இதயத்தில் ஈரம் . . . குணா

Spread the love

பெரியவர்கள் கோபத்தில் கண்டபடி பேசிக்கொண்டிருந்தால் குழந்தைகளுக்கு குழப்பம்தான் மிஞ்சும்.  எதற்காக இவர்கள் கோபித்துக் கொள்கிறார்கள் என்று புரிந்து கொள்ள மாட்டார்கள்.  உணர்வை சரியாகப் புரிந்து கொள்ளும் ஆற்றல் இந்தக் குழப்பத்தால் கொஞ்சம் கொஞ்சமாக மங்கிவிடும்.

குழந்தைகளிடம் தகுதிக்கு மீறியதைப் பெற்றோர்கள் எதிர்பார்க்கக் கூடாது.  குழந்தைகளிடம் ரொம்ப எதிர்பார்ப்பது அவர்களுடைய சுதந்திரத்தையும் ஆற்றலையும் பாழ்படுத்தும்.  ஆற்றல் குறைந்தால் அவர்களுக்கு எரிச்சலும் சோகமும் சமூகம் வேகமாக மாறிவருவதால், காலத்தின் விபரீதப் போக்கால் எத்தனையோ வழிகளில் குடும்பங்களின் கட்டமைப்பு குலைந்துகொண்டே வருகிறது.  குடும்பங்களிலும் எதிர்மறை எண்ணங்கள் வளர்கின்றன.

குடும்பங்களில் இரண்டு பேரும் சம்பாதிப்பதால் குடும்பத்தின் அளவு அதாவது குழந்தைகளின் எண்ணிக்கை சுருங்கிக்கொண்டே வருகிறது.  இப்போதெல்லாம் ‘நியூக்ளியர் குடும்பம்’ என்ற சொல் பரவலாக உபயோகப்படுகிறது.  அளவான குடும்பம்.

தவிர்க்க முடியாத வேலை பளு, மற்றப் பிரச்சினைகள், தாய்க்கும் தந்தைக்கும் உள்ள கருத்து வேறுபாடு, தாம்பத்தியத்தில் இடைவெளி ஆகியவற்றால் குழந்தைகளிடம் பெற்றோர்கள் சரியாகவே பேச முடிவதில்லை.  பிறகு எப்படி மனம் விட்டுப் பேசுவது?  ஆகவே குழந்தைகளுக்குச் சரியான தகவலைப் பெற்றோர்களால் அளிக்க முடிவதில்லை.

நாளுக்கு நாள் குடும்ப கட்டமைப்பு தத்தளிப்பதால், ஒருவருக்கு ஒருவர் இணைந்து செயலாற்ற முடியாததால், குழந்தைகளை ஆரோக்கியமான மனநிலை உள்ளவர்களாக வளர்ப்பதற்கு பெற்றோர்களுக்கே பயிற்சி அளிக்க வேண்டும்.

கோபத்தைத் தவிர்ப்பதற்கான டிப்ஸ்கள்    

பெரியவர்களைப் பார்த்துக் குழந்தைகள் அப்படியே காப்பி அடிப்பார்கள்.  ஆகவே, ஆக்ரோஷமாக சத்தம் போடாமல் தங்கள் கோபத்தைக் காண்பிக்க பெற்றோர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்.

விவரம் தெரியும் அளவுக்கு குழந்தைகள் வளர்ந்ததும், தங்கள் வாழ்க்கையை நிர்ணயித்துக்கொள்ளும் விஷயங்கள் அவர்களுடைய ஆலோசனையையும் கேட்டு அவர்களை முடிவெடுக்க விட வேண்டும்.  ஒவ்வொன்றிலும் மூக்கை நுழைத்து பெற்றோரே முடிவெடுத்து அவர்கள் வாழ்க்கையை இவர்கள் வாழக்கூடாது.

தங்களுடைய குறிக்கோள்களை எல்லாம் குழந்தைகளுடைய குறிக்கோள்களாகப் பெற்றோர்கள் திணிக்கக் கூடாது.  திணிக்கும்போது, அவர்களால் அவை முடிக்கப்படவில்லை என்றால் பெற்றோர்கள் தங்கள் எரிச்சலை காண்பிக்கின்றனர்.  தன்னாலேயே ஓர் இலக்கை நிர்ணயித்துக் கொள்பவர் அதை முடிப்பார் என்று எதிர்பார்க்கலாமே தவிர மற்றவர்களால் திணிக்கப்பட்ட ஒரு குறிக்கோளை முடிப்பார் என்று எதிர்பார்க்க முடியாது.  ஆகவே, தங்கள் ஆர்வத்துக்கும் சக்திக்கும் தகுந்த மாதிரி ஒரு முடிவை குழந்தைகள் எடுப்பதற்கு ஊக்கப்படுத்த வேண்டும்.

