சில குழந்தைகள் பிறர் தொட்டாலே அழத் துவங்கி விடுவர், அத்தகைய குழந்தைகளை நாம் “தொட்டால் சிணுங்கி” என அழைப்பது வழக்கம். மூலிகைகளிலும் அவ்வாறு பிறர் தொடுவதையோ காலால் மிதிப்பதையே, விரும்பாத மூலிகைகள் உள்ளன. அவற்றில் மிகவும் பிரபலமானது கரும் பச்சையும் சிவப்பு நிறமும் கொண்ட தொட்டால் சிணுங்கி எனும் மூலிகையாகும்.
தொட்டால் சிணுங்கியின் பூர்வீகம் வட அமெரிக்கா மற்றும் மத்திய அமெரிக்கா. பின்னர் இது தெற்கு ஆசியா, தென்கிழக்கு ஆசியா, பசிபிக் தீவுகள், ஆஸ்திரேலியா, நைஜீரியா, இந்தியா ஆகிய நாடுகளுக்கு பரவி உள்ளது. இது பெரும்பாலும் எளிதில் நீர் தேங்காத ஈரப்பதமான இடங்களில் வளரும். சுலபமாக படரும் ஓரிரு ஆண்டுகளில் அந்த இடத்தையே ஆக்கிரமித்துவிடும். இது காட்டுப்பகுதிகளில் விவசாயத்திற்கு இடையூறு விளைவிக்கும் ஒரு களைச்செடியாகும்.
தொட்டால் சிணுங்கி தமிழ் நாட்டில் எல்லா ஈரப்பதமான இடங்களிலும் தானே படர்ந்து வளரக்கூடிய சிறு முட்கள் கொண்ட மூலிகைச்செடியாகும். இது 5 அடி வரை படரும் தன்மையும், 2 அடி உயரம் உள்ள சிறு செடி வகை ஆகும். நீர்நிலை ஓரங்களிலும் ஆற்று ஓரங்களிலும் அதிகம் காணப்படும். கூட்டு இலைகள் ஜோடி, ஜோடியாக எதிர் அடுக்கில் இருக்கும். ஒவ்வொரு கிளைக்கும் சுமார் 10- முதல் 25 எதிர் அடுக்கு இலைகள் உள் நோக்கி இருக்கும். இலைகள் இடையில் பிங்க் அல்லது ஊதா நிறப் பந்து போன்ற பூக்கள் மேலே சிவப்பாகவும் அடியில் ஊதா நிறத்திலும் இருக்கும் பூவில் குச்சிகள் ஒரு செ.மீ. நீளத்தில் சிலிர்த்துள்ளது போல் இருக்கும். காய்கள் 2.5 மி.மீ. நீளத்தில் இருக்கும். காற்று மூலமும் பூச்சிகள் மூலமும் மகரந்தச் சேர்க்கை ஏற்படும். விதைகள் மூலமாக பரவும். இதன் இலைகள் மாலைக்கு மேல் உட்பக்கமாக மூடிக்கொள்ளும். சூரிய உதயத்தின் போது மறுபடியும் விரிந்து கொள்ளும். மனிதர்கள் தொட்டாலும், ஆடு மாடு போன்றவை ஏற்படுத்தும் அதிர்வுகளாலும் இலைகள் மூடிக்கொள்ளும். இதன் காரணமாகத்தான் இது ஆங்கிலத்தில் ‘ஜிஷீuநீலீ-னீமீ-ஸீஷீt’ என்று சொல்லப்படுகிறது. மூடிய இலைகள் பகலில் அரை மணி நேரம் கடந்து விரிந்து கொள்ளும்.
தொட்டால் சிணுங்கியின் தாவரவியல் பெயர் – Mimusa Pudica
Family – Leguminosae சமஸ்கிருதத்தில் லாஜா எனவும், ஹிந்தியில் லாஜ்வாண்டிஸ் எனவும் அழைக்கப்படுகின்றது.
