உணவில் மஞ்சளின் பங்கு

Spread the love

“ உணவே மருந்து மருந்தே உணவு”  என்பது தமிழ் மருத்துவத்தின் தத்துவமாகும். நோய் வராமல் தடுத்துக் கொள்ளவதும் நோய் வந்தால் அதை உணவின் மூலமே நீக்கிக் கொள்வதும் இல்லந்தோறும் இருந்து வரும் மருத்துவக் கலையாகும்.

மஞ்சள் உணவில் சுவையைக் கூட்டவும் பயன்படுகிறது. எலுமிச்சசாதம் செய்யும் போது மஞ்சள் சேர்க்கவில்லையானால் புளிப்பு மட்டுமே நமக்குத் தெரியும். மஞ்சள் சேர்த்தால் சுவையும், மணமும் கூடி விடும். மேலும், மஞ்சள் உணவுப்பொருட்களை கெடாமலும் பாதுகாக்கிறது.

உணவில் தொற்றுக் கிருமிகளை அழிக்கிறது. நீண்ட நேரம் உணவைக் கெடாமல் பாதுகாக்கிறது. அது மட்டுமல்ல, உணவில் விஷ சம்பந்தமான பொருட்கள் நமக்குத் தெரியாமல் கலந்திருந்தாலும், அதையும் அழித்து தூய்மையான உணவாக மாற்றி விடுகிறது. அசைவ உணவுகளில் மஞ்சள் சேராமல் இருக்காது. அது மாமிச நெடியை மாற்றி சுவையை அசைவ உணவில் கூட்டுகிறது. இனி, இம் மஞ்சளில் மருத்துவப் பயன்களை நாம் காணலாம்.

அழகு சாதனப் பொருட்களில் முதன்மையானது மஞ்சள், மஞ்சள் பூசிக் குளிக்கும் பெண்களின் அழகே அலாதி. இதன் மணமும், நுண் சத்துகளும் நோய் எதிர்ப்புச் சக்தியைத் தோலுக்குத் தருவதால், பல விதமான அழகு சாதனப் பொருட்களிலும், சரும நோய்களுக்கும் மஞ்சள் முதன்மையான பொருளாகச் சேர்க்கப்படுகிறது.

உடல் மினுமினுப்பாக:

ஒரு சிட்டிகை மஞ்சள்பொடி, இரண்டொரு இதழ் உயர்ந்த குங்குமப்பூவை 1டம்ளர் பாலில் கலந்து காய்ச்சி, சிறிது கற்கண்டு சேர்த்து தினமும் இரவு படுக்கப் போகும் முன் பருகிவர உடல் பார்ப்பதற்கு பளபளப்பாகவும், மினுமினுப்பாகவும் காட்சி தரும்.

கருத்த தோல் சிவப்பாக:

மஞ்சள், இஞ்சி, சந்தனம்  மூன்றையும் தேவையான அளவு எடுத்து, பால்விட்டு குழம்பு பதமாகும் வரை அரைத்து, இக்குழம்பை உடலெங்கும் பூசி உலர்ந்ததும் குளிக்க உடல் சிவப்பாகும¢. மஞ்சள் பொடியை 2 சிட்டிகை அளவு பசும்பால் கறந்த நுரையுடன் சேர்த்து சாப்பிட உஷ்ண இருமல், தொண்டைப்புண் நீங்கும். மஞ்சள் பொடி கலந்த தண்ணீரில் உப்பு சிறிது கலந்து வாய் கொப்பளிக்க நாக்கிலுள்ள புண் மற்றும் தொண்டை வலி குணமாகும்.

சளி பிடித்துக் கொண்டு மூக்கடைப்பு இருந்தால், ஒரு மஞ்சள் துண்டை ஓர் ஊசியில் குத்தி நெருப்பில் சுட அதிலிருந்து புகை வரும். அதை முகர சளி குறையும். மூக்கடைப்பும் குணமாகும், மேலும், வெறும் வயிற்றில் 1 டிஸ்பூன் மஞ்சள் தூளை 1 டம்ளர் பாலில் கலந்து காலை, மாலை இரண்டு வேளை உணவுக்கு முன் குடித்துவர ஆஸ்துமா தொல்லை தணியும். தொண்டை எரிச்சலும் இதனால் சாந்தப்படும்.

கண்ணில் சதை வளர்வதற்கு அறுவை சிகிச்சை வேண்டாம். பச்சைமஞ்சள், நந்தியாவட்டப்பூ, முரங்கைப்பூ, பொன்னாங்கண்ணி, சிறுகீரை இலைகள் கைப்படியளவு எடுத்து, எலுமிச்சம் பழச்சாறு 100மில்லி கிளிஞ்சல் சுண்ணாம்புத் தெளிவு நீர் 100மில்லி கிளிஞ்சல் சுண்ணாம்புத் தெளிவு நீர் 100மில்லி விட்டு நன்றாக இடித்துப்பிழிந்து, அச்சாற்றிற்கு சமன் பசு நெய் கலந்து அதில் அதிமதுரம், கோஷ்டம், ஏலம், சண்பகப்பூ இவைகள் ஒவ்வொன்றும் 2கிராம் அளவு வாங்கி இடித்து தூளாக்கிக் கலந்து காய்ச்ச வேண்டும். நீர்ச் சத்து வற்றியதும் வடித்து வைத்துக்கொண்டு, தினமும் காலை, இரவு 2துளி, சதை வளர்ச்சியுள்ள கண்ணில் விட்டுவர சதை கரையும்.

தீப்பட்ட புண் விரைவில் ஆற:

இப்புண் குணமாக மருந்து போடும் முன் மஞ்சள் கஷாயத்தில் நன்கு கழுவி விட வேண்டும். அதன்பின் கொட்டைப் பாக்கை இடித்து தூள் செய்து சமமாக மஞ்சள் தூளையும் கலந்து தேங்காய் எண்ணெயில் போட்டு கலந்து காய்ச்சி வடிகட்டி வைத்துக் கொண்டு, தீப்பட்ட புண்கள் மீது அடிக்கடி போட்டு வர விரைவில் புண் ஆறி வடுக்கள் சுவடு இல்லாமல் காணப்படும்.

மருதாணி இலையை, எலுமிச்சம் சாறுவிட்டரைத்து, மஞ்சள்பொடி கலந்து, அத்துடன் சிறிது சுண்ணாம்பும் சேர்த்து அரைத்துக் கட்ட வெட்டுக் காயம் குணமாகும். வீக்கத்திற்கு எருக்கம் மாலைப் பூசி அதன்மீது மஞ்சள் பொடியை வைப்பது இன்றும் கிராமத்து வாக்கமாக உள்ளது.

பொன்னுக்கு வீங்கி” என்று சொல்லப்படும் புட்டாலம்மை நோய்க்கு காலங்காலமாய் நம் முன்னோர்கள் பயன்படுத்திய மூலிகைகள் இரண்டு அவை மஞ்சள் மற்றும் வேம்பு ஆகும். மஞ்சள் தூளையும், வேப்பிலையும் நன்கரைத்து பகாதுக்கு கீழ் வீங்கியிருக்கும் பகுதிகளில் பூசிவர புட்டாலம்மை வீக்கம் கரைந்து குணமாகும்.


Spread the love