புற்றுநோய் – வயிற்றில் (Cancer)

Spread the love

பாம்பென்றால் படையே நடுங்கும். புற்றுநோய் என்றால் உலகமே நடுங்கும். அத்தகைய கொடூரமான வியாதி ‘கான்சர்’. உலகில் 10 மில்லியனுக்கு மேற்பட்ட மக்கள் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். வளர்ந்த நாடுகளில் 4.6 மில்லியனும், வளர்ந்து வரும் நாடுகளில் 5.4 மில்லியனும், புற்றுநோயின் தாக்குதலுக்கு உட்படுகின்றனர். இந்தியாவில் 1 லட்சம் ஜனங்களில் 110 ஆண்களும், 120 பெண்களும் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர்.

புற்று நோய் என்றால் என்ன?

புற்று நோய் என்றால், ஒரு தனி ‘செல்’ லிருந்து உருவான பல செல்களின் கூட்டம், கட்டுப்படுத்த முடியாமல், விபரீதமாக வளர்ச்சி அடைவது. சுற்றியுள்ள ‘நார்மல்’ (Normal) நல்ல செல்களையெல்லாம், புற்றுநோய் செல்கள் அழித்துவிடும். நதியின் தண்ணீர் கரையை அரித்துவிடுவது போல், புற்றுநோயின் செல்கள் உடலை ‘அரித்து’ விடும். பலவகை புற்றுநோய்களில், ஜீரணமண்டல பாதிப்புகளை உணடாக்கும் புற்றுநோய் வகைகளைப் பற்றி இங்கு காண்போம்.

வாய் புற்றுநோய்

உமிழ் நீர் சுரப்பிகளில் புற்றுநோய் உண்டாகலாம். இந்த வகை புற்றுநோய் 40 வயதை தாண்டிய பெண்மணிகளை அதிகம் தாக்கும். வாய் புற்றுநோய்கள் முதலிலேயே கண்டுபிடிக்காததால், 25% வாய்ப்புண் புற்றுநோயாளிகளுக்கு இறப்பு ஏற்படுகிறது. பாரம்பரியம், புகைபிடித்தல், புகையிலை-பாக்கு இவைகளை உபயோகிப்பது, லாகிரி பொருட்களை உபயோகப்படுத்துவது என்று பலகாரணங்கள் உள்ளன. நாள்பட்ட வாய்ப்புண்கள் புற்று நோயாக மாறுகின்றன. உணவை முழுங்குவதில் சிரமம் ஏற்பட்டால், உடனே டாக்டரிடம் காண்பிக்கவும்.

உணவுக்குழாய் புற்றுநோய்

உலகில் அதிகமாக காணப்படும் புற்றுநோய்களில், உணவுக்குழாய் புற்றுநோயும் ஒன்று. உணவுக்குழாயை தாக்கும் புற்றுநோய் இரண்டு வகை

1. ஸ்குவாமஸ் செல் கார்சினோமா (Squamous cell carcinoma)

2. அடினோ கார்சினோமா (Adeno carcinoma).

உணவுக் குழாயின் எந்த இடத்தில் வேண்டுமானாலும் புற்று நோய் வரலாம். இந்த புற்றுநோய்கள் பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் வரும். மேற்சொன்னபடி, சிகரெட், மது பானங்கள் இவை முக்கிய காரணங்கள். மிகச்சூடாக உணவு, பானங்களை எடுத்துக் கொள்வதும் புற்று நோயை தோற்றுவிக்கலாம்.

வயிற்றுப் புற்றுநோய்

வயிற்று புற்று நோய்களில், 95 சதவிகிதம் அடினோ – கார்சினோமா வகை நோய்கள் தான். அடினோ கார்சினோமா என்பது சுரப்பிகளில் ஏற்படும் புற்றுநோய். எனவே வயிற்று சுவர்களை பாதிக்கும் நோயாகும். இந்த வகை புற்றுநோய், இந்தியா, ஜப்பான், சீனா, சிலி போன்ற நாடுகளில் அதிகம் காணப்படும். இந்த இரைப்பை கேன்சருக்கான காரணங்கள் நிச்சயமாக கூறமுடியாவிட்டாலும். இவை வயிற்றின் சுவற்றில் நலிந்து போன, அமிலபாதிப்பு ஏற்பட்ட இடத்திலிருந்து ஆரம்பிக்கிறது. Smoked food – கருகிய உணவை உண்பதாலும் வரும். இது ஜப்பானியர்களின் உணவுப்பழக்கம். அவர்களிடையே இந்த வகை புற்றுநோய் அதிகம் காணப்படுகிறது. பெப்டிக் அல்சர்கள் (வயிற்றுப் புண்களும்) காரணமாகலாம். அல்சரை உருவாக்கும் ‘ஹெலிகோபாக்டர் பைலோரி” (Helicobacter pylori) புற்று நோய் ஏற்படவும் காரணமாகலாம். புகைபிடித்தல், மதுகுடிப்பது, மசாலாக்கள், ஆவிபறக்கும் சூடான உணவுகள் பானங்கள், இவையெல்லாமும் காரணமாகலாம்.

