இருமல் தான் எத்தனை வகை

Spread the love

மூச்சு விடுதல் என்பது வாழ்வின் அடிப்படை நியதி. மூச்சு விடுதல் தவிர்த்து எவரும் உயிர் வாழ்வது அரிது. இத்தகைய அரிய செயலுக்குத் துணையாக உள்ளது நுரையூரலும் மூச்சுக்குழலும். உயிர் வாழ்க்கை இடையறாது நடக்க வேண்டுமானால் மூச்சுக்குழலில் தடையேதும் இருக்கக் கூடாது.

அவ்வாறு தடை ஏற்படுகின்ற வேளையில் அந்தத் தடையை வலுக்கட்டாயமாக நீக்குவதற்கென இயற்கை வகுத்த வழிதான் இருமல். எனவே இருமல் ஒரு நோயன்று. பிற நோய்கள் சிலவற்றின் உணர்குறியே அது. ஆகையால் இருமலை ஒரு காப்பு அனிச்சை செயலெனக் கூறலாம். இருமுகின்ற போது மூச்சுக்குழலின் மேல் பகுதியிலிருந்து அகற்றப்பட வேண்டிய சளி பெருஞ்சக்தியுடன் வெளியேற்றப்படுகிறது.

இருமலைப் பொதுவாகப் பயனுள்ள இருமல் (Productive Cough) பயனில்லா இருமல் (Unproductive Cough) என்று இருவகைப் படுத்துவர். பயனுள்ள இருமல் ஏற்படும் போது மூச்சுப் பாதையின் மேல்பாகத்தை அடைத்திருக்கும் சளி நீக்கப்படுவதால் மூச்சுவிடுவது எளிதாகிறது. பயனில்லா இருமல் ஏற்படும்போது சளி எதுவும் வராமல் வெறும் வலியும் களைப்பும் விளைந்து தொல்லை ஏற்படும். இதை வறட்டு இருமல் (Dry Cough) எனவும் கூறுவர்.

சில வேளைகளில் தோன்றிப் பின்னர் மறைகின்ற இருமல் எல்லா வயதினரிடையேயும் காணப்படுகின்ற ஒன்றுதான். ஆனால் இவ்விருமலுக்கான காரணிகள் பலவாகக்கூடும்.

நாட்பட்ட / தோன்றி மறைகின்ற இருமலுக்கான காரணிகள் பொதுப்படையானது அரிதானது குழந்தைகள் வைரஸ் தொற்று ஆஸ்த்மா குறைபாடு
உடல் உள்ளம் சார்ந்த ஒவ்வாமை புறப்பொருள் வயது வந்தோர் புகைப்பழக்கம் வைரஸ் தொற்றுக்குப்பின் நுரையீரல் புற்று ஆஸ்த்துமா மூக்குவழி உள் ஒழுக்கு டி.பி ப்ராங்கியெக்டசிஸ் முதியோர் புகைப்பழக்கம் வைரஸ் தொற்றின்பின் நுரையீரல் புற்று
டி.பி, ஆஸ்த்துமா, இதயத் திறனிழப்பு

குழந்தைகளின் இருமல்

வைரஸ் தொற்று

தொடக்கப் பள்ளிப் பருவத்திலுள்ள பெரும்பாலான குழந்தைகள் தோன்றிப்பின் மறைகின்ற (Transient) இருமலினால் பாதிக்கப்படுகின்றனர். இதற்குக் காரணம் திரும்பத் திரும்ப ஏற்படுகின்ற வைரஸ் நுண்மத் தொற்றுதான். தொண்டைவலி, காய்ச்சல் மற்றும் மஞ்சள் நிறத்தில் சளி இருந்தால் தவிர நுண்ம உயிர்ப்பகை (Antibiotics) மருந்துகள் கொடுக்கத் தேவையில்லை. இருமலடக்கிகள் (Antitussives) போதுமானதாகும்.