கணவன் மனைவி இருவருமே வேலைக்குச் செல்பவர்களாக இருந்தால் குழந்தைகளைத் தாங்கள் வளர்க்கும் விதம் மற்றும் கோபத்தைத் தவிர்ப்பதற்காக நடந்துக்கொள்வது ஆகியவற்றில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.  வேலைக்கு இருவரும் போகும் பெற்றோர்களுடைய குழந்தைகளுக்கு, தினசரிப் பிரச்சினைகளுக்குப் பெற்றோரின் கவனிப்பும் வழிகாட்டுதலும் பொருத்தமானதாகவோ முழுவதுமாகவோ கிடைக்காது என்பதால் தவறான பழக்க வழக்கங்களுக்கு குழந்தைகள் மாறலாம்.  ஆகவே, பெற்றோர்கள் தங்கள் நேர நிர்வாகத்தை மேம்படுத்த வேண்டும்.  மேம்படுத்தினால் தங்கள் வேலைச் சுமையால் குழந்தைகளின் நலனை அசட்டை செய்வதிலிருந்து மீளலாம்.

குழந்தைகளிடம் தன்னம்பிக்கை வளர வேண்டும்.  தங்கள் பிரச்சினைகளைத் தாங்களே தீர்த்துக் கொள்ள வேண்டும்.  மற்றவர்களுடைய உதவி இல்லாமல் தாங்களே சில கருத்துகளை சொந்தமாக உருவாக்கிக் கொள்ள வேண்டும்.  இந்த மாதிரி ஆற்றல்கள் அவர்களுக்கு ஏற்படும் வகையில் அவர்களை வளர்ப்பதற்கு, பெற்றோருக்குப் பயிற்சி தேவை.  குறிப்பாக கணவன், மனைவி இருவருமே சம்பாதிக்கும் நிலையில், பயிற்சி மிகவும் அவசியம்.

பல குழந்தைகள் தங்கள் உணர்வைத் தெரிவிப்பதற்கு உதைக்கிறார்கள், கத்துகிறார்கள், சாபமிடுகிறார்கள், எதையாவது தூக்கி எறிகிறார்கள்.  ஏன்?  பெற்றோர்களின் கவனத்தை இழுப்பதற்கு அவர்களுக்கு வேறு வழி தெரியவில்லை  ஆகவே, குழந்தைகள் ஒழுக்கக் குறைவாக நடப்பதன், முதல் அறிகுறியைப் பெற்றோர்கள் கவனித்து, உடனே சரியாக நடக்க வேண்டும்.  குழந்தைகளின் எரிச்சல் மேலும் மோசமாகி திருத்த முடியாத பழக்க வழக்கங்களுக்கு அவர்கள் திசை திரும்புவதற்கு முன்னர் பெற்றோர்கள் குழந்தைகளை கவனிக்க வேண்டும்.

தங்கள் கருத்துகளை புத்திசாலித்தனமாக சொல்வதற்குக் குழந்தைகளைப் பெற்றோர்கள் ஊக்கப்படுத்த வேண்டும்.  அதை விட்டுவிட்டு அனலைக் கக்குவது, ஒருத்தருக்கு ஒருத்தர் தாக்கிக் கொள்வது ஆகியவற்றை அறவேவிட வேண்டும்.  எதிர்வினை உணர்வுகளையும் எப்படி சரியாகவும் ஆரோக்கியமாகவும் வெளியிடலாம் என்பதற்குப் பெற்றோர்களே முன்னுதாரணமாக இருந்து கற்றுக் கொடுக்க வேண்டும்.

நான் கோபத்தில் இருக்கிறேன்

கோபத்தில் நிலைகுலைவதை விட்டுவிட்டு, ‘நான் கோபமாக இருக்கிறேன்’ என்று வெளிப்படையாகச் சொல்லப் பழகுங்கள்.  ஏன் கோபம் கொண்டீர்கள் என்பதைப் பற்றி விவாதியுங்கள்.  இது நல்ல பழக்கம்.

