திர அடைப்பு, குறைவாக மூத்திரம் போவது போன்ற நோய்களுக்கு நல்ல மருந்தாகும்.

பருப்புக் கீரை   

உடலுக்குக் குளிர்ச்சியைத் தந்து இரத்த விருத்தி உண்டாக்கும் பருப்புக் கீரையைத் தினமும் உண்டாலும் தவறில்லை. இதில் ஆல்புமின் கூட்டுப் பொருளும் நைட்ரஜன் கூட்டுப் பொருள்களும் அதிகமிருப்பதால் இது சிறந்த உணவாகிறது. இக்கீரையைக் கூட்டு, பொரியல், கடைசல் செய்து சாப்பிட உடல் குளிர்ச்சி பெறும். மலச்சிக்கலை நீக்கிக் கல்லீரல், மண்ணீரல் (ஷிஜீறீமீமீஸீ) சிறுநீரகம் ஆகியவற்றை வலுப் பெறச் செய்யும். கருவுற்ற பெண்கள் இதனைக் கூட்டு செய்து உண்டு வரச் சிறுநீர் எளிதாகக் கழியும். கை கால் வீக்கம் வராது தடுக்கும்.

பொன்னாங்கண்ணி

இக்கீரையை உண்டு வருபவர்களுக்கு உடல் பொன்னாகும் என்பதை உணர்த்தவே இதன் பெயர் பொன்னாம் காண் நீ என்று ஆயிற்று என்று கூறுவார்கள். கற்ப மூலிகைகளில் ஒன்றான இது சிறந்த உடல் நலம் தரும் உணவாகும். இந்தக் கீரையை எடுத்து நன்கு கழுவிச் சுத்தம் செய்து துவரம் பருப்புடன் சேர்த்துக் கூட்டுச் செய்து நெய் சேர்த்து உண்டு வந்தால் உடலில் தளதளவென்று வளர்ச்சி ஏற்படும். கல்லீரலின் செயல்திறனை அதிகரிப்பதுடன் தாய்ப்பால் சுரப்பதையும் அதிகரிக்கும். எப்போதும் உடல் சூடாக இருப்பவர்களுக்கு பொன்னாங்கண்ணியைச் சூப் வைத்துக் கொடுக்க உடல் குளிர்ச்சி பெறும்.

மணத்தக்காளி

இதை மிளகு தக்காளி கீரையென்றும் கூறுவார்கள். வாய்ப்புண், குடல் புண், வயிற்றுப்புண், வாய் வேக்காடு போன்றவற்றிற்கு மணித்தக்காளிக் கீரை ஒரு கண்கண்ட மருந்தாகும். மணித்தக்காளிச் செடியை இலை, காய், பழம் இவற்றுடன் சேர்த்து இடித்துப் பிழிந்து எடுத்த சாறு கல்லீரல் வீக்கம், கணைய வீக்கம் ஆகியவற்றிற்குச் சிறந்த மருந்தாகும். தேங்காய்ப் பாலுடன் சேர்த்து அவித்த மணித்தக்காளி கீரை சத்து மிக்க உணவாகும். சிறுநீர்ப்பாதை எரிச்சலைக் குறைக்கும்.


Spread the love
error: Content is protected !!