ஆஸ்த்துமா

இரவு வேளைகளில் இடை விடாத இருமல் இருப்பதுடன், இருமலுடன் களைப்பும், உணர்ச்சிப் பெருக்கும் ஏற்படுமாயின் ஆஸ்த்துமா என ஐயுற இடமளிக்கலாம். ஆஸ்த்துமா எதிர்ப்பிகள் பயனளித்தால் பிரச்சனை எளிதாகிவிடும்.
உடல் உள்ளம் சார்ந்த இருமல் (Psychogenic) இது பொதுவாக 6 முதல் 10 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு ஏற்படக்கூடும். இல்லத்திலுள்ளவர்கள் தம்மைக் கவனிக்க வேண்டியதையும், பள்ளிக்குச் செல்வதை வெறுத்துப் பயந்தும், மூச்சுக் குழல் நோய் ஏற்பட்டுக் குணமான பின்னர் எழுகின்ற அச்ச உணர்வு காரணமாகவும் தோன்றக்கூடும்.

ஒவ்வாமை

பலவிதமான ஒவ்வாமையின் காரணமாக மூச்சுக்குழல் குறுக்கம் ஏற்பட்டு மூச்சுத் திணறலும் இருமலும் ஏற்படலாம். ஒவ்வாமை எதிர்ப்பிகளை உட்கொள்ளும்போது மூச்சுக்குழல் விரிவடைந்து எளிதாக மூச்சுவிட முடிவதுடன் இருமலும் மட்டுப்படும். ஒவ்வாமையை ஏற்படுத்துகின்ற அலெர்ஜன் என்னவென்றறிந்து தடுப்பாற்றுவித்தல் (Immunigation) செய்வது நல்லது.

வயது வந்தோரின் இருமல்

புகை பிடித்தல்

மிகப் பெரும்பாலானவர்களிடையே காணப்படும் இடைவிடாத இருமலுக்குப் புகைப்பழக்கம் ஒரு முக்கியமான காரணமாகிறது. தொடக்கத்தில் காலையில் படுக்கையிலிருந்து எழுந்த உடனே தோன்றத் தொடங்கும் இந்த இருமல் தொல்லை தரக்கூடும். குறிப்பாக இரவில் இதன் பாதிப்பு அதிகமாக இருப்பதில்லை. சிலருக்கு மூச்சுக்குழல் வழி செல்லும் காற்றளவு குறையவும் கூடும். இது பற்றித் துயரருக்கு எடுத்துக் கூறப்படவேண்டும். புகைப்பதை நிறுத்திய ஒரு மாதத்தில் இருமலும் பிற உணர்குறிகளும் மறைந்துவிடும்.

ப்ராங்க அழற்சி

வைரஸ் தொற்று ஏற்பட்டதைத் தொடர்ந்து பல வாரங்கள் அல்லது சில மாதங்கள் வரை இருக்கக்கூடிய இருமல் எரிச்சலையும் களைப்பையும் உண்டாக்கும். தட்ப வெப்ப நிலையில் மாறுதல் சிகரெட் அல்லது பிற உருத்தலுண்டாக்கும் புகைகள் போன்றவற்றால் அதிகப்படும். 4 வாரங்களில் குணம் ஏற்படாவிட்டால் ஆஸ்த்துமாவாகக் கருதி மருத்துவம் செய்யப்பட வேண்டும்.
ஆஸ்த்துமா

இருமல் ஒன்றே உணர்குறி, இரவும், பகலும் இருமல் ஏற்படக் கூடும். புகை, தூசி, பனிக்காற்று போன்றவற்றால் இருமலுடன் இளைப்பும் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. இளைப்பும் மூச்சுத் திணறலும் இல்லாதிருப்பினும் மூச்சுக்குழல் குறுக்கமும் உட்செல்லும் காற்றளவு குறைவும் இருக்கக்கூடும்.
நாட்பட்ட நாசிப்புரையழற்சி

