டர்னிப், சுமார் 4000 ஆண்டுகளாக பயிரிடப்பட்டு வரும் ஒரு காய்கறி ஆகும். கிரேக்கர்கள் முதலில் பயிரிடப்பட்டனர் அதுவே பிற்காலத்தில் பிற நாடுகளுக்கும் சென்றது. கிரேக்க இலக்கியங்களில் டர்னிப் பல பாராட்டுதல்களையும் கூட பெற்றுள்ள ஒரு காய்கறியாகும். அங்கு இதன் பெயர் நிபஸ் அல்லது நேபஸ், நம் தமிழ்நாட்டில் டர்னிப்பிற்கு அவ்வளவு மரியாதை கிடையாது என்று தான் சொல்ல வேண்டும். இதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று அதன் நாற்றம் மற்றொன்று அது விலை மலிவாகக் கிடைப்பதால் பல ஓட்டல்களில் பயன்படுத்தப்படுவது.
டர்னிப் குரூசிஃபெரே எனும் தாவரவியல் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு கிழங்கு வகை ஆகும். இக் குடும்பத்தைச் சார்ந்த பிற காய்கறிகளாவன காலிபிளவர், முட்டைக்கோஸ், புரொகோலி, ப்ரசல்ஸ் மற்றும் ஸ்ப்ரௌட்ஸ் ஆகும். இக் குடும்பக் காய்கறிகள் அனைத்திற்குமே அந்த ஒரு வகை காட்டமான நெடி இருக்கத்தான் செய்யும். டர்னிப் மிகவும் சத்து நிறைந்தது. அதில் அதிக அளவில் நார்ச்சத்து, வைட்டமின்சி, ஙி6, ஃபோலேட், கால்ஷியம், பொட்டாஷியம் மற்றும் காப்பர் போன்ற சத்துக்கள் உள்ளன.
டர்னிப் உருளைக்கிழங்கு மற்றும் முட்டைக்கோஸ் பயன்படுத்தும் அனைத்து சமையல் முறைகளிலும் அவற்றுடன் சேர்த்தோ அல்லது அவற்றிற்கு பதிலாகவோ பயன்படுத்தலாம்.
டர்னிப்பில் புற்று நோயை எதிர்க்கும் 10ற்கும் மேற்பட்ட சத்துக்கள் உள்ளன இவை அனைத்தும் ஆரோக்கியத்தைப் பேணிப் பாதுகாத்து புற்றுநோய் வராமல் தடுக்கும் ஆற்றல் கொண்டவை.
டர்னிப்களை நறுக்கி சமையல் செய்யும் பொழுது இன்டோல் 3 கார்பினால் எனும் ஒரு வகை வேதிப்பொருள் வெளியேறுகிறது. இது மார்பகப் புற்று நோய்க்கு காரணமாக இருக்கக் கூடிய செல்களை கட்டுப்படுத்துகின்றது. இதனால் கட்டிககள் வளர்வது தடுக்கப்படுகின்றது.
நாம் டர்னிப் கிழங்கை எடுத்துக் கொண்டு இலைகளைத் தூக்கி எறிந்து விடுகின்றோம். ஆனால் இலைகளும் கிழங்குகளுக்கு நிகரான மருத்துவ குணங்களும், ஆரோக்கிய குணங்களும் நல்ல சுவையும் கொண்டவை இலைகளின் மருத்துவ குணங்களாவன:
மூட்டுவலியை போக்கும்.
நுரையீரலைப் பாதுகாக்கும்
குடல் புற்றுநோயை தவிர்க்கும்
மூளைச் செயல்பாட்டைத் தூண்டும்.
டர்னிப்பை, உருளைக்கிழங்கு எவ்வாறு எப்போது பயன்படுத்துகிறோமோ அவ்வாறு இப்படியெல்லாம் பயன்படுத்தலாம். தண்ணீரில் இட்டு வேக வைக்கும் பொழுது அரை எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து விட்டால் அந்த கெட்ட நெடி மாயமாக மறைந்து விடும். வேகவைத்து பொறித்து, வதக்கி, கூட்டு கறி. என எல்லா விதமாகவும் டர்னிப்பை பயன்படுத்தலாம். டர்னிப் சூப் வெளிநாடுகளில் மிகவும் பிரபலம். வெளிநாடுகுளில் டர்னிப்பை சிறிது வெண்ணெய் சேர்த்து இட்லி வேக வைப்பது போல ஆவியில் வேக வைத்து உருளைக்கிழங்கிற்கு பதிலாக உபயோகிக்கப்படுகின்றது.
அடுத்த முறை மார்க்கெட்டிற்குச் செல்லும் பொழுது டர்னிப் இலையுடன் கிடைத்தால் விடாதீர்கள். டர்னிப் இலையை பூண்டு, வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கி பொறியலாக செய்து சாப்பிடுட்டுப் பாருங்கள். நல்ல ஆரோக்கியமும் சுவையும் லேசான கசப்புடன் கிடைக்கும்.
டர்னிப் சூப்
தேவையான பொருட்கள்
டர்னிப் – 1
கேரட்- 1
எலுமிச்சம்பழம்- 1/2 பழம்
பெரிய வெங்காயம்- 1 (பொடியாக நறுக்கியது)
வெண்ணெய்- 1 மேஜைக்கரண்டி
மிளகுத்தூள்- 1/2 டீஸ்பூன் (தேவைக்கு)
உப்பு- தேவைக்கு
செய்முறை
டர்னிப் கேரட் இரண்டையும் தோல் சீவி நன்குக்கழுவி பொடியாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் இட்டு எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து 2 டம்ளர் தண்ணீர் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விடவும். அல்லது குக்கரில் 2 சத்தம் வேக வைக்கவும்.
வாணலியை வைத்து அதில் வெண்ணெயைச் சேர்த்து நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தையும் சேர்த்து நன்கு வதக்கவும். நன்கு வதங்கியவுடன் அதில் வேகவைத்து இறக்கி வைத்துள்ள கேரட் டர்னிப் அதன் தண்ணீர் எல்லாவற்றையும் சேர்த்து கொதிக்க விடவும் கொதித்தவுடன் மிளகுத்தூள் தூவி இறக்கவும்.
தேவையெனில் கொத்தமல்லி சிறிதும் சேர்த்துக் கொள்ளலாம்.
டர்னிப் உசிலி
தேவையான பொருட்கள்
கடலைப்பருப்பு- 100 கிராம் (3மணி நேரம் நீரில் ஊறியது.)
டர்னிப்- 100 கிராம் (தோல் சீவி துருவியது.)
பெரிய வெங்காயம்- 1 நறுக்கியது
பச்சை மிளகாய்- 2
சிறிய மிளகாய்- 1
சீரகம்- 1/2 டீஸ்பூன்
உப்பு- தேவைக்கு
கடுகு, உளுத்தம்பருப்பு,
பெருங்காயம் – சிறிது
எண்ணெய்- 2 ஸ்பூன்
செய்முறை
பச்சை மிளகாய், சிறிய மிளகாய், சீரகம் ஆகியவற்றை கரகரப்பாக அரைத்துக்கொள்ளவும். வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு உளுத்தம் பருப்பு, பெரிய வெங்காயத்தையும் சேர்த்து நன்கு வதக்கவும்.
அதனுடன் ஊற வைத்துள்ள கடலைப்பருப்பு மற்றும் துருவிய டர்னிப்பை சேர்த்து உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். அதனுடன் கரகரப்பான விழுதையும் சேர்த்து நன்கு வேக விடவும்.