மனித உடலில் சிறுநீரகமானது மொச்சைக் கொட்டை போன்ற வடிவத்தில் காணப்படும். முதுகு எலும்பின் பின்பக்கத்தில் பக்கத்திற்கு ஒன்றாக இடுப்பில் (மொத்தம் 2) இருக்கும். வலது பக்கத்தில் உள்ள சிறுநீரகம் இடது பக்கத்தில் உள்ளதை விட சிறிது தாழ்வாக இருக்கும். சிறுநீரகம் ஒவ்வொன்றும் 4 அங்குல நீளமும், இரண்டரை அங்குல அகலமும் ஒன்றரை அங்குல கனமும் இருக்கும். கருஞ்சிவப்பு கலந்த பழுப்பு நிறமாக இருக்கும். சிறுநீரகம் சிறுநீரைப் பிரிக்கின்றது. பித்த நீரை உடனே வெளியே அனுப்பி விடுவதில்லை. சிறுநீரைச் சேர்த்து வைத்திருக்கும் பகுதி சிறுநீர்ப் பை, மூத்திரப் பை என்று கூறப்படுகிறது. சிறுநீர்ப்பை இடுப்பு எலும்புக் கூட்டின் குழியில் உள்ள சவ்வு படலத்தால் உண்டான ஒரு பை ஆகும். சிறுநீரகத்தில் இருந்து நீர்க்குழாய் வழியாக சிறுநீர்ப்பையில் சிறுநீர் வந்து சேருகிறது.
சிறுநீர் நிறைந்து காணப்படும் பொழுது இந்தப் பை உருண்டை வடிவமாகத் தோன்றும். சிறுநீர்ப்பை நிறைந்தவுடன் சிறுநீர்ப் புறக்குழாய் வழியாக வெளியே வருகிறது. ஆண்களின் சிறுநீர்க் குழாய் பொதுவாக எட்டு அங்குல நீளமும் பெண்களுக்கு இரண்டு அங்குல நீளமும் இருக்கும்.
சிறுநீர்ப் பிரிக்கப்படும் பகுதி, சேமித்து வைக்கப்படும் பை, வெளியே அனுப்புவதற்கு உதவும் குழாய், வெளியே தெரியும் பிறப்புறுப்பு முதலியவை எல்லாம் சேர்த்து சிறுநீரக இயக்க மண்டலம் என்று கூறப்படுகிறது. சிறுநீரகத்தில் தோன்றும் நோய்கள், குறைகள் தான் சிறுநீரக நோய்கள் என்று கூறப்படுகிறது.
சிறுநீரகத்தில் தோன்றும் சிக்கல்கள் என்ன?
சிறுநீர்க் குறைவதால் உண்டாவது, சிறுநீர் அதிகம் வெளியேறுவதால் உண்டாவது என சிறுநீரக நோய்களை இருவகையாக பிரிக்கலாம். இவற்றுள் நீர் அடைப்பு, சொட்டு நீர், நீர்க்கட்டு, கல் அடைப்பு, அதி மூத்திரம், நீரிழிவு முதலியவை குறிப்பிடத்தக்க நோய்களாகும்.
நீர் அடைப்பு:
நீர் சுருங்கி அளவில் குறைந்து வெளியேறுவதை நீரடைப்பு என்கிறோம். இது ஒரு வகையான நீர்ச் சுருக்கு ஆகும். சிறுநீர்க் குழாயில் எரிச்சலும், வயிறு விம்மி வலி ஏற்படுதலும் உண்டாகும். நோய் அதிகமானால் வயிற்றில் நீர் கோர்த்து வீங்குதலுடன் சிறுநீர் குறைவாக வெளி வருவதுடன் சிறுநீரில் இரத்தமும், கருப்பு நிறமும் கலந்து வரும். சிறுநீர்ப் புழையில் எரிச்சல், நமைச்சல், வலித்தல் முதலியவைகளுடன் சூட்டுடன் சிறுநீர் இறங்கும். சில நேரங்களில் சிறுநீருடன் இரத்தம் கலந்தும் வெளிவரும். நீர் வருவதற்கு முன்போ, பின்போ ரத்தம் வெளியாவதும் உண்டு. சூட்டை உண்டாக்கக் கூடிய உணவுகளை உண்பதாலும், அடிக்கடி சைக்கிள், மோட்டார் சைக்கிள் போன்றவைகளில் உட்காந்து பயணம் செய்வதாலும் எப்போதும் அமர்ந்த நிலையிலேயே பணிபுரிவதாலும், சிறுநீரை அடக்குவதாலும், வாதம் கெட்டு விடுவதாலும் நீரடைப்பு நோய் உண்டாகிறது.
