தாது விருத்திக்கு துத்தி

Spread the love

அழகான மஞ்சள் நிறப் பூக்களைக் கொண்டிருக்கும் துத்தி, 3 அடி உயரம் வரை வளரக்கூடிய ஒரு குறுஞ்செடியாகும். துத்தியை ஆங்கிலத்தில் Indian mallow என்று குறிப்பிடுவர். உடலுக்கு  அதிக பலம் தரவல்லது என்னும் பொருளில் வடமொழியில் ‘அதிபலா’ என்று அழைக்கின்றனர். இதன் இலைகளின் அடிப்புறம் சற்று வெண்மையாக இருக்கும். துத்தியில் 29 வகைகள் இருப்பினும் பணியாரத்துத்திதான் பெரும்பாலும் கீரையாகவும் மருந்தாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இலைகள், விதைகள், பட்டை, வேர் என துத்தியின் எல்லா பாகங்களும் மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. துத்திச் செடியின் காய்ந்த மூலம், காய்ச்சலைத் தணிக்கக் கூடியது, வயிற்றுப் புழுக்களைக் கொல்லக் கூடியது, வீக்கத்தைத் தணிக்கக்கூடியது. இலைச்சாறு மேற்பூச்சு மருந்தாகிறது.

விதைகள் சாந்தம் தரவல்லது. குறிப்பாக இருமல், சிறுநீரக வீக்கம், வலி ஆகிய துன்பங்களின்போது இதம் தருவது, மலச்சிக்கலைப் போக்குவது, இலைகள் உணவாகப் பயன்படுத்தக் கூடியது. உணவாகும்போது ரத்தமூலத்தை தணிக்கவல்லது. துத்தியின் பூக்கள் நுண்கிருமிகளை அழிக்கவல்லது, வீக்கத்தை வற்றச் செய்வது, பட்டை வீக்கத்தை வற்றச் செய்யும் தன்மை உடையது, சிறுநீரைப் பெருக்கக்கூடியது. வேர் நரம்பு மண்டலத்துக்கு உரமாகக் கூடியது, பக்கவாதத்துக்கு மருந்தாவது, சிறுநீர்த்தாரை, சிறுநீரகம் ஆகியவற்றின் வீக்கம், வலியைப் போக்க துத்தி வேர்ச் சூரணம் பயன்படுகிறது.

ஆயுர்வேத மருத்துவர்கள் துத்தி வேரை மூட்டுகளில் ‘யூரிக்’ அமிலம் சேர்ந்து ஏற்படுகிற வீக்கம், வலி, அடிக்கடி சிறுநீர் கழித்தல், ரத்தக் கசிவுகள் ஆகியவற்றுக்குப் பரிந்துரை செய்கின்றனர். துத்தியில் இருக்கும் எண்ணெய்ச் சத்து நுண்கிருமிகளை அழிக்கவல்லது.

துத்தியின் விதைகள் சற்று இனிய சுவையைப் பெற்றிருக்கும். துத்தியின் விதைகளைச் சேகரித்து நன்கு சூரணித்து சாப்பிட்டு வருவதால் சிறுநீர்த் தாரை எரிச்சல் போகும். துத்தியின் பூவை பாலில் இட்டு காய்ச்சிக் குடித்து வருவதால் உடலுக்குக் குளிர்ச்சியும் தாது விருத்தியும் உண்டாகும். துத்தி மலரைத் துய்க்கின்றவர்களுக்கு விந்து பெருகும். உடல் குளிர்ச்சி பெறும் என்கிறார் அகத்தியர். துத்தியின் வேர் சிறுநீர்த்தாரை எரிச்சல், சொட்டு மூத்திரம், தாகம், மேகச்சூடு ஆகியவற்றைப் போக்கும். விதையைக் குடிநீர் இட்டுக் குடிக்க மூலம், வெள்ளைப்போக்கு ஆகியவை குணமாகும்.

மூலம் குணமாக

துத்தி இலையை நெய், பருப்பு சேர்த்து காரத்துக்கு சிறிதளவு மிளகு சேர்த்து சமைத்து சுடுசாதத்தில் இட்டுப் பிசைந்து ஒரு மண்டலம் சாப்பிட்டு வர மூலநோய் குணமாகும்.

வீக்கம் குறைய

துத்தி இலையை நீரிலிட்டு அடுப்பிலேற்றி வேக வைத்து அந்த நீரில் ஒரு துணியை நனைத்துப் பின் பிழிந்து பொறுக்கும் சூட்டில் ஒத்தடம் கொடுக்க வீக்கம், வலிகள் குறைந்து விடும்.

கழிச்சல், கடுப்பு நீங்க

துத்தி இலையைச் சாறு பிழிந்து 10 மி.லி. அளவு எடுத்து அதனுடன் பசுநெய் சேர்த்து காலை, மாலை என இருவேளை சாப்பிட்டு வர வயிற்றுக் கழிச்சல் விலகிப் போகும். வயிற்றுக் கடுப்பும் தணிந்து போகும்.

வாய் கிருமிகள் அகல

துத்தி இலை அல்லது வேரை நீரிலிட்டுக் காய்ச்சி வடிகட்டி இளஞ்சூட்டில் வாயிலிட்டுக் கொப்புளிக்க வாயில் உள்ள கிருமிகள் நீங்கும். பல், ஈறுகள் ஆகியவற்றில் உண்டாகும் தொற்றுகள் விலகும்.


Spread the love