அகத்தி
அகத்திக் கீரை பெப்டிக் அல்சர் எனப்படும் வயிற்றுப்புண், குடல் புண்களை விரைவில் ஆற்றவல்லது. இதை அவித்துத் தேங்காய்ப் பால் சேர்த்துச் சாப்பிட வயிற்றுக்கு இதம் தரும். உயிர்ச்சத்துக்கள் நிரம்பிய அகத்திக் கீரை பல் ஈறுகளைக் கெட்டிபடுத்துவதுடன் கண் பார்வையைப் பிரகாசமடையச் செய்கிறது.
அரைக்கீரை
இக்கீரையின் இலைகளும் இளம் தண்டும் உணவாகப் பயன்படக் கூடியது. இதில் சிவப்பு, பச்சை என இருவகை உண்டு. இக்கீரையுடன் சீரகம், பாசிப்பருப்பு சேர்த்து கூட்டாகச் செய்தோ கடைந்தோ சாப்பிடலாம். பொரியல் செய்தும் சாப்பிடலாம். கூடிய வரை அரை வேக்காட்டில் எடுத்து உண்ணப் பழகுதல் வேண்டும். அரைக் கீரை ஜீரணத்தைக் கூட்டும். இரத்தத்தைச் சுத்தி செய்யும், உடலுக்குக் குளிர்ச்சி தரும்.
மரங்களடர்ந்த தோட்டங்களிலும் வயல்காடுகளிலும், வாய்க்கால்களின் ஓரத்திலும் இது கொடி போல் படர்ந்திருக்கும். இது ஒரு கீரை வகையைச் சேர்ந்தது. அம்மான் பச்சரிசிக் கீரையைப் பருப்புப் சேர்த்துக் கூட்டாக வைத்து உண்டு வர உடல் சூடு தணியும், வாய் ஓரங்களில் உள்ள புண் மறையும். உதடு காய்தல், உதடு வெடித்தல் போன்றவை குணமாகும். பெண்களுக்கு ஏற்படுகின்ற வெள்ளை படுதலுக்கு அம்மான் பச்சிரிசி இலையில் இரண்டு கை எடுத்து விழுது போல் அரைத்து எலுமிச்சம் பழ அளவு மோரில் கலந்து குடிக்க மூன்றே நாட்களில் குணம் தெரியும்.
கருவேப்பிலை
உணவுக்கு மணம் சேர்க்கக் கருவேப்பிலை, புதினா, கொத்தமல்லி ஆகியவற்றைச் சேர்த்துச் சமைக்கிறோம். புதினா, கொத்தமல்லி இரண்டையும் உணவோடு உட்கொள்ளும் நாம் கருவேப்பிலையை மட்டும் ஏன் எடுத்து ஒதுக்கி விடுகிறோம். அதன் பயன் தெரியாத காரணத்தால் என்று தான் சொல்ல வேண்டும். கருவேப்பிலையைத் துவையலாக அரைத்தும், புளிப்பச்சடி செய்தும் குழம்பு வைத்தும் உண்ணலாம். பருப்புத் தண்ணீருடன் சேர்த்து கருவேப்பிலை சூப் வைக்கலாம். வயிற்றுக் கடுப்பு, நெஞ்செரிவு, வயிற்றுப் பொருமல், உமட்டல், பசியின்மை ஆகியவற்றைப் போக்கும் குணம் கருவேப்பிலைக்கு உண்டு.
கொத்தமல்லி கீரை
இந்தியச் சமையலில் கொத்தமல்லி இல்லாத சமையலே இல்லை. நாம் கொத்தமல்லியைப் பிற உணவுகளுடன் சேர்த்துச் சமைத்து உண்கிறோம். துவையலாகவும் அரைத்துப் பயன்படுத்துகிறோம். மேல் நாடுகளில் கொத்தமல்லி இலைகளைப் பச்சையாக உண்பதுடன் Chutney, Coriander Sauce முதலானவைகளும் தயார் செய்து பயன்படுத்துகின்றனர். பித்தத்தினால் தலைச்சுற்றல், வாந்தி முதலியவற்றால் அவதிப்படுவோர் கொத்தமல்லியை ஒரு கைபிடி எடுத்து பச்சையாக உண்டு வரலாம். மூன்று நாட்களில் குணம் தெரியும்.
