போதை பாதிப்புகள் ஒர் எச்சரிக்கை ரிப்போர்ட்

Spread the love

மனித குலத்தை ஆட்டிப் படைக்கும் பல பழக்கங்களில் முதன்மையானது போதை தரும் லாகிரி வஸ்துக்கள். இவற்றால் ஏற்படும் துயரங்களும் பாதிப்புகளும் கொஞ்ச நஞ்சமல்ல.

போதைப் பொருள் வர்த்தகம் நம்மால் நம்ப முடியாத அளவுக்கு ஒரு மாபெரும் தொழிலாக வளர்ந்துள்ளது. பல பன்னாட்டு நிறுவனங்கள் கூட இந்தத் தொழிலில் ஈடுபட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. இளம் வயதினரது எதிர் காலத்தை இருட்டாக்கி, இல்லற வாழ்க்கையினரது அமைதியைச் தகர்த்து சமூக, பொருளாதார அமைப்புகளைச் சிதைத்து மனித இனத்தையே ஒரு மாபெரும் அழிவுக்கு இட்டுச் செல்லக்கூடிய அச்சுறுத்தலாக இந்தப் போதைப் பொருள் வர்த்தகம் உருவெடுத்துக் கொண்டிருக்கிறது.

மூன்று வித போதை மருந்துகள்

ஓப்பியம் வகை மருந்துகள்: புலால் உணவு வகைகளில் மிகுந்து பயன்படுத்தப்படுகின்ற கசகசா என்னும் விதையை நாம் அறிவோம். ஓப்பியம் பாப்பி (Opium Poppy) எனப்படும் செடியிலிருந்து பெறப்படும் விதையே கசகசா. இந்த விதையை உள்ள அடக்கிய காய்களை முதிராத பருவத்தில் கூரான கத்தி கொண்டு அவற்றின் மேல் கீறினால் பால் போன்ற வெள்ளைத் திரவம் வடியும். இதை வழித்தெடுத்துக் காயவைத்தால் பழுப்பு நிறத்தில் கோந்து போன்ற ஒரு பொருள் கிடைக்கும். இதைப் பொடி செய்கின்ற போது கிடைக்கின்ற பொருள்தான் செப்பமற்ற ஓப்பியம் (Crude Opium) இதையே அபின் எனவும் அபினி எனவும் அழைக்கின்றனர்.

ஒப்பியம் பாப்பி என்ற செடியின் விஞ்ஞான பெயர் – Papaver somniferum. இந்த செப்பஞ் செய்யப்படாத ஒப்பியத்தில் சுமார் 20 க்ஷாரங்கள் (alkaloids) அடங்கியுள்ளன. அதில் மார்பின் (Morphine) ஹெராய்ன் (Heroin) கொடீன் (Codeine) என்ற மூன்று க்ஷாரங்களே மருத்துவ முறையில் பயன்படத்தக்கவை. இந்த ஒப்பியக் கூட்டுப் பொருளிலிருந்து 1803ல் ஸெர்டர்னர் என்னும் இளம் ஜெர்மானிய அறிவியலாரால் பிரித்தெடுக்கப்பட்ட ஒரு பொருள் உடல் வலியை நீக்கி மனமகிழ்வை உண்டு பண்ணியதுடன் கவலையில்லாத ஒரு கனவு நிலையையும், ஏற்படுத்தியதால், கிரேக்க கனவுக் கடவுளான மார்பியஸ் (Morpheus) என்ற பெயரைப்பின் பற்றி மார்பின் (Morphine) என அழைக்கப்பட்டது.

ஓப்பியம் பாப்பிச் செடி 1.5 மீட்டர் உயரம் வரை வளரும். பெரிய தனித்தனி பூக்களுடையது. இதிலிருந்து கிடைப்பவை, மார்ஃபின் (Morphine) கோடின் (Codeine), தெபெய்ன் (Thebaine), பாபா வெரின் (papa verine) நோஸ்கபின் (Noscapine), நார்க்கோடலின் (Narcotaline), அமிலங்கள், மெழுகு, மற்றும் என்ஸைம்கள்.

பாப்பிச்செடி ஒரு விஷச்செடி. இதை பயிரிடுவது அரசாங்க அனுமதியுடன் தான் முடியும். இது மருத்துவரின் கண்காணிப்பின்றி உபயோகப்படுத்துவதே கூடாது.

