பிறந்த குழந்தையின் முதல் உணவு தாய்ப்பால்

Spread the love

குழந்தையானது கருவாக தாயின் கர்ப்பப்பையில் உருவானது முதல் மற்றும் அதன் இரண்டு வயது நிறைவு பெறுவதற்குள் இடைப்பட்ட சுமார் 1000 நாட்களில் தான் குழந்தையின் எதிர்காலமே தீர்மானிக்கப்படுகிறது. மேற்கூறிய முக்கியமான அந்த காலகட்டத்தில் சரியான தேர்ந்தெடுக்கப்பட்ட ஊட்டச்சத்துக்களை குழந்தை பெற்றுக் கொள்வதன் மூலம் மட்டுமே அதனுடைய உடல் வளர்ச்சி, கற்றுக் கொள்ளக் கூடிய புத்திக் கூர்மை மற்றும் அதனுள்ள ஆற்றல்களை மேம்படுத்திக் கொள்ள இயலும்.

தாய்ப்பாலின் அவசியம்.

தாயானவள் தனது உடலில் சுரக்கும் தாய்ப்பாலின் தரமும், அளவும் அவள் உணவில் எடுத்துக் கொள்ளும் சத்துகளை அதிகம் பெறுவதைப் பொறுத்து உள்ளது. குழந்தைக்கு தாய்ப்பால் வழங்கும் சமயங்களில் தாய்மார்களுக்கு தினசரி 300 முதல் 500 கலோரி சத்துக்கள் கூடுதலாக தேவைப்படுகின்றன என்பதால், சரியான சமச்சீரான சத்துக்கள் அடங்கிய உணவுகளை உட்கொள்வது அவசியமாகிறது. அதிக அளவு தண்ணீர் அருந்த வேண்டும்.

முடிந்த வரை ஓய்வு எடுத்துக் கொள்வதும் அவசியம். கைக் குழந்தைகளுக்கு முக்கியமான முதல் உணவு தாய்ப்பால் தான். குழந்தைக்கு நோய் எதிர்ப்புச் சக்தியை, நுண்ணுயிர்க் கிருமிகளினை எதிர்க்கும் ஆற்றலை அதிகம் தருவது தாய்ப்பால் தான். என்ஸைம்கள், மூளையின் வளர்ச்சிக்கு அவசியம் தேவைப்படும் கொழுப்பு அமிலங்களை தாய்ப்பால் அதிகம் கொண்டுள்ளது. உடல் உள் அழற்சி எதிர்ப்புச் சக்தியைக் கொண்டது.

தாய்ப்பாலில் உள்ள புரதமானது, எளிதாக செரிமானம் ஆக கூடிய தன்மை உடையது. குழந்தைகளுக்கு எளிதில் ஏற்றுக் கொள்ளக்கூடியது. கொழுப்பு மற்றும் கால்சியச் சத்துகள் எளிதாக குழந்தையின் உடலில் உறிஞ்சிக் கொள்ள இயலுகிறது. தாய்ப்பாலில் உள்ள லேக்டோஸ் சர்க்கரை எளிதில் ஆற்றலை வழங்குகிறது,

இது லேக்டிக் அமிலமாக மாறும் பொழுது வயிற்றினுள் குடல் பகுதியில் உள்ள பாக்டிரியாக் கிருமிகளை அழித்து விடுவதுடன் கால்சியம் மற்றும் இதர தாது உப்புகளை எளிதாக கிரகித்துக் கொள்கிறது. இளம் தாய்மார்களில் ஊட்டச் சத்தான உணவு உட்கொள்வதைப் பொறுத்து அவர்களிடம் சுரக்கும் தாய்ப்பாலில் கிடைக்கும் தையாமின், வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின்C சத்துக்கள் அளவு அதிகரிக்கிறது.

தாய்ப்பால் வழங்கும் தாய்மார்களின் கவனத்திற்கு

குழந்தை பிறந்த ஒரு மணி நேரத்திற்குள் குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்ட வேண்டும். இதன் மூலம் பிறக்கும் குழநதைகளின் மீது பரவும் தொற்றுகளில் இருந்து பாதுகாப்பு பெறலாம். மேலும் இதனால் பிறக்கும் குழந்தைகளின் இறப்பு விகிதத்தைக் குறைக்கிறது.

