முகம் அழகாக சில எளிய குறிப்புகள்

Spread the love

சூரிய வெப்பத்தினால் ஏற்படும் சரும பாதிப்பு:

சூரியனிலிருந்து வெளிவரும் புற ஊதா கதிர் வீச்சின் தாக்குதலால் சருமத்தில் சுருக்கங்கள், செம்புள்ளி, கரும்புள்ளி, நிற வேறுபாடு, உதட்டு வெடிப்பு, சருமம் கருத்து தடிமனாகி விகாரமடைதல், சருமம் உலர்ந்து போதல் என பல பிரச்சனைகள் உண்டாகிறது.

அதுமட்டுமின்றி புற ஊதாக் கதிர்வீச்சால் டி.என்.ஏ. மரபணுக்கள் பாதிப்படைகின்றன. சரும செல்களால் உருவாகும் இரசாயன பொருட்களையும் மாற்றுகின்றது. கோடைகாலங்களில் காலை 10 மணியிலிருந்து மதியம் 3 மணி வரை இந்தக் கதிர் வீச்சு அதிகமாக இருக்கும். எனவே இந்த நேரங்களில் வெயிலில் செல்வதை குறைக்கலாம்.

வெயிலில் அலைந்தால் சருமம் கருமையாவதற்கு காரணம், அதிகமான மெலானின் உற்பத்தியாகும். கதிர் வீச்சின் தாக்குதலை கட்டுப்படுத்த மெலானின் அதிகளவு சுரக்கிறது. இதனால் சருமம் கருப்பாகிறது.

சருமம் மென்மையாக:

மென்மையான, பொலிவு மிக்க சருமத்தை, இந்த எளிய வீட்டுக்குறிப்பு மூலம் பெறலாம்.

எலுமிச்சை சாறு முகத்தை மென்மையாக வைக்க உதவுகிறது. இதை முகம், முழங்கை, முட்டு பகுதியில் தேய்த்து குளித்து வந்தால், அவைகள் மென்மையாகவும், பளபளப்பாகவும் காணப்படும்.

எலுமிச்சையின் தோலை முகத்தில் தடவி வருவதால், முகத்தில் உள்ள இறந்த செல்கள் அகற்றப்பட்டு, இயற்கை தெம்பூட்டியாகவும் அமைகிறது. பொலிவிழந்த, வறண்ட சருமத்திற்கு எலுமிச்சை கலந்த எண்ணெயை பயன்படுத்தலாம்.

ஒரு டீஸ்பூன் ஆலிவ் ஆயில் மற்றும் 2 டீஸ்பூன் சீனி இவை இரண்டையும் ஒன்றாக கலந்து முகத்தில் நன்கு தடவவும், இதை 10 நிமிடம் உலரவிட்டு H கழுவவும். இதை தொடர்ந்து செய்து வந்தால், உங்கள் முகம் மிகவும் மென்மையாக இருப்பதை காணலாம்.

பப்பாளி பழத்தை நன்கு மையாக அரைத்து அதனுடன் எலுமிச்சை சாற்றை கலந்து முகத்தில் தேய்த்து, உலர்ந்ததும் கழுவி வந்தால், முகம் மென்மையாகவும், பளபளப்பாகவும் காணப்படும். 

தக்காளி ஜுஸ் தொடர்ந்து குடித்து வந்தால் சருமத்தில் சுருக்கங்கள் விழுவது குறைந்து, சருமத்தின் பொலிவு அதிகரிக்கும்.

அழகான இதழ்களுக்கு

நம்முடைய இதழ்களுக்கு எலுமிச்சை பானம் சிறந்ததாகும். வறட்சி, வெடிப்பு மற்றும் வெம்புண் போன்றவைகளால் உதடு பாதிக்கப்பட்டிருந்தால், உதட்டில் எலுமிச்சை சாற்றினை தடவலாம். எலுமிச்சை சாற்றை பாலின் நுரை அல்லது தேனுடன் கலந்து, உதட்டின் மீது தடவலாம்.

தினமும் இரவு படுக்க செல்வதற்கு முன்  கொத்தமல்லி இலைகளின் சாற்றை உதடுகளின் மீது தடவி வந்தால் உதடு சிவப்பாகும்.