நீர்க்கட்டு:
அதிக நேரம் சிறுநீர்க் கழிக்காமல் அடக்கி வைத்திருந்தால் சிறுநீர் இறங்காமல் இருக்கும். இதனை சிறு நீர்க் கட்டு என்று கூறுவார்கள். சிறுநீரகத்தில் உள்ள கறிகளால் அடைப்பு உண்டாவதால், வெப்பத்தால் அல்லது வாயுவால் சூடாகி சரியாக நீர் பிரிக்கும் வேலை தடைபடுவதால் நீர்க்கட்டு ஏற்படும்.
சொட்டு நீர்:
இளைப்பு நோய், வயிற்றுப் புழு, மற்ற சிறுநீரகக் கோளாறுகள் காரணமாக, சிறுநீர் பெய்வதை அடக்கி வைத்திருத்தல் காரணமாக தெரிந்தும் தெரியாமலும் சொட்டு சொட்டாக நீர் ஒழுகிக் கொண்டிருக்கும். இதனையே சொட்டு நீர் என்று கூறுகிறோம். நீரிழிவு, வெள்ளை, நரம்புத் தளர்ச்சி, பாரிச வாயு, பவுத்திரம் முதலிய நோய்களின் கடுமை இருக்கும் பொழுதும் இது உண்டாகும். பெரும்பாலும் இது ஒரு நோயல்ல. இதன் அறிகுறிகள், காரணம் தெரிந்து தகுந்த மருந்துகளை உட்கொள்ள குணம் கிடைக்கும்.
நீர்க்கடுப்பு:
சிறுநீர் கழிவது குறைந்து விடும். ஒரு சில சமயங்களில் சிறுநீர் வெளியாகமல் இருந்து விடும். சிறுநீர்க் குழாயில் குத்தல், வலி, எரிச்சல், முதலியவை உண்டாகும். முகத்தை வீங்கச் செய்து சொட்டு சொட்டாக நீர் இறங்கும். இதனையே நீர்ச் சுருக்கு என்கிறோம். வெப்பத்தை உண்டாக்கக் கூடிய உணவுகளை அதிகமாக உண்பதால், நெருப்புக்கு அருகில் உட்கார்ந்து அதிக நேரம் வேலை செய்வதால், மது வகைகளை அளவுக்கு அதிகமாக அருந்துவதால், வெயிலில் திரிவதால் நீர்க்கடுப்பு தோன்றலாம். உடற்பயிற்சி அதிகம் செய்பவர்களுக்கு, வெள்ளையின் பாதிப்பு உள்ளவர்களுக்கு, அளவுக்கு மீறி உடலுறவு கொள்பவர்களுக்கும் நீர்க்கடுப்பு தோன்றலாம். இது வாத நீ£க்கடுப்பு, பித்த நீர்க்கடுப்பு, கப நீர்க்கடுப்பு மற்றும் மேக நீர்க்கடுப்பு என்று 4 வகைப்படும்.
கல்லடைப்பு:
சிறுநீர்க் கழிக்கும் பொழுது திடீரென அடைபடுதல், குறி முனையில் வலி ஏற்படுதல், சிறுநீர்க் குழாயில் எரிதல், இடுப்பின் பின் புறத்தில் முதுகுத் தண்டின் பக்கம் வலி ஏற்படுதல், சிறுநீரில் மணல் போன்ற கற்கள் உண்டாகுதல் இந்த நோயின் பொதுவான அறிகுறிகள் ஆகும். அழுகல், ஊசிப் போன பண்டம், மாப்பண்டம், வாதம், பித்தத்தை உண்டாக்கும் அல்லது அதிகரிக்கச் செய்யும் உணவுகளை உட்கொள்வதால், சிறுநீரில் கற்கள் போன்றவைகள் உண்டாகிப் பருத்து சிறுநீர்ப் பாதையை அடைத்துக் கொள்வதை கல்லடைப்பு என்கிறோம். இதுவும் வாத கல்லடைப்பு, பித்தக் கல்லடைப்பு, கபக் கல்லடைப்பு, முத்தோஷ கல்லடைப்பு என்று நான்கு வகைப்படும்.
