மூன்று தோஷ தத்துவம்

Spread the love

ஆயுர்வேதத்தின் அடிப்படை மூன்று தோஷ தத்துவம். இந்த மூன்று தோஷங்கள் ஏறுமாறானால் நோய்கள் உண்டாகுகின்றன. ஆர்த்தரைடீஸ் ஆயுர்வேதத்தில் வாய்வு (வாத தோஷம்) அதிகமானால் ஏற்படும் கோளாறாக கருதப்படுகிறது. மேலும் சில காரணங்களாக ஆயுர்வேதம் சொல்வது – அளவுக்கு மீறி உடற்பயிற்சி செய்வது, இரத்தப் போக்கு, அதிக பாலியல் உறவினால் ஏற்படும் இழப்பு, இரவு அதிக நேரம் கண் விழித்தல், இயற்கை வேகங்களை தடை செய்தல், கவலை, எலும்பு முறிவு, மழைக்கால குளிர்காற்று முதலியன. இந்த காரணங்களால் வாயு அதிகமாகி ஏற்படும் பிரச்சனைகளை ஆர்த்தரைடீஸ் என்று கூறலாம். இந்த காரணங்களுடன் அஜீர்ணமும் மலச்சிக்கலும் சேர்ந்து ‘ஆமா’ எனும் கழிவுப்பொருள் உடலை விட்டு நீக்க முடியாமல் போனால், அதன் விளைவுகளால் உண்டாகும் மூட்டு வலியை ஆயுர்வேதம் ‘ஆமவாதம்’ என்கிறது. ஆமவாதம் என்பது ருமாடிஸத்தை குறிக்கும்.

ஆயுர்வேதம் உடலின் மூட்டுக்கள் ‘கப’த்தின் இருப்பிடம் என்கிறது. இங்கு வாதத்தின் தன்மை அதிகரித்தால் கபத்தின் வழவழப்பு உண்டாக்கும் எண்ணை பசை குறைந்து தேய்மானம் ஏற்படும். கூடவே வலி ஏற்படும். சில சமயங்களில் “பித்தம்” அதிகமானால் ‘வாத ரக்தா’ (Gout) ஏற்படும்.

ஆயுர்வேத சிகிச்சை முறை விரிவாக பல விதமாக செயல்படுகிறது. வெளிப்பூச்சு மருந்துகள், மசாஜ் இவற்றால் வலியை குறைத்து, மூட்டுக்கள் மீண்டும் இயங்குமாறு செய்யப்படும். பிறகு மலச்சிக்கலை போக்க தேவையான முறைகள் கையாளப்படும். உணவு முறைகள், உடல் பயிற்சிகள் (யோகா) மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்களும் பரிந்துரைக்கப்படும். உள்ளுக்கு கொடுக்க, மகாராஜ குக்குலு போன்ற பல மருந்துகளும், மஹா நாராயண தைலம் போன்ற பல வெளிப்பூச்சு தைலங்களும் ஆயுர்வேதத்தில் இருக்கின்றன. அந்தந்த பிரக்ருதி, மூட்டு வியாதிகளுக்கு ஏற்றவாறு முழுமையான சிகிச்சையை ஆயுர்வேதம் தரும்.

1. சல்லாக்கி – Boswellia Serrata (Indian Frankincense) – நிரூபிக்கப்பட்ட, சகல மூட்டு வியாதிகளையும் கட்டுப்படுத்தும் மூலிகை மூட்டு வியாதிகளுக்கு தொன்று தொட்டு பயன்படுத்தப்பட்டு வரும் மரப்பிசின் சல்லாக்கி. இந்த மரம் இந்தியாவில் அஸ்ஸாம், மேற்கு வங்காளம் தவிர எல்லா இடங்களிலும் பயிராகிறது. 15 மீட்டர் உயரம் வளரும். பல கிளைகள் உடையது. இதன் மரப்பட்டை பச்சை மஞ்சள் நிறத்தில் இருக்கும். மெல்லியதாக இருக்கும். மரத்தின் எல்லா பாகங்களிலும் சிறிது நறுமணம் வீசும்.

இந்த மரத்தின் அடி மரப்பட்டையில் தான் மருத்துவ பிசின் கிடைக்கும். மரப்பட்டைகள் கீறி விடப்பட்டு 3 மாதம் வரை, பிசின் வடிய விடப்படும். பிறகு சேகரித்த பிசின் சுத்திகரிக்கப்படும். இந்த பிசினில் (Oleoresin) சில எண்ணைகள், டெரிபினாய்டு (Terpenoid) மற்றும் போஸ் வெல்லியா அமிலங்கள் உள்ளன. இந்த போஸ் வெல்லியா அமிலங்கள் மூட்டு வலிக்கு சிறந்த மருந்தாகும்.