இந்தியாவில் மேற்கு கடலோரப் பகுதிகளில் அதிகமாக காணப்படுகிறது. இது ஆரம்ப காலத்தில் அமெரிக்காவில் தோன்றிருக்கலாம் எனவும் பின்னர் இந்தியாவிற்கு வந்திருக்கலாம் எனவும் கருதப்படுகின்றது.
உபயோகமாகும் பாகம் – இலை, வேர்
பொது குணங்கள் – டானிக்காக, இரத்த விருத்திக்கு பயன்படக்கூடியது, நரம்புத் தளர்ச்சியை போக்கி ஆண்களுக்கு வலுவூட்டக் கூடியது
மருத்துவ பயன்கள்.
இலையின் சாறு இரத்தத்தை சுத்தப்படுத்தக் கூடியது.
இவை பாக்டீரியாக்களை எதிர்க்கும். சக்தி கொண்டவை.
ஒரு பங்கு இலையுடன் பத்து பங்கு நீர் சேர்த்து அடுப்பிலிட்டு காய்ச்சி பாதியாக ஆனதும் இறக்கி வடிகட்டி வைத்துக் கொண்டு தினசரி காலையும் இரவும் உணவிற்கு முன்பாக 10 – 20 மி.லி. குடித்து வர கிட்னி செயல்பாடு தூண்டப்படும்.
செயல்பாடு குன்றிய கிட்னியையும் ஊக்கப்படுத்த உகந்தது.
மூலம் பவுத்திரம் போன்ற ஆசன வாய்க் கோளாறுகளுக்கு இலையையும் வேரையும் சேர்த்து நன்கு கழுவி வெயிலில் இட்டு உலர்த்தி பொடியாக்கி வைத்துக் கொண்டு தினசரி காலை 3 – 5 கிராம் அளவு பவுடரை சிறிது பால் சேர்த்து குளப்பி சாப்பிட்டு வர நல்ல நிவாரணம் தெரியும். அளவில் பெரிய பவுத்திரமும் கூட எளிதாக சுருங்கிடும்.
விரை வீக்கத்திற்கு இதன் இலைகளை மை போல அரைத்து பற்றுப் போட்டு வர வீக்கம் குறையும். கை கால்களில் உள்ள தசை வீக்கத்திற்கும் கூட இதன் இலைகளை சிறிது அரைத்து பற்று போல போட்டு வர வீக்கம் வற்றிடும்.
இடுப்பு வலி முதுகு வலி போன்ற பிரச்சனைகளுக்கு இரு கைப்பிடி அளவு இலைகளை எடுத்து ஒரு பெரிய வாளியில் வெந்நீர் வைத்து அதில் போட்டு சிறிது நேரம் உட்கார நல்ல பலன் தெரியும். தொட்டால் சிணுங்கி நீரிழிவிற்கும் ஒர் சிறந்த மருந்தாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதன் இலை மற்றும் வேர்களை நன்கு கழுவி உலர்த்தி பவுடராக்கி வைத்துக் கொண்டு தினசரி காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் 4 – 8 கிராம் காலை சிறிது நீர் அல்லது பாலில் குளப்பி சாப்பிட்டு வர கட்டுப்படாத நீரிழிவும் கட்டுப்படும்.
பத்து முதல் இருபது நாட்கள் தொடர்ந்து உட்கொள்ள சிற்றின்பம் பெருகும். ஆண்மை பெருக இரவு பாலில் 15 கிராம் கலந்து சாப்பிட வேண்டும்.
தொட்டாற் சுருங்கி மேகமூத்திரத்தை நீக்கும், பெண் வசியம் செய்யும், உடலின் வாதத் தடிப்பைக் கரைக்கும்.
தொட்டால் சிணுங்கி என்பது ஆச்சரியமான தாவரம் மட்டுமல்ல…மருத்துவக் குணங்கள் நிறைந்த அதிசயமான தாவரமாகவும் இருக்கிறது.இனி உங்கள் பாதையில் தொட்டால் சிணுங்கியைப் பார்க்க நேர்ந்தால் வேடிக்கையாக தொட்டுப் பார்க்காமல் மருந்துக்கு பயன்படுத்தவும் முயற்சிப்பீர்கள் தானே!
– மு.அழகர்பாரதி