சரித்திரம்

கற்காலத்திலிருந்தே ஓவியம் பாப்பி. உபயோகப்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. சில நிபுணர்கள் கி.மு. 4200 லிருந்தே இதன் உபயோகம் இருந்திருக்கிறது என்கின்றனர். மெஸபொடேமியா, சுமேரியர்கள், அஸ்ஸிரியர்கள், பாபிலோனியா, எகிப்தியர்கள் போன்ற பழங்குடிகள், நகரங்கள் இவற்றில் ஓபியத்தை உபயோகித்திருக்கின்றனர். சுமேரியர்கள் இதை “இன்பச் செடி” என்று அழைத்தனர். கிரேக்கர்களுக்கு நன்றாக தெரிந்திருந்த தாவரம் ஓபியம். மாவீரன் அலெக்ஸாண்டர் தான் ஓபியத்தை இந்தியா, பாரசீகம் நாடுகளுக்கு கி.மு. 330 ல் ஓபியச்செடியை அறிமுகப்படுத்தினார். கி.பி. 30 ல், ஆவஸ் கார்னெலியஸ் ஸெல்ஸஸ் (Aulus cornelius celsus) இதன் மருத்துவ உபயோகங்களை விவரித்தார்.

மூட்டுவலி, மூல நோய்கள், வயிற்று வலி, தூக்கமின்மை இவற்றுக்கு மருந்தாகவும், விஷமுறிவுக்குள் ஓபியம் பயன்படுத்தப்பட்டது.

கி.பி. 400 – 1200 நடுவிலுள்ள வருடங்களில் அரேபிய வர்த்தகர்களால் சீனாவில் ஓபியம் அறிமுகப்படுத்தப்பட்டது.

ஓபியத்தின் மருத்துவ உபயோகம் 19ம் நூற்றாண்டு வரை தொடர்ந்து வந்தது. 1841 ல் அமெரிக்க ஜனாதிபதி வில்லியம் ஹென்றி ஹாரிஸன் ஓபியத்தால் சிகிச்சை பெற்று வந்தார். அமெரிக்க உள் நாட்டு சண்டையில், அமெரிக்க படை வீரர்கள் 2.8 மில்லியன் அவுன்ஸ்கள் ஓபியம் டிங்சர், பொடி இவற்றையும் 5,00,000 ஓபியம் மாத்திரைகளையும் உபயோகித்தனர். “கடவுளின் மருந்து” என்று, அமெரிக்க படைவீரர்களால் ஓபியம் கொண்டாடப்பட்டது.

ஓபியமும், சீனாவும் இணை பிரியாமல் போயின. இதன் உபயோகத்தை பாலியலும் பயன்படுத்தினர். ஓபியத்தால் சீனா தூங்கிய தூக்கத்தை தான் நெப்போலியன் இங்கே தூங்குகிறது ஒரு பிரும்மாண்ட தேசம், அதை எழுப்பாதீர்கள் என்றான்.

பிடி, சிகரெட் பிடிப்பது போல், ஓபியப் புகைபிடிப்பதும் சைனாவில் பரவியது. ஆங்கிலேயர்கள் சீனாவுக்கு ஓபியம் ‘சப்ளையை’ நேரடியாகவும் மறைமுகமாகவும் செய்து வந்தனர். மாசேதுங்க் அரசாங்கத்தால் தான் ஓபியம் பயிரிடுவது, உண்பது, முற்றிலும் தடை செய்யப்பட்டது.

ஓபியத்தின் சில முக்கிய பொருட்கள்

மார்பின் (Morphine)

தாங்க முடியாத உடல் வலிக்கும். வேதனைக்கும் ஆட்படுகின்ற போது வலி நீக்கியாக மருத்துவர்களால் பயன்படுத்தப்பட்ட மார்பின் படிப்படியாக ஒரு போதை தரும் மருந்தாக உருவெடுத்தது. இருபதாம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட ஊசி ஏற்றும் முறையின் (Hypodermic syringe) மூலம் இதன் பயன்பாடு பரவ ஆரம்பித்தது. இதைப் பயன்படுத்திய பலரும். இதைத் தவிர்க்க ஒரு பித்து நிலைக்கு Addiction)) ஆளாகினர்.

மார்பினிலிருந்து கோடின் எனும் வலி நிவாரணி எடுக்கப்படுகிறது. இது மார்பினை விட வீரியம் குறைந்த வலி நிவாரணி, போதைப் பொருள் ஆகும். இதற்கு “அடிமை” யாவது குறைவு. இதன் பக்க விளைவுகள் – மலச்சிக்கல் பிரட்டல், வாந்தி, மயக்கம் இவை ஆகும்

பாபா வெரின் (Papa verine)

இது ஓபியத்திலிருந்து கிடைக்கும் ஒரு ஷாரம் (alkaloid). தசைகளை இலகுவாக்கும். தானாகவே ஏற்படும் தசை அசைவுகளை குணப்படுத்தவும், ஆஸ்துமா நோயுக்கு மருந்தாகவும் இது பயன்படுகிறது. இது ஆண்மைக் குறைவில் மருந்தாகவும் பயன்படும். ஆனால் இந்த மருந்து இதயத்துடிப்பை அதிகப்படுத்தும்.