செலரிக் கீரை
Celery என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இக்கீரையை மேலை நாட்டினர் அதிகம் பயன்படுத்துகின்றனர். பச்சையாகவும் சூப்புடன் சேர்த்தும் உண்கின்றனர். இது நரம்புகளுக்கு வலிவு தந்து மூளையைப் பலப்படுத்துகிறது. கீல்வாதம், மூட்டு வலிகளுக்கு நல்ல நிவாரணமாகும். இதை அடிக்கடி உண்டு வர மனதில் நிதானமும் அமைதியும் ஏற்படுமென்று கண்டறியப்பட்டுள்ளது.
டர்னிப் கீரை
இதன் இளங்குருத்தும் இலையும் சிறந்த உணவாகும். பச்சையாகவும் சூப்புடன் சேர்த்தும் உண்ணலாம். இதைக் கூட்டு வைத்துச் சாப்பிட ஜீரணம் அதிகரிக்கும். சிறுநீர் பிரியும். வயிற்றுப் பொருமல், உப்புசம் நீங்கும்.
தூதுவளை கீரை
இதை அன்றாட உணவில் சேர்த்து உண்பதென்ற பழக்கம் பண்டைய நாட்களில் இருந்து வந்துள்ளது. தூதுவளை இலையை பச்சடி, கூட்டு, துவையல், ரசம் வைத்துச் சாப்பிடலாம். நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு இது ஒரு நல்ல மருந்து. தடுமன், இருமல், சளி போக்கும். தாது விருத்தி உண்டாக்கும். தூதுவளைக் காயைச் சுண்டைக்காய் போல் உப்பிட்ட மோரில் போட்டுக் காயவைத்து வற்றலாக்கி வைத்துக் கொண்டு பசு நெய்யில் பொரித்து உண்ண வயிற்றில் மந்தம், வாயு, வாய்க் கசப்பு நீங்கும்.
பசலைக் கீரை (கொடிப் பசலை)
கொடிப்பசலை ஒரு சிறந்த கீரை வகையாகும். பசலைக் கீரையை மிகக் குறைந்த அளவு தண்ணீருடன் சேர்த்துச் சமைக்க வேண்டும். பாசிப்பருப்பு சேர்த்துக் கூட்டுப் போல் சமைக்கலாம். பிசின் போன்ற சத்தும், பொட்டாஷியம் ஆக்ஸலேட்டும் நிறைந்த பசலைக்கீரையின் இலைகள் மற்றும் கொழுந்துகள் சமைக்காமலே உண்ணத்தக்கவை. பசலைக் கீரையில் விட்டமின் ‘ஏ’ யும் ‘சி’ யும் அதிகமிருக்கிறது. இதில் காணப்படுகின்ற அமினோ அமிலங்கள் மற்றும் கால்ஷியம், அயன் மற்றும் பிற தாதுப் பொருள்கள் இரத்த விருத்தி உண்டாக்குகின்றன. பசலைக் கீரை சிறுநீரக நோய்கள், மூத்திர அடைப்பு, குறைவாக மூத்திரம் போவது போன்ற நோய்களுக்கு நல்ல மருந்தாகும்.
பருப்புக் கீரை
உடலுக்குக் குளிர்ச்சியைத் தந்து இரத்த விருத்தி உண்டாக்கும் பருப்புக் கீரையைத் தினமும் உண்டாலும் தவறில்லை. இதில் ஆல்புமின் கூட்டுப் பொருளும் நைட்ரஜன் கூட்டுப் பொருள்களும் அதிகமிருப்பதால் இது சிறந்த உணவாகிறது. இக்கீரையைக் கூட்டு, பொரியல், கடைசல் செய்து சாப்பிட உடல் குளிர்ச்சி பெறும். மலச்சிக்கலை நீக்கிக் கல்லீரல், மண்ணீரல் (Spleen) சிறுநீரகம் ஆகியவற்றை வலுப் பெறச் செய்யும். கருவுற்ற பெண்கள் இதனைக் கூட்டு செய்து உண்டு வரச் சிறுநீர் எளிதாகக் கழியும். கை கால் வீக்கம் வராது தடுக்கும்.