(Chronic Rhinosinitis) நாட்பட்ட மூச்சுக்குழல் மேற்புறக் கோளாறு உள்ளவர்கள் தொடர்ந்து இருமல் இருப்பதாக சொல்வார்கள். புகைபிடிக்காதவர்களிடையே ஏற்படும் இருமலுக்கு இது மிகுதியும் காரணமாகவுள்ளது. நாசி மற்றும் புரைகளின் சுரப்பு மிகுகின்ற போதும், மூக்கடைப்பு இருக்கின்ற போதும் இச்சுரப்புமிடற்றினுள் (Larynx) ஒழுகுவதாலும் இருமல் ஏற்படக்கூடும். தொண்டைக்குள் சளி விழுவது போன்ற உணர்வும், அடிக்கடி காறி உமிழ்வதும் இதனை உறுதிப்படுத்தக்கூடும்.

இது பெரும்பாலும் மூச்சுக்குழல் மேற்புறப் பகுதியில் நுண்மத்தொற்று காரணமாகவே ஏற்படக்கூடும். நுண்ம உயிர்ப்பகை மருந்துகள் கொண்டு இது குணப்படுத்தப்படவேண்டும். அதில் கட்டுப்படவில்லையென்றால் ஆஸ்த்துமா என்று கருதி மருத்துவம் செய்ய வேண்டும்.

ப்ராங்கூதல் (Bronchiectasis) புகைப்பழக்கமில்லாதவர்களிடையே திரும்பத் திரும்பச்சீழ் போன்ற சளி அல்லது கோழையுடன் உண்டாகும் இருமலுக்கு ப்ராங்க ஊதல் காரணமாக இருக்கக்கூடும். ஏதோ முறிவது போன்ற சரசரவென்ற ஒலி அதவும் நுரையீரலின் அடிப்பாகத்தில் ஏற்படுகின்ற இந்த நோயை உறுதிப்படுத்தி விடலாம், எக்ஸ்ரே படத்தில் இது தெளிவாகத் தெரியாது போனாலும் சிகிஜி ஸ்கேன் அல்லது ப்ராங்கோக்ராம் மூலம் பகுத்தாய்ந்து மருத்துவம் செய்யப்படவேண்டும்.

ப்ராங்கப்புற்று

ப்ராங்கப்புற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தொடர்ந்த இருமலுடன் இரத்தம் துப்புதலும், நெஞ்சில் வலியும் இருக்கக்கூடும். குரல் மெலிதலும் காணலாம். இந்நோய் தாக்கி இருக்கும் போது எக்ஸ்ரே படங்கள் இயல்புக்கு மாறாக இருப்பது உறுதி. (Normal) வகையில் இருந்து இருமல் மட்டும் இருக்குமானால் அது புற்றுநோய் அல்ல எனக் கொள்ளலாம்.

தொடர்ந்த புகைப்பழக்கம் உள்ளவர் அண்மையில் சில காலமாகத் தொடர்ந்த இருமல் இருப்பதாகவோ அன்றி எப்போதும் இருந்து வந்த இருமல் தற்போது அதிகமாகவும் கடுமையாகவும் மாறியிருப்பதாகவோ கூறினால் அது ப்ராங்கப் புற்றாக இருக்கலாம் என்ற ஐயப்பாட்டில் ஆய்வுகள் செய்யப்பட வேண்டும்.

சாதாரணமான இருமல்களில் நெஞ்சில் தடவும் அஞ்சனங்களும் இருமலடக்கி மருந்துகளும் (Anti – tussive) ஓரளவு பலனைத் தரக்கூடும். நாட்பட்ட இருமலாக இருந்தால் சாரணம் என்னவென்றறிந்து மருத்துவம் செய்யப்பட வேண்டும். சளி அல்லது கோழை நீக்கிகளால் பயன் விளைவதில்லை.

ஆயுர்வேதம் டுடே மார்ச் 2014


Spread the love