ஆழ்நிலை தியானம்

Spread the love

T M அல்லது Transcendental Meditation எனப்படும் ஆழ்நிலை தியானம் என்ற பெயரைக் கேட்டதுமே 1960 களிலும், 70 களிலும் பிரபலமாக இருந்த தாடி வளர்த்த பீட்டில்ஸ்களும், மகரிஹிகளும், பெல் – பாட்டம் ட்ரவு சர்களும், போதை மருந்துகளும் நம் நினைவில் வலம் வரக்கூடும்.

ஆனால் இவையெல்லாம் தற்போது அடங்கிவிட்ட நிலையில் TM மட்டும் நின்று நிலைபெற்று விட்டது. இன்று இன்று உலகமெங்கும் சுமார் 60 லட்சம் இதைப் பயின்று பயன்படுத்தி வருகின்றனர். இங்கிலாந்தில் மட்டும் 2 லட்சம் பேர் இதில் ஈடுபட்டுள்ளனர்.

ஸென் என்றும், தய் சூச்சுஹான் என்றும், அய்கிடோ என்றும் பல தியான முறைகள் இருந்த போதிலும், TM எனப்படும் இந்த ஆழ்நிலை தியானம் மக்களிடையே மிகவும் பிரசித்தி பெற்று விட்டது. அத்துடன் இதன் பண்பும், பயனும் பல அறிவியல் ஆய்வுகளின் மூலம் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதன் காரணமாகவே இப்பயிற்சி முறை மொழி, சமயம், மார்க்கம் போன்ற குறுகிய எல்லைகளையெல்லாம் கடந்து பரந்து விரிந்து நிற்கிறது. இன்றையளவில் TM சமயச் சார்புடைய நிலையிலிருந்து மாறி, மன இறுக்கமும், மனத் தொய்வும், மகிழ்ச்சியின்மையும் மாற்றுகின்ற ஒரு அரிய மருத்துவ முறையாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

கி.பி. 2000 த்தில் உங்களுடைய மருத்துவரே இத்தியான முறையை உங்களுக்குப் பரிந்துரைக்கக் கூடிய வாய்ப்பு உண்டாகலாம். சுமார் 7000 க்கும் மேற்பட்ட பிரிட்டிஷ் மருத்துவர்கள் இதைக் கற்றுத் தேர்ந்திருக்கின்றனர். இதைப் பயிற்றுவிக்கின்ற வகுப்பு ஒன்றில் சேர்ந்து பயின்றீர்களானால் உங்களுக்கு அடுத்தாற்போல் அமர்ந்திருப்பவர் ஒரு பேங்க் மானேஜராகவோ ஒரு நிறுவனத்தின் சேர்மனாகவோ, ஒரு பேராசிரியராகவோ இருக்கக் கூடும்.

இதைத் தோற்றுவித்துப் பிரபலப் படுத்தியவர்களின் எண்ணமும், இலக்கும் எதுவாக இருப்பினும் இது பற்றி அவர்கள் நடத்திய ஆய்வுகள் பாராட்டிற்குரியவை. ஏறத்தாழ 500 ஆய்வுகள் நடத்தப் பெற்று அறிக்கைகள் வெளியிடப்பெற்றுள்ளன.

இங்கொன்றும், அங்கொன்றுமாக ஏனோ தானோ வென்று எடுபிபிகள் சிலரால் செய்யப்பட்ட ஆய்வுகள் அல்ல இவை. அறிவியலாராலும், அறிஞர்களாலும் பெரிதும் மதிக்கப்படுகின்ற அறிவியல் மற்றும் மருத்துவ இதழ்களால் நடத்தப் பெற்றவை இவை.

பரபரப்பு, பற்றார்வம், மனக்கலக்கம், மனத்தவிப்பு, மனத்தொய்வு, தூக்கமின்மை, மன இறுக்கம், ஒற்றைத் தலைவலி, உயர் இரத்த அழுத்தம், மாதவிடாய்க்குமுன் தோன்றும் வேதனை, மலக்குடல் குறைபாடு போன்ற பல குறைபாடுகளை நீக்கவல்லது. இது தியான முறையெனக் கருதப்படுகிறது. அதிலும் குறிப்பாக மூப்படைவதையே இத்தியான முறை தடை செய்யக் கூடும் என ஒரு ஆய்வு முடிவு உறுதிப்படுத்துகிறது.