திடீரென்று எடைகுறைந்தால், உடனே மருந்துவரிடம் செல்வது நல்லது. விக்கல், ஏப்பம், வாந்தி இவையெல்லாம் தொடர்ந்து இருந்தால் சிகிச்சை தேவை. தவிர மலத்துடன் ரத்தம் போனால், மூலநோய் என்று அலட்சியப்படுத்தாமல், டாக்டரிடம் செல்லவும். பல தர சிகிச்சைகளால் பெப்டிக் அல்சர்கள் குணப்படுத்த முடியாமல் போனால், புற்றுநோயாக இருக்கலாம்.

பெருங்குடல், மலக்குடல் புற்று நோய்கள்

‘பாலிப்ஸ்’ (Polyps) எனப்படும் திசுக்களின் விரல் போல் நீண்ட கட்டிகள், குடல் மற்றும் மலக்குடல் சுவர்களிலிருந்து வெளிவரும். இவை, பிற்காலத்தில் கேன்சராக மாறக் கூடும். பரம்பரையாக இந்த நிலை ஏற்பட்டால் 40 வயதுக்குள்ளேயே புற்று நோயாக மாறும். ‘ஸிக்மாய் டோஸ்கோபி’ (Sigmoidoscopy) மூலம் இந்த ‘வளர்ச்சிகளை’ கண்டுபிடிக்கலாம். கோலன் (Colon – குடல்வாலிலிருந்து மலக்குடல் வரை உள்ள பெருங்குடலின் பகுதி) – மலக்குடல் பகுதிகளில் ஏற்படும் புற்று நோய் சாதாரணமாக 40 வயதில் உருவாகி, 60-75 வயதுகளில் முழு வளர்ச்சி அடைந்து, தாக்கும்.

குதத்தில் ஏற்படும் புற்றுநோய்

இங்கு ஏற்படும் புற்றுநோய் ‘ஸ்குவாமஸ் டைப்’ மூலவியாதி போன்ற அறிகுறிகள் (இரத்தம் வருதல், குதத்தை சுற்றி எரிச்சல், அரிப்பு, வலி) தோன்றலாம். 25 சதவிகித நோயாளிகளுக்கு அறிகுறிகள் தெரிவதில்லை.

ஆயுர்வேதமும், ஜீரண மண்டல புற்றுநோய்களும்

புற்றுநோய் என்பதற்கு ஆயுர்வேதத்தில் 100 சதவிகிதம் சரியான சொல் இல்லை. ஆனால் பழங்கால ஆயுர்வேத மருந்துவர்களுக்கு புற்றுநோயின் கொடூரத்தன்மை தெரிந்திருந்தது. சாதாரண ‘புற’ வீக்கங்களை ‘அர்புதா’ என்றும் உடலின் உள் வீக்கங்களை ‘அசாதிய ரணம்’ என்றும், உடலின் உள்ளிருக்கும் ஆறாத கட்டிகளை “குல்மா” என்றும் கூறப்பட்டன. இப்போதைய “மில்லியன் டாலர்” கேள்வி – புற்று நோயை ஆயுர்வேதத்தால் குணப்படுத்த முடியுமா? என்பது தான். இதன் பதில் அலோபதியில் உள்ள பதிலேதான் – அதாவது முதலிலேயே கண்டுபிடித்தால் குணப்படுத்த முடியும் என்பது தான்.

ஆசாரிய வாகபட்டர் அர்புதாவை, ‘சாத்ய அர்புதா’ (குணப்படுத்த முடியும்)  என்றும் ‘அசாத்ய அர்புதா’  (குணப்படுத்த முடியாதவை) இருவகையான பிரித்தார். குணப்படுத்த முடிபவை, வாத, பித்த, கபத்தால் வரும் புற்றுநோய்கள், மற்றும் கொழுப்பு திசுக்களில் வரும் புற்றுநோய். வேறு இடங்களில் (ரத்தம், நாளங்கள் etc) தோன்றும் புற்று நோய்களை குணப்படுத்துவது கடினம்.