முதல் ஆறு மாதங்கள் பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டுவது மிகவும் அவசியம். பிறந்தது முதல் இரண்டு வருடங்கள் வரை தாய்ப்பாலூட்டலாம். அத்துடன் பிறந்த 6 மாதங்களுக்குப் பின்னர் சத்துக்கள் அடங்கிய திட வகை உணவுகளை போதுமான அளவு குழந்தைகளுக்கு வழங்க தொடங்கலாம். அதற்கு முன்னர் வேறு வகையான உணவுகள் அளிப்பதால் சத்துக் குறைபாடு மற்றும் தொற்றுக்களும் ஏற்பட்டு குழந்தையின் ஆரோக்கியம் சீர் கெடும்.

அழகு குறையும் என்பதற்காக, குழந்தைக்கு பால் தருவதை மறுத்தால் அல்லது நிறுத்தினால் மார்பகப் புற்று நோய் ஏற்படும் வாய்ப்பு 90 சதவீதம் உள்ளது. தாய்ப்பால் குழந்தைக்கு கொடுக்காவிட்டால், மார்பகம் சுருங்கி அழகும் குறைந்து, அடுத்த குழந்தைக்கு பால் சுரப்பதும் குறைந்து விடும். தாய்ப்பால் தருவதால், தாயின் கர்ப்பப்பை சுருங்கி, வயிறு குறையும். குடும்ப கட்டுப்பாடு இயற்கையாகவே கிடைக்கும். குழந்தைகளுக்கு தரப்படும் தாய்ப்பால் தினசரி ஒரு லிட்டர் சுரக்கிறது என்றால், தாயின் உடலில் இருந்து ஒரு லிட்டர் சத்துள்ள திரவம் வெளியேறுகிறது என்று தான் கருத வேண்டும். அப்படியெனில் அந்த ஒரு லிட்டர் திரவத்தினை ஈடுகட்டுவதற்கு தாய் சத்துகள் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமாகிறது.

இயற்கை உணவு மூலம் தாய்ப்பால் குறைவதைத் தடுக்கலாம்

உலகிலேயே மிகச் சிறந்த உயிர்ச் சத்துக்கள் கொண்ட திரவங்கள் புத்தம் புதியபழங்கள், காய்கறிகளில் இருந்து தான் கிடைக்கிறது. இவற்றில் சுமார் 80 சதவீதத்திற்கு மேல் தண்ணீர் தான் உள்ளது. எல்லா விதமான பழங்களையும் சாப்பிடலாம். திராட்சை, ஆரஞ்சு பழங்களை சாப்பிடுவது சிரமமாக இருந்தால் பழச்சாறு எடுத்து அருந்தலாம். தினமும் காரட் சாறு அருந்தி வரலாம்.

முளை விட்ட நிலக்கடலை ஒரு கைப்பிடி அளவு எடுத்து கொண்டு, அதனுடன் முந்திரிப் பருப்பு நான்கு அல்லது ஐந்து எடுத்துக் கொண்டு அனைத்தையும் நீர் விட்டு மிக்ஸியில் இட்டு அரைத்துக் கொண்டு மெல்லிய பருத்தித் துணி மூலம் பிழிந்தெடுத்தால் சுமார் ஒரு டம்ளர் நிலக்கடலைப் பால் கிடைக்கும். இதனுடன் தேன் அல்லது வெல்லம் கலந்து தினமும் ஒரு டம்ளர் அருந்தி வரலாம்.

அருகம்புல் அல்லது கோதுமைப் புல்லை நீர் விட்டு நன்கு அலசி சிறிதளவு கூட தூசி, தும்பு எதுவுமில்லாமல் சுத்தம் செய்து கொள்ளவும். கொத்தமல்லி, புதினாவையும் சுத்தம் செய்து கொண்டு, அனைத்தும் சேர்த்து ஒரு கைப்பிடி அளவு வருமாறு எடுத்துக் கொண்டு, போதுமான அளவு நீர் விட்டு, மிக்ஸியில் அரைத்துக் கொண்டு, மெல்லிய பருத்தித் துணி மூலம் சாற்றை வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.

மேற்கூறிய சாற்றை தேன் கலந்து தினசரி ஒரு வேளை அருந்தினால், ஒரு தாய் இரண்டு குழந்தைகளுக்கு பால் தருமளவுக்கும் பால் அதிகமாகச் சுரக்க ஆரம்பித்து விடும். தாயானவள் குழந்தையின் இரண்டு வயது வரை பால் கொடுப்பது மிகவும் அவசியமாகும்.