புதினாக் கீரை
பெரும்பாலும் பச்சையாகவே உண்ணப்பட வேண்டிய ஒரு கீரை புதினாக்கீரை. உணவிற்கு மணம் ஊட்டும் இது கடினமான உணவுகளையும் எளிதில் செரிக்கச் செய்யும். புதினாத் துவையலும், சட்னியும் எல்லோராலும் விரும்பி உண்ணத் தக்கது. வயிற்றுக் கோளாறையும் பசியின்மையையும் நேராக்கும். அரை டம்ளர் கேரட் சாற்றில் 2 டீஸ்பூன் புதினாச்சாறு விட்டு 1 டீஸ்பூன் தேன் சேர்த்து குடித்து வர சுவாசக் கோளாறுகள் நீங்கும். புதினா சளியைப் போக்கி நுரையீரலைச் சுத்தப்படுத்த வல்லது.
புளிச்ச கீரை
முற்றாத இளம் இலைகளைப் பறித்துப் பருப்பும் புளியும் சேர்த்துப் புளிப் பச்சடி செய்யலாம். புளிச்ச கீரையை எண்ணெய் விட்டு வதக்கி உப்பு, புளி, பூண்டு, மிளகாய் சேர்த்து துவையலாக அரைத்து உண்ணலாம். இது வயிற்றுப் பொருமலைக் கண்டிக்கும். உடல் உஷ்ணத்தைக் குறைக்கும்.
பொன்னாங்கண்ணி
இக்கீரையை உண்டு வருபவர்களுக்கு உடல் பொன்னாகும் என்பதை உணர்த்தவே இதன் பெயர் பொன்னாம் காண் நீ என்று ஆயிற்று என்று கூறுவார்கள். கற்ப மூலிகைகளில் ஒன்றான இது சிறந்த உடல் நலம் தரும் உணவாகும். இந்தக் கீரையை எடுத்து நன்கு கழுவிச் சுத்தம் செய்து துவரம் பருப்புடன் சேர்த்துக் கூட்டுச் செய்து நெய் சேர்த்து உண்டு வந்தால் உடலில் தளதளவென்று வளர்ச்சி ஏற்படும். கல்லீரலின் செயல்திறனை அதிகரிப்பதுடன் தாய்ப்பால் சுரப்பதையும் அதிகரிக்கும். எப்போதும் உடல் சூடாக இருப்பவர்களுக்கு பொன்னாங்கண்ணியைச் சூப் வைத்துக் கொடுக்க உடல் குளிர்ச்சி பெறும்.
மணத்தக்காளி
இதை மிளகு தக்காளி கீரையென்றும் கூறுவார்கள். வாய்ப்புண், குடல் புண், வயிற்றுப்புண், வாய் வேக்காடு போன்றவற்றிற்கு மணித்தக்காளிக் கீரை ஒரு கண்கண்ட மருந்தாகும். மணித்தக்காளிச் செடியை இலை, காய், பழம் இவற்றுடன் சேர்த்து இடித்துப் பிழிந்து எடுத்த சாறு கல்லீரல் வீக்கம், கணைய வீக்கம் ஆகியவற்றிற்குச் சிறந்த மருந்தாகும். தேங்காய்ப் பாலுடன் சேர்த்து அவித்த மணித்தக்காளி கீரை சத்து மிக்க உணவாகும். சிறுநீர்ப்பாதை எரிச்சலைக் குறைக்கும்.
முள்ளங்கி கீரை
கால்ஷியம், இரும்புச் சத்து, விட்டமின் ‘ஏ’, ‘சி’ போன்றவைகள் கொண்ட முள்ளங்கிக் கீரையில் எலுமிச்சை சாறு பிழிந்து பச்சையாகவே சாப்பிடலாம். முள்ளங்கி கிழங்கை விட அதன் கீரை சத்து மிக்க உணவாகும். இதைச் சமைக்கும் போது இதிலுள்ள உயிர்ச்சத்துக்கள் சிதைந்து போகின்றன. முள்ளங்கிக் கீரையின் சாறெடுத்து நாட்டுச் சர்க்கரை சேர்த்து அருந்த கல்லீரல் வலுவடையும். நல்ல பசி ஏற்படும். சிறுநீரகக் கற்களைக் கரைக்கவும், சிறுநீர்ப்பை வீக்கத்தைக் குறைக்கவும் முள்ளங்கி கீரைச் சாறு ஏற்றது.
