தொண்டை 12 லிருந்து 14 செ.மீ. நீளமான குழாய். தசைகள் மற்றும் கோழை ஜவ்வு (Mucus membrane) களால் சேர்ந்தது. மூக்கு மற்றும் வாயின் பின் பகுதியில் அமைந்துள்ள தொண்டையில் நாக்கின் அடியில், உள்நாக்கின் இருபக்கம் மற்றும் மூக்கின் கீழ் என்று மூன்று டான்சில்கள் உள்ளன. மூக்கின் கீழிருக்கும் டான்சில் அடினாய்ட் டான்சில் என்றும் சொல்லப்படுகிறது. டான்சில்கள் மூக்கையையும் தொண்டையையும் கிருமிகள் தாக்குதலில் இருந்து பாதுகாக்கின்றன. தொண்டையின் அருகே உள்ள டான்சில்கள் வாய் வழியே நுழையும் கிருமிகளை கொல்ல ஒரு திரவத்தை சுரக்கின்றன. தொண்டை டான்சில்கள் சிறுவர்களுக்கு சிறிது பெரியதாகவும், வயது வந்தோர்களுக்கு சிறியதாகவும் இருக்கும். அடினாய்ட் டான்சில் வீங்கி, சதையால் மூக்கின் பாதையை அடைத்து விடும். சிறுவர்கள் வளர வளர, அடினாய்ட் சதை வளர்ச்சி தானே நின்று விடும்.
மூக்கோடு இணைந்த தொண்டை, வாயோடு இணைந்த தொண்டை, குரல்வளையோடு இணைந்த தொண்டை என்று தொண்டை மூன்று விதமாக பிரிக்கப்பட்டிருக்கிறது.
நாம் உண்ணும் உணவு வாயிலிருந்து தொண்டை வழியே வயிற்றைப் போய் சேர்கிறது. இது போகும் பாதை தொண்டையிலிருந்து ஆரம்பிக்கும் உணவுக்குழாய். மூச்சுக்காற்றும் தொண்டை, மூச்சுக்குழாய் வழியே நுரையீரலுக்கு செல்கிறது. உணவுக்குழாய் எப்போதும் (உணவு உண்ணும் போது தவிர) மூடியிருக்கும். சுவாசத்தை நிறுத்த முடியாததால் மூச்சுக்குழாய் எப்போது திறந்தே இருக்கும். சரி, சாப்பிடும் உணவு எவ்வாறு மூச்சுக்குழாயில் நுழையாமல் தடுப்பது? ஒரு மூடியால் – மெல்லிய இலை வடிவான, சளி நிறைந்த குருத்தெலும்பு மூடி நாக்குக்கு அடுத்த படி அமைந்திருக்கிறது. இந்த மூடியை Epiglottis என்பார்கள். உணவை நாம் விழுங்கும் போது அது சென்று ‘மூடியை’ அழுத்துகிறது. அழுத்தத்தில் உணவுக்குழாய் திறந்து உணவை வாங்கிக் கொள்கிறது. உடனே திரும்பவும் மூடிக் கொள்கிறது. இதனால் மூச்சுக்குழாயில் உணவே செல்லாமல் பாதுகாக்கப்படுகிறது. சில சமயங்களில், உணவுப் பொருள் மூச்சுக்குழாயில் நுழைந்து விடும். இந்த உணவை எடுக்க உடல் செய்யும் முயற்சி தான் “புரையேறுவது”. சாப்பிடும் போது பேசிக் கொண்டே சாப்பிட்டால், பேச்சுக்கு தேவையான திறந்த சுவாசக்குழாய்குள் உணவு புகுந்து விடும்.