உதடுகள் சிவப்பாகவும், பளபளப்பாகவும் இருக்க, தேங்காய் எண்ணெயுடன் அரை டீஸ்பூன் சாதிக்காய் பொடியை சேர்த்து, உதடுகளின் மேல் தடவி, உலரவிட்டு கழுவவும்.

பீட்ரூட் பழம், மாதுளம் பழம் இவற்றின் சாற்றை உதடுகளின் மீது தடவி வந்தால் உதடுகள் அழகாகும்.

முகத்தில் உள்ள சுருக்கங்கள் நீங்க…

முகத்தை நன்கு கழுவவும். பின், அவகாடோ பழத்தை தோலை அரைத்து, அந்த பேஸ்ட்டை முகம் முழுவதும் தடவவும். இதை 15 நிமிடங்கள் கழித்து கழுவவும். 2 நாட்களுக்கு ஒருமுறை இதை செய்துவந்தால், முகச்சுருக்கம் நீங்கி இளமையான தோற்றத்தை காணலாம்.

தினமும் குறைந்தது 3 முதல் 4 லிட்டர் வரை தண்ணீர் குடித்து வருவது நல்லது. அடிக்கடி முகத்தை கழுவி சுத்தமாக வைப்பது நல்லது. குளித்தவுடன் முகத்தை அழுத்தி துடைக்காமல், மெதுவாக ஒத்தவும். தினமும் காலையில் உடற்பயிற்சி செய்து வருவது நல்லது. இதனால் சருமம் மட்டுமின்றி, உடல் முழுதும் ஆரோக்கியமாக இருக்கும்.

இளநீர், நுங்கு, தர்பூசணி, புடலங்காய், பூசணி, சுரைக்காய், வெள்ளரி போன்ற நீர்ச்சத்து மிகுந்த காய், கனிகளை உணவில் சேர்த்துக் கொள்ளவதால் நமது தோலை சுருக்கங்களுக்கு விளக்கி, ஆரோக்கியத்துடன் பாதுகாக்கலாம்.

தினமும் வைட்டமின் ஏ நிறைந்த கேரட் மற்றும் மூன்று நிற வகை பழங்களை சாப்பிடுவது நல்லது. இவ்வாறு உண்பதால் தோல் மென்மையாகவும், இளமையுடனும் காணப்படும்.

ஆரஞ்சு பழத்தை முகத்தில் தடவி 10 நிமிடம் ஊறவைத்து பின் சோப்பினால் முகத்தை கழுவவும். தினமும் இவ்வாறு செய்து வந்தால், முகம் பளபளப்பாகவும், இளமையுடனும் இருக்கும்.

நமது உடலில் உள்ள தோல் சுருக்கங்களை எலுமிச்சையை கொண்டு நீக்கலாம். இதில் உள்ள ஆண்டி-ஆக்ஸிடன்ட் சருமத்தில் உள்ள சுருக்கங்களை எதிர்த்து  போராடக்கூடியதாகும். எனவே சுருக்கம் உள்ள இடத்தில் எலுமிச்சையை தேய்த்து வந்தால், நல்ல பலனை காணலாம்.

மனதில் உள்ள கவலைகளை குறைத்துக் கொண்டாலே உடல் முழுதும் எப்பொழுதும் ஆரோக்கியமாகவும், இளமையாகவும் இருக்கும்.

கேரட் 250 கிராம் மற்றும் பாதம் அல்லது ஆலிவ் எண்ணெய் ஒரு தேக்கரண்டி எடுத்து கொள்ளவும். கேரட்டை பொடியாக நறுக்கி அதை அரைக்கவும். பின் இதனுடன் எண்ணெய் சேர்த்து இரண்டு மணி நேரம் வைத்து, அதை முகம் முழுவதும் தடவி 30 நிமிடம் வரை உலரவிட்டு பின் கழுவவும். இது அனைத்து வகை சருமத்திற்கும் பொருந்தும்.

விட்டமின் இ மாத்திரையிலிருந்து எடுத்த எண்ணெயை முகத்தில் தடவி 15 நிமிடம் வரை உலர வைத்து பின் கழுவவும். இதனால் முகத்தில் உள்ள சரும சுக்கத்தை நீக்க முடிகிறது.

