கால் ஆணி தவிர்ப்பது எப்படி?

Spread the love

உடலின் ஒட்டுமொத்த எடையையும் தாங்குபவை கால்களும் பாதங்களும்தான். நம்முடைய இயக்கத்தின்போது ஏற்படக்கூடிய டன் கணக்கிலான உடலின் அழுத்தத்தைத் தாங்கும் அற்புதமான அமைப்பு அது. பாதம் 26 எலும்புகளையும், 33 மூட்டுகளையும், 50க்கும் மேற்பட்ட தசைநார்களையும், இரண்டரை லட்சத்துக்கும் மேற்பட்ட வியர்வைச் சுரப்பிகளையும் உள்ளடக்கிய அமைப்பு. உடலைத் தாங்குவது மட்டுமல்ல… உடல் சந்திக்கும் பிரச்னைகளை வெளிப்படுத்தும் இடமாகவும் பாதங்கள் இருக்கின்றன. பாதப்பராமரிப்பு இன்மையால் பூஞ்சைத் தொற்று முதல் பல பிரச்னைகள் காலில் ஏற்படுகின்றன. இவற்றில் ஒன்று பாத ஆணி. பாதங்களின் அடிப்பாக  சதைப்பகுதியில் ஏற்படுவதால், பெரும்பாலும் நம்மால் இதை ஆரம்பத்திலேயே கண்டறிய முடிவதில்லை.

அறிகுறிகள்

பாதத்தில் தொடர் அழுத்தம் ஏற்படும்போது வெள்ளை நிறத்தில் தோல் தடித்து, சிறிய மேடு போன்று உருவாகும். தொடர்ந்து மேற்புறத் தோல் உலர்ந்து, கொப்புளம் ஏற்படும். சில நேரங்களில் சீழ் கோத்து, உடைந்து ரத்தப்பெருக்கும் ஏற்படும். நடக்கும்போதும் நிற்கும்போதும் தாங்க முடியாத வலி ஏற்படும். பொதுவாக, உள்ளங்கால்களில்தான் ஆணி ஏற்படும். எனினும், சில நேரங்களில் தேய்ந்த காலணிகளைப் பயன்படுத்துவது, கால்களைச் சுத்தமாகப் பராமரிக்காதது போன்றவற்றின் காரணமாகக் கால் விரல்களின் பக்கவாட்டிலும் ஆணிகள் ஏற்படலாம்.

காரணங்கள்

`கால் ஆணி’ என்பது அதிகமான உடல் அழுத்தம் காரணமாக உருவாகிறது. மேலும், அளவு குறைந்த காலணிகளை அணிவது உட்படப் பல்வேறு அழுத்தங்களால் கால்களில் ஆணி ஏற்படுகிறது. அதேபோல சாதாரணமாக வெறும் கால்களில் நடக்கும்போது, தோல் தடித்துப்போனாலோ, லேசாகச் சிராய்ப்பு ஏற்பட்டாலோ  யாரும் பெரிதாக எடுத்துக்கொள்வது இல்லை. கால் ஆணி ஏற்பட இதுவும் ஒரு முக்கியக் காரணம். சர்க்கரைநோய் அல்லது பெரிஃபெரல் வாஸ்குலர் நோய் (Peripheral Vascular Disease) பாதிப்பின் காரணமாகவும் ஆணி ஏற்படும். இதுதவிர, காலில் ஏற்படும் அலர்ஜி காரணமாகவும் உடலில் அதிகமாக ஏற்படும் வெப்பம் காரணமாகவும், அசுத்தமான இடங்களில் உள்ள கிருமிகளாலும் இந்தப் பிரச்னை பலருக்கு ஏற்படுகிறது.

சிகிச்சை

மென்மையான சோப்பைப் பயன்படுத்திப் பாதத்தைக் கழுவலாம். கால்களைச் சுத்தம் செய்த பிறகு, மருத்துவர் பரிந்துரைக்கும் களிம்புகளைத் தேய்க்கலாம். அதேபோல், டிகெராட்டினிசேஷன் க்ரீம் (Dekeratinization creams) போன்ற மாய்ஸ்சரைசர் க்ரீம்களைக் கால்களில் தடவலாம். இந்த க்ரீம்களில் உள்ள கெராட்டின், இறந்த செல்களை அகற்ற உதவும். சிலருக்குக் கால் ஆணியைச் சரிசெய்ய அறுவைசிகிச்சை செய்ய வேண்டியிருக்கும்.  சுய சிகிச்சை செய்துகொள்வது தீங்கு விளைவிக்கும். குறிப்பாக, சர்க்கரை நோயாளியாக இருந்தால், கால்களை அகற்றவேண்டிய அளவுக்குப் பிரச்னை பெரிதாகலாம். எனவே, மருத்துவரை ஆலோசிப்பதுதான் சரியான வழி.

முன்னெச்சரிக்கை நடவடிக்கை

கால்களைச் சுத்தமாகப் பராமரிக்க வேண்டும். பாதங்களைச் சோப்புப் போட்டுக் கழுவி, சுத்தமான துணியால் நன்கு துடைக்க வேண்டும். பாதத்துக்குப் பொருத்தமான சரியான அளவிலான காலணிகளை அணிய வேண்டும்.  அழுத்தமான ஷூக்களையோ, பெரிய அளவிலான (லூசான) ஷூக்களையோ அணியக் கூடாது. கால் ஆணி பாதிப்புக்கு உள்ளானவர்கள், மருத்துவர்களின் ஆலோசனைப்படி அவர்களுடைய கால்களுக்குப் பொருத்தமான காலணிகளைத் தேர்ந்தெடுக்கலாம். சர்க்கரை நோயாளிகள் ஆண்டுதோறும் கால்களைப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

– ஜி.லட்சுமணன்


Spread the love
error: Content is protected !!