ஹெராயின்

மார்பினைத்தூய்மைப்படுத்துகின்ற முயற்சி தொடர்ந்த போது கண்டுபிடிக்கப்பட்டது தான் ஹெராயன். இது மார்பினை விட இரு மடங்கு சக்தி மிக்கது. மேலும் மார்பினினால் தாண்ட முடியாத இரத்த நாள – மூளைத் தடையைத் தாண்டி (Blood, brain barrier) மூளையை ஹெராய்ன் எளிதாகச் சென்றடைந்ததும் உணரப்பட்டது.

இதை டையா-மார்பின் (Dia morphine) என்றும் சொல்லுவார்கள்.

உடனடி விளைவுகள்

அளவோடு எடுக்கப்படும் போது ஒப்பியம் வகை மருந்துகள் சிறந்த வலி நீக்கிகளாகவும், மன மகிழ்வூட்டுவனவாகவும் செயல்படுகின்றன. வலி, இருமல், வயிற்றோட்டம் போன்ற உடல் உபாதைகளிலிருந்து நிவாரணம் தருகின்றன. இருந்த போதிலும் இவை மூளையின் செயல்திறனை அமுக்கிக் கிறக்கத்தை உண்டு பண்ணுவதுடன் மூச்சுத்திறனையும் இதயத் துடிப்பையும் தாழ்த்துகின்றன. அத்துடன் இவைகளை அளவில் மிகுந்து எடுக்கின்ற போது மூச்சுத் திணறலும், நினைவற்ற நிலையும் ஏற்பட்டு மரணம் ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளன.

நாட்பட்ட விளைவுகள்

ஏறக்குறைய எல்லா ஒப்பியம் வகை மருந்துகளும் நாளடைவில் உடலின் தாங்கமைவுத்திறனை (Tolerance) உயர்த்தவே செய்கின்றன. இதனால் நாட்செல்ல நாட்செல்ல எடுக்கப்பட வேண்டிய மருந்தின் அளவு உயர்ந்து கொண்டே செல்கிறது. பல நாட்களாக இவ்வகை மருந்துகளைப் பழகி வந்தவர்கள் சில நாட்கள், ஏன், சில வேளைகள் கூட இவையின்றி இருக்க மிகுந்த துன்பப்படுகின்றனர். இம்மருந்துகள் திடீரென நிறுத்தப்படும் போது கை கால் நடுக்கம், வியர்வை மிகுதி, குளிர் சுரம், இடைவிடாத தும்மல், கொட்டாவி, தசை வலிகள் போன்ற உணர்குறிகள் தோன்றக் கூடும். மருந்தை நிறுத்திய 24 மணி நேரத்திற்குள் தோன்றக்கூடிய இக்கோளாறுகள் மறையப் பல வாரங்கள் பிடிக்கலாம்.

இவ்வகை மருந்துகளினால் ஏற்படக்கூடிய நேரடியான பக்க விளைவுகளைக் காட்டிலும் இவற்றைப் பயன்படுத்துகின்ற  தூய்மையற்ற சூழ்நிலை மற்றும் ஊசிக் குழல்கள், போலி மருந்துகள் போன்றவற்றால் ஏற்படக்கூடிய நோய்த்தொற்றுகளால் நேருகின்ற தீய விளைவுகளே மிகவும் அஞ்சுதற்குரியன. அத்துடன் இம்மருந்துகளின் பின் விளைவான பசியின்மையும், கழிவிரக்கமும், மனத்தாழ்ச்சியும் இவற்றைப் பயன்படுத்துவோரைத் தந்நிலை இழக்கச் செய்து எதிலும் பற்றில்லாதவர்களாகவும், தூய்மையற்றவர்களாகவும் ஆக்கிவிடுகின்றன.

ஒபியத்தின் இதர உபயோகங்கள்

முன்பே சொன்ன படி, ஒபியத்திலிருந்து கிடைக்கும் விதை கசகசாவில் ஒபியம் இல்லை. இதில் 44-50 சதவிகிதம் எண்ணை (பாப்பி விதை எண்ணை) உள்ளது. கசகசா இந்திய சமையலில் – கறிகள், இனிப்புகள் செய்வதில் – பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் கசகசா பெயிண்ட், வார்னிஷ், சோங் தயாரிப்புகளில் உபயோகமாகும்.