சல்லாக்கி மூட்டுவலிக்கு மாமருந்தாக உலகெங்கும் பிரசித்தமாகி விட்டது. இந்த பிசின், NSAID (Non – Steroidal, Anti – inflammatory drugs) மருந்துகளை போல சிறப்பாக பணி ஆற்றுகிறது. மூட்டுக்களின் வீக்கம் அழற்ச்சியை உண்டாக்கும் என்சைமான 5 Lipo oxygenase ஐ, சல்லாக்கி பிசின் கண்டிக்கிறது. ஜெர்மனியில் நடந்த ஆராய்ச்சிகளின் மூலம், ருமாடிஸ – ஆர்த்தரைட்டீஸுக்கு சிறந்த மருந்தாகும் என்பது தெரிய வந்துள்ளது. இந்தியாவிலும் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள், சல்லாக்கி பிசின், அலோபதியில் மூட்டு வலிக்கு கொடுக்கும் “Ketoprofen ” என்ற மருந்தை விட சிறந்தது என்று தெரிவிக்கின்றன. இந்த மருந்தை விட செல்லாக்கி பிசின் வீரியமுள்ளது. ஆனால் பக்க விளைவுகளை ஏற்படுத்துவதில்லை. மூட்டுகளுக்கு அதிக ரத்தம் பாயவும் உதவுகிறது. செல்லாக்கி, மஞ்சள், ஜிங் (Zinc) இவற்றுடன் சேர்த்து எடுத்துக் கொண்டால் மேலும் நல்ல பலன் கிடைக்கும். முதுகு வலிக்கும் சல்லாக்கி நல்ல மருந்து. மஞ்சள், துத்தநாகம் இவற்றுடன் சேர்ந்து கொடுத்தால் இதன் சக்தி அதிகமாகிறது.

சல்லாக்கி உள்ளுக்கும் கொடுக்கலாம், வெளிப் பூச்சாகவும் தடவலாம். நரம்புத் தளர்ச்சிக்கும் நல்லது.

இதன் மரப்பிசின் தினமும் மூன்று முறை 150 மி.கி. அளவில் 2 – 3 மாதங்களுக்கு எடுத்துக் கொண்டால் பலன் தெரியும்.

2. நிர்க்குண்டி, வெண்நொச்சி – Vitex Negundo – இந்த தாவரம் தென்னிந்தியாவில் அதிகம் காணப்படும். ருமாடிக் ஆர்த்தரைடீஸ், ஆஸ்டியோ ஆர்த்தரைடீஸ், சியாடிகா, முதுகு வலி, கழுத்து வலி, ஆடுகால் சதை வலி முதலியவற்றுக்கு மருந்தாகும். மூட்டுக்களில் ஏற்படும் அழற்சி, வீக்கங்களுக்கு, இதன் இலைகளின் சாறு பயனளிக்கிறது. இலையை வதக்கி ஒத்தடம் கொடுத்தால், வீக்கம், கீல் வாயு முதலியன தீரும்.

எலிகளை வைத்து செய்த ஆராய்ச்சிகளின் படி, வெண்நொச்சி, 4-6 நாட்களில் அழற்ச்சியை குறைக்கிறது. மூட்டு வீக்கங்களை, நாட்பட்டதாக இருந்தாலும் குறைக்க வல்லது. வாசனையுள்ள ‘டானிக்’. வயிற்றுப் பூச்சிகளை அழிக்கும்.

இதன் இலைகளுடன், புங்க இலைகளையும் (Pongamia Pinnata) எடுத்து ஒரு துணியில் பந்து போல் சுருட்டி, தண்ணீரில் இந்த துணிப்பந்தை போட்டு வேக வைக்கவும். அடுப்பிலிருந்து இறக்கி ஆற வைத்து, இதமான சூட்டில் வலியிருக்கும் இடங்களில் ஒத்தடம் கொடுக்கலாம்.

வெளிப்பூச்சாக இலைகளிலிருந்து செய்யப்பட்ட களிம்பு அல்லது தைலம் உபயோகப்படுத்தப்படுகிறது. உள்ளுக்கு இலையின் சாறு 15 – லிருந்து 20 மி.லி. வரை ஒரு நாளுக்கு இரண்டு முறை கொடுக்கலாம். வேர், விதை மற்றும் பட்டை பொடி செய்து பயன்படுத்தப்படுகிறது. இந்தப் பொடிகள் ஒரு தேக்கரண்டி அளவில் வெறும் வயிற்றில் தினமும் இரண்டு முறை கொடுக்கப்படுகிறது. கஷாய ரூபத்தில் இந்த மூலிகை 6 தேக்கரண்டி அளவில் தினமும் இரு வேளை கொடுக்கப்படுகிறது.

3. குக்குலு – Commiphora Mukul – முட்கள் உள்ள இளம் சிவப்பு நிறம் உள்ள பூக்களுடன் கூடிய செடி. அதர்வண வேதத்திலேயே புகழப்பட்ட மூலிகை. ஆயுர்வேதத்தில் தொன்று தொட்டு வாதநோய்களுக்கு மருந்தாக பயன்பட்டு வருகிறது. குக்குலு ஒரு மரப்பிசின் ஆகும். ஆமவாதம் மற்றும் கீழ்வாதம் இவற்றுக்கு ஸ்டீராய்டு போல செயல்படுகிறது. பக்க விளைவுகள் இல்லாத மருந்துகள் இந்த மூலிகையுடன் பொடி செய்யப்பட்ட இஞ்சி, ஆமணக்கெண்ணெய் கலந்து உபயோகித்தால் மேலும் சிறந்த பலனளிக்கும். குக்குலுவை கொண்டு தயாரிக்கப்படும் ஆயுர்வேத மருந்துகள் – யோக ராஜ் குக்குலு, கைசோர் குக்குலு, சந்திர பிரபாவடீ, ஆரோக்கிய வர்த்தினி வடி,

குக்குலு மாத்திரை ரூபத்தில் தான், சாதாரணமாக கொடுக்கப்படுகிறது. அளவு ஒரு நாளைக்கு இரு மாத்திரைகள் வீதம் சூடான பாலுடன் கொடுக்கப்பட வேண்டும்.


Spread the love