அவல் பலவிதம்

Spread the love

அவல் என்பது பழுப்பு நிற அரிசியை கைக்குத்தலிட்டு அதன் மூலம் கிடைக்கும் சிறுசிறு பொரிகள் போல அமைவது. அவலில் பால் சத்துக்கள் உள்ளன. சிறு குழந்தை முதல் பெரியவர் வரை வயதுக்கு, உடலுக்கேற்ற வகையில் தயார் செய்து சாப்பிடலாம். அவல் பால் அவல், தயிர் அவல், தேங்காய் அவல், தக்காளி அவல், காரட் அவல் என்று பல வகைகள் உள்ளன.

பால் அவல்

சிறு குழந்தைகளுக்கும், மெலிந்த உடல் உள்ளவர்களுக்கும் சிறந்த, திடமான உணவு ஆகும். உடல் பருமன் உள்ளவர்கள், சர்க்கரை வியாதி உள்ளவர்கள் சாப்பிடக் கூடாது. தேவையான அளவு சுத்தம் செய்த கார் அரிசி அவலை எடுத்துக் கொள்ளவும். நன்றாக சூடு படுத்திய பசும்பாலில் அவலைப் போட்டு ஊறவைக்க வேண்டும். இதனுடன் தேவையான அளவு வெல்லப்பாகு சேர்த்துக் கொள்ளவும். ஏலக்காய் மற்றும் மலைவாழைப்பழம் அல்லது கற்பூரவள்ளி வாழைப்பழத்தை வட்ட, வட்டத் துண்டுகளாக வெட்டி சேர்த்துக் கொள்ளவும். வாழைப்பழத்திற்குப் பதிலாக ஆப்பிளையும் சேர்த்துக் கொள்ளலாம். அதுபோல பசுவின் பாலுக்குப் பதில் தேங்காய்ப் பால் சேர்த்துக் கொள்ளலாம்.

தயிர் அவல்

சுத்தம் செய்த அவலை, சிறிது தயிர் அல்லது மோர் சேர்த்து கருவேப்பிலை, கொத்தமல்லி, சிறிது இஞ்சித் துண்டுகளும் சேர்த்து ஊற வைத்து பரிமாறினால் அது தான் தயிர் அவல் ஆகும்.

இனிப்பு தேங்காய் அவல்

ஊற வைத்த அவலுடன் வெல்லப்பாகும், தேங்காய்த் துருவலும் சேர்த்துச் சாப்பிடலாம்.

கார தேங்காய் அவல்

அவல், சிறிதளவு தண்ணீர், தேங்காய்த் துருவல், கொத்தமல்லி, புதினா, இஞ்சி, மிளகுத் தூள் கலந்து கொண்டால் கார அவல் தயார்.

தக்காளி அவல்

வேக வைத்த தக்காளிகளை, தோலை உரித்துக் கொண்ட பின்பு, கசக்கிச் சாறு பிழிந்து கொள்ளவும். கழுவிய அவலுடன் சாறு சேர்த்து இஞ்சி, கொத்தமல்லி, கருவேப்பிலை, புதினா கலந்து தேவைக்கு ஏற்ப தண்ணீர் கலந்து சாப்பிட்டுக் கொள்ளலாம்.

காரட் அவல்

கார் அரிசி அவல்    – ஒரு கிலோ

காரட்               – ½ கிலோ

பீட்ரூட் –            – ஒன்று

கொத்தமல்லி தழை  – ஒரு கட்டு

தேங்காய்            – ஒன்று

ரோஜாப்பூக்கள் –     –  5

கோஸ் –            –  ¼ கிலோ

தக்காளி –           –  ¼ கிலோ

எப்படி தயாரிப்பது?

தண்ணீரில் அவலைப் போட்டு 10 நிமிடங்கள் வரை ஊற வைத்துக் கொள்ளவும். அதன் பின்பு அவலை சுத்தம் செய்து கொண்டு காரட், பீட்ரூட், தேங்காய், கோஸ் எல்லாவற்றையும் துருவி சேர்க்கவும். சுத்தம் செய்த கொத்தமல்லி தழைகளையும், தக்காளியையும் துண்டுகளாக வெட்டி சேர்க்க வேண்டும்.

ரோஜாப்பூ இதழ்களை மட்டும் எடுத்துச் சேர்க்கவும். வறுத்து தூள் செய்த முந்திரி பருப்பு, வேர்க்கடலைப் பருப்பு முதலியவற்றை மேலே தூவிக் கொள்ளவும். அதன் பின்னர் அப்படியே அவலைச் சாப்பிடலாம். அல்லது மிளகுத் தூள், சீரகத் தூள் கலந்து சாப்பிடலாம்.

ஆயுர்வேதம்.காம்


Spread the love
error: Content is protected !!