கஞ்சா (Hemp)

Cannabis Sativa (Family Cannabacea) இதன் விஞ்ஞானப் பெயர் இந்திய நாட்டில் கஞ்சா எனவும் பங்க் எனவும் அழைக்கப்பட்டுக் காடுகளில் வாழ்ந்து திரிந்த போலிச் சாமியார்களாலும் சட்டத்திற்குப் புறம்பான மனிதர்களாலும் பயன்படுத்தப்பட்டு வந்த ஒரு வகைப் போதை மருந்து இது. மரிஜ்வானா             (Marijuvana) ஹஷிஷ் (Hasish) ரெஸின் (Resin) பாட் (றிஷீt) வீட் (Weed) ஜாய்ண்ட் (Joint)  கிராஸ்  (Grass) என்ற பல்வேறு பெயர்களாலும் இது அழைக்கப்படுகின்றது.

கஞ்சாச் செடிகளின் காய்ந்த இலைகளைப் பொடி செய்து அதை பீடி, சிகரெட், சுருட்டு போன்றவற்றில் வைத்துப் புகைக்கின்ற போது கடுமையான போதை ஏற்படுகிறது. ஹெராய்ன் போலல்லாது எந்த இடத்திலும் பயிரிடப்பட்டு எளிதாக விற்பனைக்கு வரக்கூடிய இந்தப் போதைப் பொருள் மிக எளிதாக எவரும் எங்கும் பயன்படுத்தக்கூடியது. இதன் காரணமாகவே போதைப் பொருள் புகைப்பவர்களிடையே இது பெரிதும் பிரபலமாக இருக்கிறது மரிஜ்வானா என்னும் கஞ்சாவைப் புகைக்கின்ற போது அதில் இருக்கின்ற 400 வகை வேதிப் பொருள்களால் மூளையில் பல வேதியியல் மாற்றங்கள் நிகழ்கின்றன. அதிலுள்ள ஜிபிசி (Delta – 9 – tetra – hydro canabinol) எனப்படும் வேதி நுரையீரலுக்குள் சென்று இரத்த ஓட்டத்தில் கலந்து சில வினாடி நேரத்தில் மூளையைச் சென்றடைகிறது. இரத்தத்தில் இம்மருந்தின் அளவைப் பொருத்து மூளையில் மூன்று முதல் பதினைந்து வேதி மாற்றங்கள் நிகழ்கின்றன. இதனால் இதைப் புகைத்தவரது செயல்பாடு, சிந்தனை முறை, காணும் திறன், பிறரை எதிர்கொள்ளும் நிலை அனைத்திலும் மாற்றம் ஏற்படுகிறது.

தொடர்ந்து புகைக்கப்படுகின்ற போது இது மூளைச்சிதைவையும், மூச்சுக்குழல் கோளாறுகளையும் இதயக் கோளாறுகளையும் ஏற்படுத்தக்கூடும்.

கொக்கெய்ன்

கொகா (Coca) எனப்படும் ஒருவகைக் குறுஞ்செடிகளின் (கொக்கோ – cocoa அல்ல) இலைகளிலிருந்து தயாரிக்கப்படும் வெண்ணிறப் பொடி இது.

இது எடுக்கப்படும் கொகா செடியின் விஞ்ஞான பெயர் – Erythroxylan Coca. இது பொலிவீயா, பெரு போன்ற தென் அமெரிக்க தேசங்களில் காணப்படும் தாவரம்.

ஆரம்ப்பிடமின் Amphetamine) எனப்படும் செயற்கை உணர்வுத் துடிப்பூட்டியைப் (Stimulant) போல் கொக்கொய்னும் ஒருதிறன் மிக்க துடிப்பூட்டி. இதைச் சிறு குழல் மூலமாக மூக்கினுள் முகர்ந்து பயன்படுத்துகின்றனர். இதுவே ஹெராய்னுடன் சேர்த்த ஊசி மூலம் செலுத்தப்படுவதும் உண்டு. கிராக் (Crack) எனப்படும் கொக்கெய்ன், கஞ்சா கலவை அமெரிக்காவில் பெரிதும் விரும்பிப் புகைக்கப்படும் ஒரு பொருள்.

