“சே, சுண்டைக்காய் பயல், என்ன பேச்சு பேசிவிட்டான்” என்றவாறு வீட்டினுள் நுழைந்தார் விசுவநாதன். “ஏன், என்னவாயிற்று” என்று கேட்டவாறு அவரை வரவேற்றார் அவர் அம்மா பார்வதி “அவன் தான், உனது 2 வது பிள்ளை என்றார் விசுவநாதன். பார்வதி “அது சரி”, சுண்டைக்காய் என்றால் என்ன அவ்வளவு கேவலமா? இதோ பார், விசாலத்திற்கு சுண்டைக்காய் குழம்பு தான் செய்து கொண்டிருக்கிறேன், பிரசவித்த பெண்களுக்கு இந்த குழம்பு தான் பத்தியம்” என்றாள் பார்வதி, பிரசவத்திற்கு வந்திருக்கும் விசாலம் விசுவநாதனின் தங்கை. ‘சுண்டைக்காய் வற்றல் குழம்பா, எனக்கும் கொடேன்‘ என்றார் விசுவநாதன்.
சாப்பிட்டு முடிந்ததும், “சுண்டை வற்றல் குழம்பும், பருப்புத் துகையலும் பிரமாதம்.” என்ற விசுவநாதனிடம், சிரித்தவாறே அவர் மனைவி சுண்டைக்காயை பற்றிய சொற்பொழிவை தொடங்கினாள். அவள் பாட்னி (ஙிஷீtணீஸீஹ்) படித்தவள்.
“இனிமேல் அடிக்கடி உங்களுக்கு சுண்டைக்காய் தான். உங்களின் “வீசிங்” குறையும். ‘லங்ஸில்‘ (நுரையீரல்) சளி, கிருமிகள் சேர விடாமல் செய்யும் சுண்டைக்காய். ஆஸ்துமாவை குணப்படுத்தும். அதுவும் மழைக்காலத்தில் நீங்கள் படும் கஷ்டத்தை குறைக்கும். உங்கள் வயிற்றில் பூச்சிகள் இருந்தால் அதையும் சுண்டைக்காய் போக்கும். அமீபியாஸிஸ்ஸை உண்டாக்கும் அமீபாவை கொல்லும். நீங்கள் இப்போதெல்லாம் சரியாகவே சாப்பிடுவதில்லை. சுண்டைக்காய் வற்றலை நல்லெண்ணையில் வறுத்து, பொடித்து, சூடான சாதத்தில் உருக்கிய நெய்விட்டு பிசைந்து, வாரம் இரண்டு முறை சாப்பிடுங்கள், “பசி எடுக்கும்” என்றாள்.
சுண்டைக்காயை பற்றி மேலும் சில விவரங்கள்
தாவரவியல் பெயர்- Solanum Varbascifolium (மலைச்சுண்டை), Solanum torvum
100 கிராம் உலர்ந்த சுண்டைக்காயில் உள்ளவை
ஈரம்- 12.3 கி, புரதம் – 8.3 கி, கொழுப்பு – 1.7 கி, தாதுப்பொருட்கள் – 5.1 கி, நார்ச்சத்து – 17.6 கி, கார்போஹைட்ரேட்ஸ் – 55 கி, கால்சியம் – 390 மி.கி, பாஸ்பரஸ் – 180 மி.கி, அயச்சத்து – 22.2 மி.கி, சுண்டைக்காயில் சிறிதளவு கரோட்டீனும் உள்ளது.
இதர பயன்கள்
பொதுக்குணம் – கோழையை அகற்றும், கிருமி நாசினி, பசியைத் தூண்டும்.
கழுவிய சுண்டைக்காய் உலர வைத்து, நன்றாக மோர் / தயிர், உப்புக் கலந்து, காய வைத்து உலர்த்தி ஜாடி / பாட்டிலில் எடுத்து வைத்துக் கொள்ளவும். இதை வறுத்து, வறுக்காமலேயே உணவில் பயன்படுத்தலாம். நுரையீரலை வலிமையாக்கும்.
சித்த வைத்திய பாடல் ஒன்று சொல்வது
பித்தஅ ரோசகம்போம் பேராப் புழுச்சாகும்
உற்ற கிராணியறும் உட்பசியாஞ் – சத்தியமாய்ப்
பண்டைக் குதஆமம் பற்றுமிங்கி யாரையுந்தான்
சுண்டைக்காய் வற்றலுண்ணச் சொல்.
சுண்டை வற்றல், கறிவேப்பிலை, மாங்கொட்டை பருப்பு, ஓமம், நெல்லி வற்றல், மாதுளை ஓடு, வெந்தயம் இவற்றை ஓரெடை எடுத்துக் கொண்டு, தனித்தனியே தினமும் மூன்று சிட்டிகை பொடியை மோரில் கலந்து கொடுக்க, மந்தம், பித்த அஜீரணம், வயிற்றுப் பூச்சிகள், மார்ச்சளி, மூலம் போன்றவை விலகும்.
சுண்டைக்காய் வற்றல், இருமல், ஏப்பம், வயிற்று வலியை போக்கும். வயிற்றுப் புண்ணை (அல்சர்) ஆற்றும்.
தாய்ப்பால் ஊட்டும் பெண்கள், கர்ப்பிணிப் பெண்கள் இவர்களுக்கு சுண்டைக்காய் வற்றல் நல்ல டானிக். இரும்புச்சத்து இருப்பதால் சோகை குறையும்.