எண்ணெய் பசையுள்ள சருமத்தை பராமரிக்க

எண்ணெய் வழியும் முகத்தில் முகப்பரு, கரும்புள்ளி என பல பிரச்சனைகள் ஏற்படும். இவற்றை நீக்க எலுமிச்சை பழம் நல்ல நிவாரணியாகும். இதில் உள்ள சிட்ரிக் அமிலம், சருமத்தில் உள்ள எண்ணெய் மூலக்கூறுகளை நீக்குகிறது. 

எலுமிச்சை சாற்றை முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து கழுவவும். இப்படி தொடர்ந்து செய்து வருவதன் மூலம் சருமத்தில் எண்ணெய் பசை நீங்கி, நல்ல மென்மையாக மாறுவதை காணலாம். இதனை தொடர்ந்து செய்து வரவும்.

தேங்காய் எண்ணெய் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து உடல் முழுவதும் தேய்த்து, பயத்த மாவை தேய்த்து குளித்து வர, தோல் பளபளப்பாகவும், மென்மையாகவும் இருக்கும்.

தக்காளிப்பழ சாற்றை முகத்தில் தேய்த்து காய்ந்த பின் கழுவி வருவது நல்ல பலனை தரும். இதனால் எண்ணெய் தன்மை கட்டுப்படும்.  தக்காளிப்பழத்துடன் வெள்ளரி பழம் அல்லது ஓட்ஸ் சேர்த்து முகத்தில் தடவி 20 நிமிடம் கழித்து கழுவவும். இதனால் நாளடைவில் முகத்தில் உள்ள எண்ணெய் பிசுப்பிசு குறைந்துவிடும்.

தேவையான அளவு பப்பாளி பழத்தை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி, அதை கெட்டியாக அரைத்துக் கொள்ளவும். இந்த பப்பாளி பேஸ்ட்டுடன், சிறிது எலுமிச்சை பழ சாற்றை சேர்த்து,  முகம் மற்றும் கழுத்து பகுதிகளில் தடவி 20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.  இதை வாரத்திற்கு இருமுறை செய்து வந்தால் நல்ல மாற்றத்தை முகத்தில் காணலாம்.

எண்ணெய் வழியும் முகத்தில் ஏற்படும் முகப்பருவை நீக்க, வேப்பிலையை கொதிக்கும் நீரில், தண்ணீரின் நிறம் மாறும் வரை போடவும். பின் அதை வடிக்கட்டி ஒரு பாட்டிலில் ஊற்றி வைத்து, குளிக்கும் நீரில் அதை சிறிதளவு ஊற்றி குளிக்கலாம்.  இவ்வாறு செய்வதால் சருமத்தில் ஏற்படும் முகப்பரு மற்றும் வெள்ளை புள்ளிகள் நீங்கிவிடும்.

முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்குவதற்கு

முகத்தில் எலுமிச்சை சாற்றை அடிக்கடி தடவலாம். அவ்வாறு செய்வதால் முடி வளர்ச்சி குறைந்து முகம் அழகு பெறும்.

கற்றாழை ஜெல்லுடன் ஒரு சிட்டிகை மஞ்சளை சேர்த்து, அதை முகத்தில் தடவி 15 நிமிடங்கள் வரை உலர விட்டு, பின் தண்ணீரில் முகத்தை கழுவவும். வாரம் ஒருமுறை பயன்படுத்தி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

முட்டையின் வெள்ளைக்கரு, சர்க்கரை, சோளமாவு இவற்றை ஒன்றாக கலந்து பசைபோல் ஆனதும், முகத்தில் தடவவும். பின் இவை காய்ந்ததும், மெதுவாக அதை எடுக்கவும். அவ்வாறு செய்தால் முகத்தில் உள்ள முடியும் சேர்ந்து எளிதில் வரும்.

கடலைமாவு, தயிர், மஞ்சள் இவற்றை ஒன்றாக கலந்து சருமத்தில் தடவி மசாஜ் செய்து, நன்கு உலர விடவும். இவ்வாறு செய்து வந்தால், சருமத்தில் வளரும் முடியின் வளர்ச்சி தடைபடுவதோடு, சருமம் மென்மையாகவும் இருக்கும்.

ஆயுர்வேதம்.காம்


Spread the love
error: Content is protected !!