கொக்கெய்ன் பித்து நிலையை ஏற்படுத்தாது என்று முன்பு கூறப்பட்டது. ஆனால் தற்காலத்திய ஆய்வர்கள் இதை ஒப்புக் கொள்ளவில்லை. சாதாரணமாக 10 முதல் 15 சதவிகிதத்தினரிடையே பித்து நிலையை ஏற்படுத்தக்கூடிய கொக்கெய்ன் இளைஞர்களில் 50 சதவிகிதத்தினரிடையே பித்து ஏற்படுத்துகிறது என்று அண்மைய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

“தலையைத் தாக்கு முன் இதயத்தைத் தாக்குகிறது கொக்கெய்ன்” என்கிறார் டாக்டர் அர்னால்டு வாஷ்டன். நாடித்துடிப்பை நம்பமுடியாத அளவிற்கு உயர்த்துவதுடன் இரத்த அழுத்தத்தை ஆகாய உயரத்திற்கு உயர்த்தி விடுகிறது கொக்கெய்ன். அதைப் பயன்படுத்துகின்றவர் 15 வயதுப் பையனாக இருந்தால் கூட இதயத் தாக்கு ஏற்படக் கூடிய வாய்ப்புகள் மிகுதியும் உள்ளன. மூளைத் தாக்கும். வலிப்பும் எப்போது வேண்டுமானாலும் ஏற்படலாம்.

பாலுணர்வைத் தூண்டி உடலுறவில் பரவசமடையச் செய்ய வல்லது கொக்கெய்ன் என்று பலர் எண்ணுகிறார்கள். அதற்கு நேர் மாறாக கொக்கெய்ன் பாலுணர்வைச் சிறுகச் சிறுகச் சாகடித்துச் சில நாட்களில் உடலுறவிலேயே விருப்பமில்லாது செய்து விடும்.

எல்.எஸ்.டி. (L.S.D.)

லைசெர்ஜிக் ஆசிட்டைஈதைல் அமைடு (Lysergic Acid Diethylamide) எனப்படும் செயற்கை வேதியும் ஒரு போதைப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. இதனால் பெறப்படும் போதைக் கிறக்கத்தை ட்ரிப் (Trip) என்று கூறுகின்றனர். ஒரு ட்ரிப்புக்கு மிக நுண்ணிய அளவு லி.ஷி.ஞி. இருந்தாலே போதும். இது சர்க்கரைக் கட்டி வடிவிலும், சவ்வு மிட்டாய் வடிவிலும். மாத்திரையாகவும் கிடைக்கிறது.

இதை உண்ட அரை மணி நேரத்தில் ட்ரிப் தொடங்கி 4 முதல் 6 மணி வரை கற்பனைச் சிகரங்களில் வண்ணக் கனவுகளில் மிதந்து வரலாம் என்று கூறுகின்றனர். ஆனால் இதன் பின் விளைவுகளைக் கற்பனை செய்து பார்க்கவும் அச்சமாக இருக்கிறது. தொடக்கத்தில் உணர்ச்சிகளைத் தூண்டி உயரத்தில் பறக்கவிடும் இம்மருந்தினால் மாறாத மனப்பயமும், மனக்குழப்பமும் ஏற்படக்கூடும். இதைத் தொடர்ந்து உட்கொண்டவர்கள் பலரோடு சேர்ந்து இருக்கவும் கூசுவர். மனத்தளர்ச்சியும், தாழ்வுணர்வும் இவர்களை விட்டு மாறாது இருந்து விடக்கூடும். இம்மருந்தின் பயன்பாட்டால் தங்களது சிந்திக்கும் திறனையே பலர் இழந்திருக்கிறார்கள்.

இதைப் பயன்படுத்துகின்ற பெண்களில் கருச்சிதைவும், குழந்தை செத்துப் பிறப்பதுவும் மிக எளிதாக ஏற்படக்கூடும். பிறக்கின்ற குழந்தை ஊனமுடன் பிறக்கவும் கூடும்.

உலகிலேயே போதைப் பொருட்களின் பயன்பாட்டில் முதலிடம் வகிப்பது அமெரிக்கா தான் என்று எண்ணியிருந்த நிலையில் மாற்றம் ஏற்படத் தொடங்கியுள்ளது. உலகின் பிற நாடுகளிலும் போதைப் பொருள் வர்த்தகம் விரைந்து வளரத் தொடங்கியுள்ளது. இந்தியாவும் இதற்கு விலக்கல்ல. வசதி படைத்தவர்கள் மட்டும்தான் போதை மருந்துகளில் நாட்டம் கொண்டுள்ளனர் கொண்டிருந்த நிலை மாறி எளிய நிலையிலுள்ள ரிக்ஷா தொழிலாளர்கள், கூலி வேலை செய்வோர் மற்றும் பள்ளிச்சிறுவர்கள் மத்தியிலும் இது பரவி வருகிறது. இதன் பின் விளைவுகள் எண்ணிப் பார்க்க முடியாதவை.


Spread the love