இளநரையைப் போக்க என்ன மருந்து?

Spread the love

உடலில் சூடு அதிகரித்தால் தோலின் அருகே சூடு அதிகமாகும். அச் சூடு மயிர்க் கால்களையும் பாதிக்கும் அவற்றில் அழற்சி ஏற்பட்டு முடி நரைக்கும்.

கோபதாபம், பயம் போன்ற உணர்ச்சிகள்¢ இச் சூட்டை அதிகப்படுத்தும். முடியும் நரைக்கும், இதற்கு நிவாரணம் என்ன? வாரம் இரண்டு தடவை எண்ணை தேய்த்துக் குளிக்க வேண்டும். இரண்டு, மூன்று மாதங்களுக்கு ஒருதடவை பேதிக்குச் சாப்பிட வேண்டும். இரவில் தூங்குமுன் உள்ளங்கால்களில் எண்ணை தடவிக் கொள்ள வேண்டும்.

சில பிருங்காதித் தைலம் அல்லது பிருங்காமலகத் தைலத்தை தலையில் தடவவும். தலைமுடி அழுக்கடையாது. செம்பட்டை நிறமாகாது. சிக்குபிடிக்காது. ஈரமுள்ள தலையில் எண்ணை தடவக் கூடாது. ஈரம் உலர வேண்டும். எண்ணையை லேசாகத் தடவிக் குளிக்கலாம்.

கரிசலாங்கண்ணி இலை, நெல்லி முள்ளி, அதிமதுரத்தைப் பாலில் அரைத்து, நன்கு குழப்பி லேசாக சுடவைத்து தலையில் தடவவும். ஊறிக் குளிக்கவும்.

குடலில் தங்கக் கூடிய கழிவுப் பொருள்கள் உடலில் சூட்டை அதிகப்படுத்தும். எனவே பேதி மருந்து சாப்பிட்டு அவற்றை வெளியேற்ற வேண்டும். திராட்சை, கடுக்காய் கஷாயம் அல்லது சூரத் தாவரை விதையை ஊறவைத்து அத் தண்ணீரை இருமாதங்களுக்கு ஒருமுறை சாப்பிட வேண்டும்.

உள்ளங்கால் சூடு, கண்களையும், தலைமயிரையும் பாதிக்கும். இன்றைய சிமெண்ட், தார் ரோட்டில் நடப்பதால் சூடு ஏறும். இரவில் தூங்குமுன் கால்களை நன்கு சுத்தம் செய்து, சிறிது நல்லெண்ணையை உள்ளங்கால்களில் தேய்க்க நல்லதூக்கம் வரும். கண் எரிச்சல், உடல் சூடு மட்டுப்படும்.

இதற்கான மருந்து: திரிபலா சூரணம் 5 கிராம் எடுத்து நெய், தேனுடன் கலந்து இரவில் தூங்குமுன் சாப்பிடவும். சியவனப்ராசம் 5 கிராம் காலை, மாலை வெறும் வயிற்றில் சாப்பிடவும். நாரசிம்ஹ ரசாயனம் 5 கிராம் காலை, மாலை, உணவு உண்டபின் சாப்பிடவும். இவை முடியைக் கறுக்கச் செய்யும் உடல் நலம் பெறும்.

ஆயுர்வேதம்.காம்


Spread the love