மஞ்சள் என்றதும் மங்கலகரம் தான் நம் நினைவிற்கு வரும். மனதில் சந்தோஷம் பெருகும். அந்த அளவிற்கு மங்கலகரமானது, மங்கலப் பொருட்களுள் முதலிடம் வகிப்பதும் மஞ்சளேயாகும். இவற்றிற்கு எல்லாம் அது பெற்றுள்ள நிறமே முதற்காரணமாகின்றது.
அனைத்து சுப காரியங்களிலும் மஞ்சள் பிரதான இடத்தைப் பிடித்து விடுகின்றது. சுப காரியங்களில் பெண்களுக்கு மஞ்சளை, வெற்றிலை பாக்குடன் சேர்த்து அளிக்கின்றனர். புதிய ஆடைகளை மஞ்சள் தடவி தான் சாமி கும்பிடுகின்றோம். புதிய ஆண்டு வியாபாரம் போன்றவை ஆரம்பிக்கும் பொழுதும் மஞ்சளைத் தான் பிரதானமாக அனைத்து பொருட்களிலும் இட்டு இறைவனை வணங்குகின்றோம். சமையலுக்கும் மஞ்சள் தூளை பயன்படுத்துகின்றோம். பெண்கள் மஞ்சளை அரைத்துப் பூசி நீராடுகின்றனர்.
மஞ்சள் நிறம் அனைவரையும் வசீகரிக்கக் கூடிய நிறமாகவும், அனைவருக்கும் ஏற்புடையதாகவும் அமைந்திருப்பதால் அனைவருக்கும் மஞ்சளைப் பிடிக்கின்றது. மஞ்சளில் பல வகை காணப்படுகின்றது. அவற்றில் சில…
விரல் மஞ்சள்
இது விரல்களைப் போன்று நீல வடிவத்தில் இருக்கும். இது சிறந்த கிருமி நாசினி இதனை உணவில் சேர்த்து உண்பதால் உணவில் உள்ள கிருமிகளின் விஷத்தன்மையை முறிக்கும். இதனை கறி மஞ்சள் எனவும் கூறலாம். இதனை ஆண் மஞ்சள் எனவும் கூறலாம்.
குண்டு மஞ்சள்
இது குண்டாக பம்பரம் போன்று காணப்படும். இதனை பெண் மஞ்சள் என்றும் கூறுவர். இதனை பெண்கள் உடலில் தேய்த்து குளிக்கின்றனர். இது தேகத்தில் உள்ள தேவையற்ற ரோமங்களை நீக்கும். சுருக்கம் ஏற்படாதவாறு காக்கும். இது உறுப்புகளில் அரிப்பு புண் போன்றவை இருந்தால் போக்கும்.
கஸ்தூரி
இது அதிக வாசனையையுடைய மஞ்சள். இது வாசனைப் பொருட்கள் தயாரிப்பில் அதிகம் பயன்படுகின்றது. இது வில்லை போன்று தட்டையாக இருக்கும். இது மருத்துவ குணம் நிறைந்தது. வெண்குஷ்டம் போன்ற நோய்களுக்கு பயனளிக்கின்றது. பல மருத்துவ தயாரிப்புகளிலும் இது பயன்படுகின்றது.
நாக மஞ்சள்
இது கொடி போன்ற செடிகளில் தோன்றும் ஒரு வகை மஞ்சள். வலி வெட்டுக் காயம் போன்றவற்றிற்கு இது ஓர் சிறந்த மருந்து. இதுவும் அதிக வாசனையையுடையது. இது புரையோடிய புண்களை ஆற்றிடும்.
பலா மஞ்சள்
இதுவும் ஒரு வகை. இது பலா மரத்தில் ஒட்டுண்ணி போல ஒட்டி வளரக் கூடியது. இதற்கு தனியான வேர் இருக்காது. இது சிறந்த மருத்துவ குணம் படைத்தது. வீக்கத்தை போக்கக் கூடியது. அம்மை, தழும்புகள் முகத்தில் இருப்பின் இதனை தடவி வர தழும்புகள் மறையும்.
குரங்கு மஞ்சள்
இது காடுகளில் வளரக்கூடிய செடி வகை மஞ்சள். இதன் இலையை காட்டில் அலையும் குரங்குகள் பறித்து முகத்தில் தேய்த்துக் கொள்வதைக் காணலாம். இது ஊரல், தேமல், சொறி போன்றவற்றிற்கு ஒரு சிறந்த மருந்தாகும்.
மர மஞ்சள்
இவ்வகை மஞ்சள், மரங்களில் இருந்து பெறப்படுபவை. இவை சரும நோய்களுக்கு ஒப்பற்ற மருந்தாகும். இது விஷத் தன்மையையும் முறியடிக்கக் கூடியது.
காட்டு மஞ்சள்
இவ்வகை மஞ்சள், காடுகளில் மட்டுமே காணப்படுபவை. இதுவும், சிறந்த மருத்துவ குணத்தைப் பெற்றவை. இது உடல் வலி, எரிச்சல் போன்றவற்றைப் போக்கிடும் எனவே, இது வாத நோய்களுக்கு சிறந்த நிவாரணம் அளிப்பவை. நீர் தோஷம் காய்ச்சல் தாகம் போன்றவற்றிற்கு நற்பலன் அளித்திடும்.
மருத்துவ குணங்கள்
பொதுவாக மஞ்சள் அனைத்து சரும நோய்களுக்கும் பயன் தரக்கூடியது. மஞ்சள் புண்ணுக்கு மேல் பூசுவதற்கு சிறந்த மருந்தாகும். கட்டி பழுத்து உடைய, வெட்டுக்காயம், உள் காயம், தீக்காயம், சேற்றுப்புண், நகச்சுற்றி, தலையில் காயம், நரம்பு சிலந்தி போன்ற அனைத்திற்கும் வெளிபூச்சு மருந்தாக பயன்படுத்திடலாம். மஞ்சளை சுட்டு மூக்கில் வைத்து உறிஞ்சினால் மூக்கடைப்பு நீங்கும். பசும்பாலுடன் மஞ்சள் தூளைக் கலந்து பருகினால் வறட்டு இருமல் நீங்கும். கஸ்தூரி மஞ்சள், புதினா, கருந்துளசி, உப்பு ஆகியவற்றை சம அளவு எடுத்து பொடியாக்கி பல்பொடி போல உபயோகித்தால் பல்வலி நீங்கும். குழந்தைகளின் வயிற்றுப் போக்கின் போது மஞ்சள் தூள், சர்க்கரை, உப்பு ஆகியவற்றை அரைத்து தலையில் பூசி சிறிது நேரம் கழித்து குளித்து வர நீங்கும். பெண்களின் மாதவிடாய் கால வயிற்று வலிக்கு ஒரு டம்ளர் வெந்நீரில் சிறிது மஞ்சள் தூள், உப்பு, எலுமிச்சை சாறு ஆகியவற்றை கலந்து பருகிட மாயமாய் மறைந்திடும்.
மஞ்சள் கிழங்கு வகையைச் சார்ந்தது. Curcuma Longa என்ற தாவரவியல் பெயரைக் கொண்டது. இவ்வகையைச் சேர்ந்ததே Curcuma Amada என்று அழைக்கப்படும் மாங்காய் இஞ்சியாகும்.