தும்பைக்கு எல்லாவகை மண்ணும் ஏற்றது. இந்தச் செடி வறண்ட நிலங்களில் கடல் மட்டத்திலிருந்து சுமார் மூவாயிரம் அடி உயரம் வரை உள்ள இடங்களில் நன்கு வளரும் தாவரம். ஒரு அடி முதல் மூன்று அடி உயரம் வரை வளரும் . இச்செடிகளில் நுண் மயிர்கள் காணப்படும்.எதிர் அடுக்கில் அமைந்த தனி இலைகளை உடையது. கணுக்குருத்து இருகிளைகளாக லைக்கோணத்தில் பிரிந்திருக்கும். .இலைகள் நீளமாகவும் இலைகளுக்கு மேலும் கீழும் பூக்களும் அமைந்திருக்கும். மலர்கள் தூய வெள்ளை நிறமாக ஒரே இதழ்விட்டு ஒரு சிறிய பொட்டு இதழின் நேராக நிற்கும். ஐந்து இதழ்களை உடையது. அடியில் இவை இணைந்து குழல் வடிவமாயிருக்கும். மகரந்த வட்டம் தாதிழைகளை உடையது இதில் இரண்டு உயரமானவை. சூல் தண்டு நீண்டது. சூலக வட்டம் நான்கு பிரிவானது. இலைக்கு தனிவாசனை உண்டு. நட்ட ஆறுமாதத்தில் பூத்து விடும். விதைமூலம் இனப்பெருக்கம்செய்யப்படுகிறது .
தும்பையின் மருத்துவப் பயன்கள்.அதிகாலையில் தும்பைப் பூவை பசும்பால் இட்டு அரைத்து உள்ளுக்குத்தர விக்கல் நீங்கும். தும்பை இலைகளையும் மிளகையும் அரைத்து உள்ளுக்குக் கொடுத்துவெளியில் பூச விஷம் இறங்கும்.
தும்பை இலைகளையும் தேள் கொடுக்கு இலைகளையும் அரைத்துத் தர தேள்கடி விஷம் நீங்கும்.
தும்பை வேரையும் மருக்காரை வேரையும் அரைத்து உடலில் பூசிக் குளிக்க விஷம் இறங்கும்.தும்பைப் பூவையும்ஆடுதிண்டாப்பாலை விதையையும் அரைத்துக்கொடுத்துப் பசும்பால் பருகிவர ஆண்மை அதிகரிக்கும். தும்பைச் சாறு முசுமுசுக்கைச் சாறு வல்லாரைச் சாறு இவைகளில் சீரகத்தை தனித் தனியே ஆறவைத்து உலர்த்தி சூரணம் செய்துகொடுத்துவர இதயப் பலவீனம் நீங்கும். சுரத்திற்கும் பின் ஏற்பட்ட சோர்வு தீரும், பசி அதிகரிக்கும், காமாலை குணமாகும். பித்த மயக்கம் வாந்தி குணமாகும், நினைவாற்றல் அதிகரிக்கும்.
தும்பைப் பூவையும் ஊமத்தம் பூவையும் அரைத்துப் பின் நெய்யில் கலந்து காய்ச்சி வடித்து காதிற்கு சொட்டு மருந்தாக’ப் பயன்படுத்தி வர, காதுப்புண், காதில் சீழ் வடிதல் காது இரைச்சல் தீரும்.
தும்பைச்சாறு 200 மி.லி. கழுதை மூத்திரம்100 மி.லி. பசுநெய் 200 மி.லி. கலந்து காய்ச்சி மெழுகு பதத்தில் வடித்து உச்சிக்கரண்டியளவு உள்ளுக்குக் கொடுத்து வெளியிலும் பூசிவரக் கிராந்திபுண் குணமாகும்.
தும்பை இலை, உத்தாமணி இலை சம அளவு எடுத்து அரைத்துக் கோலிக் காயளவு பசும்பாலில் கொடுத்து வர மாத விலக்கினால் ஏற்படும் குறைபாடுகள் நீங்கும்.
தும்பைப் பூவையும் ஒரு மிளகையும் அரைத்து நெற்றியில் பற்று போடத் தலைவலி தலைபாரம் நீர்க்கோவை நீங்கும்.
கவிழ் தும்பைச் சாற்றைப் பசும்பாலில் கலந்துதர இரத்தக் கழிச்சல் சீதக்கழிச்சல் மூலக்கடுப்பு தீரும்.
தும்பை இலையை அரைத்து உள்ளுக்கும் கொடுத்து வெளியிலும் பூச செய்யான் குடி குணமாகும். அதனால் ஏற்பட்ட தடிப்பும் அரிப்பும் மறையும்.
தும்பை இலை அவுரி இலை மிளகு ஆகிய இவற்றைச் சேர்த்து அரைத்து உள்ளுக்கும் கொடுத்து உடல் முழுவதும் பூசிவர எந்த விழக்கடியும் நீங்கும்.
தும்பை வேர், சுண்டை வேர்சூரணம் இலப்பைப் புண்ணாக்கு சுட்ட சாம்பல் மூன்றையும் சன்னமாய் சலித்து எடுத்து மூக்கில் பொடியாய் பயன்படுத்த தலைபாரம் தலைவலி மூக்கு நீர் பாய்தல் தலையில் உள்ள சோகங்கள் எல்லாம் மாறும்.
தும்பை, மிளகு, வசம்பு ஆகிய இம்மூன்றையும் அரைத்துத் துணியில் பொட்டலம் கட்டி நசியம் செய்யச் சன்னி தீரும்.தும்பைச் சாற்றறைத் தேன் கலந்து உள்ளுக்குத் தர நீர் கோவை குணமாகும்.தும்பைச் சாறும் விளக்கெண்ணெய்யும் கலந்து தர வயிற்றில் உள்ள கிருமிகள் வெளிப்படும். தும்பைச் சாறும் வெங்காயச்சாறும் கலந்து ஐந்து நாள் தர ஆசனப் புண் குணமாகும்.