அலைந்து திரிகின்ற மனதை ஒரு நிலைப்படுத்தி அதன் மூலம் ஒரு ஆழ்ந்த மன அமைதியையும், மன நிலையையும் பெறுவது தான் எல்லா விதமான தியான முறைகளின் நோக்கமாகும். ஆழ்நிலை தியானத்தின் நன்மைகள் பற்றிப் பேசுகின்ற போது “ஒவ்வொரு நாளும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மனத்தின் செயல்பாட்டைத் தற்காலிகமாக நிறுத்திக் கற்றுக் கொள்வது என்பது உடல் நலம் பேண உதவுகின்ற ஒரு நல்ல முறையாகும். நாள் தோறும் நமது நரம்பு மண்டலத்தில் ஏற்படுகின்ற தேய்மானங்களை நீக்கி நரம்புகளை நெறிப்படுத்தி உள்ளத்திற்குப் புத்துணர்ச்சியும், புது உணர்வும் தருவதுடன் நமது தடுப்பாற்றல் சக்தியை உயர்த்தவும் மனநிலை தொடர்புடைய நோய்களைத் தடுக்கவும் உதவுகிறது” என்று தமது Meditation for Every body (Penquin) என்னும் நூலில் குறிப்பிடுகிறார் புகழ் மிக்க உளவியலாரான லூயி புரோடோ.

இலக்கின்றி அலைகின்ற மனதை அடக்கி, அதன் பொருளற்ற புலம்பல்களை நிறுத்தி உள்ளத்தில் சாந்தியும், அமைதியும் நிலவச் செய்வதே தியான முறையாகும். ஆனால் இதைச் செய்கின்ற வழி ஒவ்வொரு தியான முறைக்கும் வேறுபடுகிறது. ஆழ்நிலை தியானத்தைப் பொருத்தவரை அமைதியான முறையில் அமர்ந்து ஒரு மந்திரத்தைத் திரும்பத் திரும்ப சுமார் 15 முதல் 20 நிமிடங்கள் வரை இடைவிடாமல் மனதிற்குள் ஜெபம் செய்வதாகும். மனப்பாடம் செய்கின்ற காலத்தில் மனம் சில நிமிட நேரம் மனத்தில் ஒன்றலாம். சில நேரம் விலகியும் போகலாம். அது பற்றிக் கவலை கொள்ளாமல் திரும்பத் திரும்ப மனிதனை ஒரு முகப்படுத்த வேண்டும். நாட்கள் செல்லச் செல்ல, பழக்கம் மனதில் படியப், படிய தொடர்பில்லாத சிந்தனைகள் வருவதும் மனம் அலைபாய்வதும் மட்டுப்படும். மேற்பரப்பில் உயர்ந்தும், தாழ்ந்தும் அலை அலைபாய்கின்ற கடலின் அடியில் சென்று பார்த்தால் நீரின் கீழே ஒரு ஆழ்ந்த அமைதி தென்படுவது தெரியும். அந்த நிலையை ஆழ்நிலை தியானத்தின் மூலம் மனதிற்குள் உணர முடியும்.

‘ Feel Great with TM’ என்னும் தமது நூலில் ” TM என்னும் இவ்வரிய பயிற்சி, மன முறுக்கினை அவிழ்த்து, உடற் தசைகளைத் தளர்வித்து இதுவரை உணராத ஒரு புத்துணர்ச்சியைத் தருகிறது”, என்று கூறுகிறார்கள். ஜிம் ஆண்டர்சனும், பில் ஸ்டீவன்சனும், அமைதியான நிலையில் எழுகின்ற சிந்தனைகள் வலுமிக்கதாகவும், ஆழ் மனதிலிருந்து எழுவதாகவும் இருப்பதாக அறியப்பட்டுள்ளது.

உரத்த குரலில் ஜெபிப்பதும், மனப்பாடம் செய்வதும் (Chanting) புத்த மதத்தினரின் ஸென் (Zen) எனப்படும் தியான முறையில் பின்பற்றப்படுகிறது. இதில் ஒரே சீராக மூச்சு விடுவதும் மார்பு உயர்ந்து தாழ்வதுமே உணரப்படுகிறது. விபாஸ்ஸனா என்னும் மற்றுமொரு வகைப் புத்த மதத்தினரின் தியான முறையில் உடலிலிருந்து விடுபட்ட நிலையில், வெளியிலிருந்து கொண்டு, உடலையும், மனதையும் உற்று நோக்குதல் (Insight Meditation) பயிலப்படுகிறது.

தய் சூ ச்சுஹான் என்னும் போர்க் களப் பயிற்சி முறையும் அய்க்கிடோ (AIKIDO) என்னும் ஜப்பானியப் பயிற்சியும் அசைவு அல்லது இயக்கத்தின் மூலம் செய்யப்படுகின்ற தியான முறைகள் என்று கருதப்படுகின்றன. இந்து சமயத்தினரின் யோக முறையும் (yoga) கிறிஸ்தவ சமயத்தினரின் ஜெபமுறை வழிபாடும் (Rosary & Litany) தியானம் பயிலுவதற்குச் சிறந்த வழியாக அமைகின்றன.


Spread the love