தாய்ப்பால் அதிகம் சுரக்க என்ன செய்ய வேண்டும்?

தாய்ப்பாலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகம் இருப்பதனால், தாய்ப்பால் குடித்து வளர்ந்த குழந்தைகள் எளிதில் நோய்க்கு ஆளாவதில்லை. தாய்ப்பால் புகட்டுவதால் கருத்தரிப்பதை தள்ளி வைக்கிறது என்பதும், மார்பகப் புற்று நோய் பெண்களைத் தாக்குவதில்லை என்பதும் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது.

சதாவரி லேகியம், தெத்தான் கொட்டை லேகியம், வெண் பூசணி லேகியம், அயக்காந்த செந்தூரம், பவளப்பற்பம், சிலாசத்துப்பற்பம், மான் கொம்பு (சிருங்கி) பற்பம் முதலிய பல மருந்துகள் தாயிற்கு அதிகம் பால் சுரக்க உடல் ஆரோக்கியம் பெற உட்கொள்ளப்படும் மருந்தாக அமைந்துள்ளது.

ஆயுர்வேத மருத்துவரின் பரிந்துரைப்படி மேற்கூறிய மருந்துகளை உட்கொள்வது நல்லது.சித்த மருத்துவத்தில், தாய்ப்பால் அதிகம் சுரக்க வெள்ளைப் பூண்டு, வெள்ளரி, நெல்லி, அரசமரம், காட்டாமணக்கு, தாலியிலை போன்ற மூலிகைகள் மருந்தாகப் பயன்படுகிறது.

வெள்ளைப் பூண்டுப் பால்

வெள்ளைப் பூண்டு எடுத்து உரித்துக் கொண்டு, 30 பற்கள் வரை எடுத்து பசும்பால் சேர்த்து கொதிக்க வைக்கவும். மேற்கூறிய பாலையும், வெந்த பூண்டுப் பற்களையும் தினசரி இரவு படுக்கச் செல்லும் முன்பு உட்கொள்ள வேண்டும்.

நெல்லிவேரை பச்சையாக எடுத்து வந்து, நீர் விட்டு அலசி, சுத்தம் செய்து கொள்ளவும். அதன் பின்பு வேரை நன்றாக அரைத்து, எலுமிச்சக்காய் அளவு எடுத்துக் கொண்டு 200மி.லி. அளவு பசுவின் பாலை கொதிக்க வைத்த பிறகு அரைத்த நெல்லிவேர்க் கலவையைச் சேர்த்து நன்றாகக் கலந்து அருந்தி வர வேண்டும். தினசரி இருவேளை அருந்தி வர பால் பெருக்கம் கூடும்.

அரசம் கொழுந்து கற்பம்

அரசம் வேரில் கொழுந்து பகுதியை அல்லது அரச மரத்தின் விழுதின் கொழுந்து பகுதியை எடுத்து (சுமார் 3 கிராம் அளவு) அரைத்துக் கொண்டு, காய்ச்சிய பசும்பாலில் கலந்து தினசரி ஒரு முறை குடித்து வர வேண்டும்.

காட்டாமணக்கு இலைக்கட்டு

காட்டாமணக்கு இலைகளை ஆய்ந்து நன்கு சுத்தம் செய்து கொண்டு, அதில் விளக்கெண்ணெய் விட்டு தடவி, நெருப்பில் இட்டு வதக்கவும். அதனை இரு மார்பகங்களின் மேல் வைத்து துணி கொண்டு கட்டிக் கொள்ள வேண்டும். இரவு படுக்கும் பொழுது கட்டி வைத்து, மறுநாள் காலையில் அவிழ்த்து விடலாம். இவ்வாறு தொடர்ந்து மூன்று நாட்கள் செய்து வர வேண்டும்.

தாலியிலை விழுது

தாலியிலையை வென்னீரில் போட்டு மூன்று நிமிடம் வேக விடவும். வேக வைத்து எடுத்த நீரை வடித்து விட்டு தாலியிலையை மட்டும் எடுத்து நன்கு பிசைந்து, எலுமிச்சங்காய் அளவு எடுத்துக் கொண்டு காலை வெறும் வயிற்றிலும், மாலை ஆறு மணியளவிலும் என தினசரி இருவேளை வீதம் தொடர்ச்சியாக நான்கு நாட்கள் உட்கொள்ள வெண்டும்.


Spread the love