சாதரணமாக நாட்டுப்புற மக்கள் முருங்கைக் கீரையும் முருங்கைகாயும் ஆண்மையைக் கூட்டுமென நம்புகின்றனர். முருங்கையின் சாற்றை ஆராய்ந்ததில் அதில் அட்ரீனலினை ஒத்த ஒரு உயிர்த் திரவம் உள்ளதென்று அறியப்பட்டுள்ளது. முருங்கைக் கீரையில் நிறைந்த அளவு இரும்புச் சத்து உள்ளது. இதனால் உடல் மெலிந்தவர்கள் இதை உண்டு வர உடம்பு புஷ்டியாகும். இதைச் சூப்பாகச் செய்து சாப்பிடலாம். நரம்பு மண்டலத்தைச் சுறுசுறுப்பாக்க வல்லது.
தண்டுக் கீரை
இது தண்டுக்கீரை எனவும் முளைக்கீரை எனவும் அழைக்கப்படுகிறது. தண்டுக் கீரை சாப்பிட்டால் உடல் மெலிந்து விடும் என்பார்கள். அது சரியில்லை. கீரைத்தண்டு ஒரு நல்ல சிறுநீர்ப் பெருக்கி, இதனால் இரத்தம் சுத்தமடைகிறது. மலச்சிக்கல் இல்லாமல் போகிறது. இக்கீரையை உண்டு வந்தால் இளமையில் முதுமையடைவதைத் தவிர்க்கலாம்.
வல்லாரை
வல்லாரையை ஏராளமான மக்கள் அன்றாட உணவுடன் சேர்த்துச் சாப்பிடுகிறார்கள். பச்சையாகத் துவையல் அரைத்து உண்ணும் போது நல்ல பலனைத் தருகிறது. சாம்பார் செய்தும் சாப்பிடலாம். இதன் இலைகளில் அமினோ அமிலங்களும், இரும்பு சத்தும், கால்ஷியம் மற்றும் குளூகோசும் இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. வல்லாரை இரத்த விருத்தியை தந்து நரம்புகளைப் பலம் பெறச் செய்து நினைவாற்றலை மேம்படுத்துகிறது.
வாத நாரயணன் கீரை
இந்தக் கீரையை அவித்துக் குடிநீராகக் குடித்து வந்தால் முதுகுவலி, மூட்டு பிடிப்பு, கீல் வாதம், கழுத்து வலி போன்றவைகளைக் குணமாக்கும். வாயுத் தொல்லையைப் போக்கும். வாத நாராயணன் கீரையுடன் சிறிது சுக்கு, ஓமம், திப்பிலி, அதிமதுரம் இவற்¬ச் சேர்த்து அம்மியில் வைத்து தட்டி எடுத்து 2 டம்ளர் தண்ணீர் விட்டு சுண்டும் வரை காய்ச்சி எடுத்துக் கொண்டு தினமும் அரை டம்ளர் சாப்பிட்டு வர இடுப்புப் பிடிப்பும், கழுத்து வலியும் ஓடி மறையும்.
வெந்தயக் கீரை
வெந்தயக் கீரையில் காணப்படும் கொலீனும், லெசித்தினும், பீடெய்னும் அதை மிகச் சிறந்த உணவுப் பொருளாக ஆக்குகின்றன. பாஸ்பேட்டுகளும், லெசித்தினும், நியுக்ளியோ ஆல்புமினும் சேர்ந்து அதை காட்லிவர் எண்ணெய்க்கு ஒப்பாக்குகின்றன. வெந்தயக்கீரை உடலுக்குச் குளிர்ச்சியைத் தரும். சோகை, ரிக்கெட்ஸ் போன்ற நோய்களை குணமாக்கும். உடல் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவக் கூடியது வெந்தயக் கீரை.
சத்யா