மற்றவர்கள் உங்கள் குழந்தைகளின் மேல் தங்கள் கோபத்தைக் காண்பிக்கும் போது எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று அவர்களுக்கக் கற்றுக் கொடுங்கள்.  மற்றவர்கள் உங்கள் குழந்தைகளை கீழ்த்தரமாகப் பேசியதற்கோ பயமுறுத்தியதற்கோ உங்கள் குழந்தை திருப்பித் தாக்கியிருந்தால் தாக்குவது சரியல்ல என்று அவர்களுக்கு விளக்குங்கள்.  தங்கள் உணர்வை திசை மாற்றி நிதானமாக இருப்பதைக் கற்றுக் கொடுப்பதன் மூலம் ஒழுக்கம் மீறாமல் இருக்கும் குழந்தைகளை உருவாக்க முடியும்.

முணுக்கென்றால கோபம் கொள்பவரிடம் உங்கள் குழந்தை பழகாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.   கோபம் கொள்பவர் தன்னை மாற்றிக்கொள்ளத் தயாரில்லை என்றால் உங்கள் குழந்தை அவருடைய நட்பை வேண்டாம் என்று ஒதுக்குவதை சரி என்றே சொல்லுங்கள்.

உங்கள் குழந்தைகளிடமிருந்தே கற்றுக்கொள்ளுங்கள்.  அவர்கள் செய்கையில் மகிழு ங்கள், அவர்களை மதியுங்கள், அவர்களை அவர்களாகவே இருக்க விடுங்கள், உண்மையான வாழ்க்கையை வாழுங்கள்.

உங்கள் குழந்தைகளிடமிருந்தே கற்றுக்கொள்ளுங்கள்.  அவர்கள் செய்கையில் மகிழு ங்கள், அவர்களை மதியுங்கள், அவர்களை அவர்களாகவே இருக்க விடுங்கள்.  உண்மையான வாழ்க்கையை வாழுங்கள்.

மகனும் மகளும் செய்த சமமான சாதனைகளுக்கு இருவரையும் சமமாகத் தான் புகழுகிறோமா என்று வீட்டு பெரியவர்கள் சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.  ‘இது பொட்டப் புள்ளை, அது ஜானானாலும் ஆண்தான்’ என்று பாகுபாடு காட்டினால் அது குழந்தைக்குக் சகப்பாக இருக்கலாம்.  போகப் போக அது காழ்ப்பாக மாறினாலும் மாறலாம்.

இதயத்தில் ஈரம்

குழந்தை வளர்ப்பில் ஈர நெஞ்சுடன் இருங்கள்.  குழந்தைகளின் கோபத்தை அது ‘துடை’க்கும், பெற்றோரின் கோபதாபங்களையும் துடைக்கும்.  அன்பால் உறவுக்குப் பாலம் அமைக்க வேண்டும்.  அதனால் மனக் கசப்போ கோப தாபங்களோ எவருக்குமே எழாது.

ளுங்கள் குழந்தைகளுக்குப் பிடித்தவர்களாக இருங்கள்.  அதன் பலன் என்ன?  அவர்கள் உங்களுக்குப் பிடித்தவர்களாக இருப்பார்கள்.  இவ்வளவு ஏன்?  எல்லோருக்கும் பிடித்தவர்களாக இருப்பார்கள், அன்பானவர்களாக இருப்பார்கள்.

அடுத்தவரோ, உங்கள் குழந்தைகளோ கோபமாக இருக்கும்போது நீங்கள் பாட்டுக்கு அவர்களுக்கு கிளாஸ் எடுக்காதீர்கள்.  அறிவுரை செய்யாதீர்கள்.  அவர்களைப் ‘பிழை திருத்’ தாதீர்கள்.  உங்கள் குழந்தைகளோ குடும்ப உறுப்பினர்களோ கோபத்தில் உச்சாணிக் கிளையில் இருக்கும்போது நீங்கள் அவர்களுடன் பேசாமல் அமைதியாக இருந்து அவர்களுடைய கோபம் தணியும் வரை அவர்களுக்கு ஈடுகொடுப்பதைப் பழக்கப் படுத்திக் கொள்ளலாம்.


Spread the love