ஆயுர்வேத கொள்கைகளின் படி, புற்றுநோய், தீவிர மன வளர்ச்சிகளால் வருவது. தவிர தவறான உணவு பழக்கங்கள், தாதுப் பொருட்கள் குறைந்த உணவு, மனபரபரப்பு, மனச்சோர்வு, இவை தவிர, உடலில் நச்சுப் பொருட்கள் தேங்கிவிடுதல், உடலின் நோய்தடுப்புசக்தி குறைவு இவற்றால் புற்று நோய் வரும். இதர காரணங்கள் – சுத்தம், சுகாதாரமில்லா வாழ்க்கை முறைகள், லாகிரி வஸ்துக்களின் உபயோகம், சுற்றுப்புற சூழ்நிலை பாதிப்பு போன்றவை. வயிற்றுப் புற்றுநோயும் மிகச் சூடான அல்லது மிகக் குளிர்ச்சியான உணவும், பானங்களையும் உண்பதால் ஏற்படலாம். அளவுக்கு மீறிய புளிப்பான உணவுகள், கருகிய உணவுகளும் வயிற்றில் கட்டிகளை உருவாக்கும். இவை பிறகு புற்றுநோயாக மாறலாம். பற்களின் அசுத்தத்தால் கூட புற்றுநோய் வரலாம்.

புற்றுநோய் அறிகுறிகள் 

மல, ஜலம் கழிப்பதில் மாறுபாடுகள் ஏற்படுவது.

ஆறாத புண்கள்

உடலிலிருந்து உதிரப்போக்கு ஏற்படுவது, ரத்த வாந்தி

மார்பில் அல்லது உடலின் வேறு இடங்களில் ஏற்படும் வீக்கம் / கட்டு. தோல் தடிப்பு,

உணவு, பானங்களை முழுங்குவதில் சிரமம்.

அஜீரணம்

மச்சங்களில் மாற்றம்

தொடர்ந்த இருமல், குரல் ‘கட்டுதல்’

உடல் எடை குறைதல்

மேல்பரப்பில் பரவலான வலி

சாப்பிட்டவுடன் அடிவயிற்றில் வலி

கறுப்பு நிறத்தில் மலம் போதல்

ஆயுர்வேத சிகிச்சைகள்

ஸம் சோதன சிகிச்சை – மருந்து கலந்த நெய்கள், இதர மருந்துகள் கொடுக்கப்படுகின்றன

சமன சிகிச்சை – மூன்று தோஷங்களை சமனப்படுத்தும் விரிவான சிகிச்சை.

ரசாயன சிகிச்சை – நோயால் இழந்து பலத்தையும் வலிமையும் மீட்டு தருவது. இவை தவிர பிரத்யே பத்தியமும் பரிந்துரைக்கப்படும். நோயாளிக்கு ஏற்றவாறு விசேஷ சிகிச்சைகள் மேற்கொள்ளப்படும். நோய் தடுப்பு சக்தியை அதிகரிக்க போஷாக்கான உணவுமுறைகள் கடைபிடிக்கப்படும். புற்றுநோய் செல்களின் முக்கிய உணவு ‘சர்க்கரை’ தவிர பாலால், ஜீரண மண்டல பாதையில் உருவாகும் கோழை. புற்றுநோய் செல்களின் உணவை நிறுத்தினாலே புற்று நோய் செல்கள் உணவின்றி அழியும். தவிர அவை அமிலம் அதிகமான சூழ்நிலையை விரும்பும். மாமிசஉணவு அதிக அமிலத்தை சுரப்பதற்கு காரணமாகலாம். எனவே சைவ உணவே சிறந்தது. காய்கறி சாறுகள், பழச்சாறுகள், முழுதானியங்கள், சிலபருப்புகள், “அல்கலைன்” பெருக உதவும். இது அமிலத்திற்கு எதிரி. பச்சை காய்கறிகளை உண்பதும் கான்சரை எதிர் கொள்ள உதவும்.

புற்று நோய் ஒரு தீவிரமான வியாதி. அதற்கு முழு தீர்வு ஒருங்கிணைந்த மருத்துவ சிகிச்சை ஆயுர்வேதமும், அலோபதியும் இணைந்த சிகிச்சை முறை நல்ல பலனை அளிக்கும்.

ஆயுர்வேதம்.காம்


Spread the love