அதிமூத்திரம்:
அளவுக்கு அதிகமாக சிறுநீர் வெளியேறுவது அதிமூத்திரம் எனப்படும். அளவு கடந்த இனிப்பு, நைப்புமுள்ள உணவுகளை உட்கொள்ளுதல், அதிக உடலுறவு கொள்ளுதல், உட்கார்ந்தே இருத்தல் அதிமூத்திரம் உருவாகக் காரணமாகும். அதிமூத்திரம் வாதத்தால் உண்டாவது நான்கு, பித்தத்தால் உண்டாவது ஆறு, கபத்தால் உண்டாவது பத்து என மொத்தம் 20 வகைப்படும். மேலும், சிறுநீரக நோய்கள் பாக்டீரியா, பூஞ்சைகள், பாலியல் நோய்கள், காச நோய்க் கிருமிகள் போன்ற பல விதமான கிருமிகளாலும் ஏற்படுகின்றன.
சிறுநீரக நோய்களுக்குச் சிறந்த மருந்து நெருஞ்சில்:
சிறுநீர் சீராக வெளியேற உதவும் அற்புத மூலிகை நெருஞ்சி ஆகும். யானை வணங்கி என்ற பெயரும் இதற்குண்டு. பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பிருந்தே ஆயுர்வேதத்திலும் சீன வைத்தியத்திலும் நெருஞ்சி பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. இந்த மூலிகையை சிறுநீரகம், கல்லீரல் பாதிப்புகள், சோரியாசிஸ், எக்சிமா போன்ற சரும வியாதிகளுக்கு பயன்படுத்துகின்றனர். கிரேக்கர்கள் சிறுநீர் சுலபமாக பிரியவும், மனநிலை மாற்றத்திற்கும் நெருஞ்சிலை பயன்படுத்தினர். ஆயுர்வேத ஆசான் சரகர் நெருஞ்சிலை சிறந்த ஐந்து சிறுநீர் பெருக்கும் மூலிகைகளில் ஒன்றாக கூறியுள்ளார்.
சிறுநீர்ப் பாதையில் எரிச்சல், வலி குணம் பெற:
நெருஞ்சி செடியுடன் நித்திய கல்யாணி பூ சம அளவு எடுத்து நீர் விட்டு காய்ச்சி வடிகட்டி பாலும், சர்க்கரையும் கலந்து காலையில் மட்டும் குடித்து வர வேண்டும்.
சிறுநீர் உப்பு நீங்க உதவும் நெருஞ்சி முள் சூரணம்:
சிறுநீரில் உப்பு அதிகம், இருந்தால் தலைச் சுற்றல், மயக்கம், கால் வீக்கம் உண்டாகும். சிறுநீர் பெய்து காய்ந்த இடத்தில் சுண்ணாம்புக் கறை படிந்திருக்கும். இதற்கு உப்பை உணவில் நீக்க வேண்டும். தேவையானால் இந்துப்பை வறுத்துப் பொடியாக்கி வழக்கத்தை விட பாதியளவு உப்பு சேர்த்து சாப்பிடலாம். நெருஞ்சி முள் சூரணம் அல்லது நெருஞ்சி முள் கியாழத்தை சாப்பிடலாம். நெருஞ்சி முள்ளை இடித்து பொடியாக செய்து கொள்வது சூரணம் எனப்படும். அதனையே நீர் விட்டுக் காய்ச்சிக் குடிப்பது கியாழம் எனப்படும். சிறுநீரகப் பாதையில் ஏற்படும் வலிகளுக்கு பாலில் கொதிக்க வைத்த நெருஞ்சி கஷாயம் சிறந்த பலனைத் தரும். நெருஞ்சில் சூரணத்துடன் தேனும், ஆட்டின் பாலும் கலந்து குடித்து வர சிறுநீரக் கற்கள் வெளியேறும்.
சிறுநீர் கழிக்கும் பொழுது ஏற்படும் எரிச்சலுக்கு தனியா விதைகளுடன் நெருஞ்சில் சேர்த்து செய்யப்பட்ட கஷாயம் நிவாரணமளிக்கும். அனு£ரியா என்னும் சிறுநீர் வராமல் போகும் நோய்க்கு, நெருஞ்சி கலந்த கோக்குராதி க்ருதம் (மூலிகை சேர்ந்த நெய்) நல்ல மருந்தாகும்.