கேள்வி: ஐயா, ஓட்டல் ஒன்றில் பணியாளராக பணியாற்றும் என் வயது 28. கடந்த ஒரு வருடமாக கால் ஆணியின் காரணமாக நடக்க முடியாமல் அவதிப்படுகின்றேன். இதற்கு என்ன மருந்து சாப்பிட வேண்டும்?
பதில்: பொதுவாக கால்களில் பித்த வெடிப்பு, கால் ஆணி, குதிகால் வலி என மூன்றில் ஏதாவது ஒன்று மனிதர்களைப் பாதிக்கிறது. பித்த வெடிப்புக்கு அடுத்தபடியாக கால் ஆணி மனிதனுக்கு ஏற்படுத்தும் சிரமங்கள் காலைத் தரையில் வைக்க முடியாத அளவிற்கு வலியைத் தருகிறது. அதிகமான உடல் அழுத்தம் காரணமாக கால் ஆணி ஏற்படுகிறது.
காலுக்குப் பொருந்தாத சிறிய அளவு செருப்புகளை பயன்படுத்துவது, கால் ஆணி உடையவர்களின் செருப்புகளைப் பயன்படுத்தினால் அதை பயன்படுத்துபவர்களுக்கும் கால் ஆணி வர வாய்ப்புள்ளது. வெறும் காலில் நடப்பதாலும் கால் ஆணி ஏற்படும். கால் ஆணி ஏற்பட்டுவிட்டால் உடனடியாக அதனைச் சரிபடுத்திட முயற்சிக்கவில்லையெனில், தரையில் கால் முழுவதும் பரவி நடக்க முடியாத நிலைக்குப் போய் விடும்.
கால் ஆணி குணப்படுத்த எளிய சிகிச்சைகள் பல உள்ளன
1. கால் ஆணி ஏற்பட்ட உடனே பூண்டை நசுக்கி அதன் சாறை காலில் ஆணி இருக்கும் இடங்களில் தடவி வரவும்.
2. இரவு து£ங்கச் செல்லும் முன்பு பூண்டை நசுக்கி காலில் வைத்து பருத்தி துணி அல்லது பேண்டேஜ் மூலம் கட்டுப் போட்டு விட்டு காலையில் எடுத்து விடவும்.. ஒரு வாரம் தொடர்ந்து இதனை செய்து வர குணம் கிடைக்கும்.
3. சிறிதளவு மருதாணி இலை, சிறிதளவு மஞ்சள் துண்டு இரண்டையும் எடுத்து நன்றாக மை போல அரைத்துக் கொள்ளவும். அரைத்த கலவையில் இருந்து நெல்லிக்காய் அளவு எடுத்துக் கொண்டு இரவு படுக்கச் செல்லும் முன்பு கால் ஆணி உள்ள இடத்தில் வைத்து தொடர்ந்து 10 நாட்கள் செய்ய வேண்டும்.
4. மருதாணி ஒரு கைப்பிடி அளவு, மஞ்சள் ஒரு துண்டு, வசம்பு ஒரு துண்டு எடுத்து மை போல அரைத்து கால் ஆணி மீது தொடர்ச்சியாக 21 நாட்கள் பூசி வர கால் ஆணி குணமாகும்.
5. அம்மான் பச்சரிசி என்னும் மூலிகையின் இலை, தண்டுகளை உடைத்தால் பால் தோன்றும். அதனை எடுத்து கால் ஆணி இருக்கும் இடத்தில் தடவி வர கால் ஆணி மறைந்து போகும்.
6. மல்லிகைச் செடி இலைகளை இடித்து அதன் சாறை எடுத்து பாதத்தில் இட்டு பற்று போட கால் ஆணி மேலும் மறைந்து விடும்.
7. வெள்ளெருக்கு இலைகளை அரைத்து தினசரி காலை, மாலை இரு வேளையும் கால் ஆணி மேல் பற்று போட்டு வர கால் ஆணி குணமாகும்.