இடை, இல்லாதது போல் இருக்க

Spread the love

‘‘இருக்கானா..? இடுப்பு இருக்கானா..?

இல்லியானா? இ(ல்)லியானா

உன் இடைதானா.. இன்பக் கடைதானா..’’

& இந்த சினிமா பாடலை அனைவரும் கேட்டிருப்பீர்கள்.

ஒல்லியான இடைதான் பெண்களுக்கு அழகு. இந்தப் பாடலில் நடித்திருக்கும் நடிகை இலியானாவுக்கு இடை அப்படித்தான் இருக்கும்.

‘‘ உன் இடையைப் பார்த்தேன்

பிரம்மன் கஞ்சன் என்று நினைத்தேன்

சற்றே நிமிர்ந்தேன்

அவன் வள்ளல் என்று உணர்ந்தேன்’’

என்றொரு கவிதையும் உண்டு.

அதனால்தான் உண்டி சுருக்குதல் பெண்டிர்க்கு அழகு என்றார்கள்.

பெண்கள் தாங்கள் உண்ணும் அளவை சுருக்கிச் சாப்பிட வேண்டும். அது தான் அவர்களுக்கு அழகு என்பது போல அர்த்தம் எடுக்கிறோம். மனிதனாகப் பிறந்து விட்டால் ஆண் என்ன? பெண் என்ன? எல்லோருக்கும் வயிறு ஒன்று தான். உண்ணும் உணவு அளவில் சற்றே வேண்டுமானால் மாறுபாடு இருக்கும். பெண்களுக்கு மட்டும் உணவை சற்றுக் குறைத்து உண்ணுங்கள் என்று கூறும் இந்த பழமொழி ஆணுக்கு ஒன்றும் கூறவில்லை என்ற சந்தேகம் பெண்களிடம் காணப்படும்.

பொதுவாக பெண்களின் அழகு அவளின் உடல் உறுப்ப்புகளில் மார்பு, புட்டம், இடுப்பு முக்கியப் பங்கு வகிக்கிறது. பெண்கள் அழகாகக் காணப்பட வேண்டும் எனில் இடுப்புப் பகுதி சுருங்கி இருத்தல் வேண்டும். துடி இடை என்பதற்கு உடுக்கை போன்ற இடை என்று பொருள். உடுக்கையின் இரு முனைகளுக்கு இடையில் சுருங்கி வளைவாக இருப்பது போல இருக்க வேண்டும்.

மார்பகப் பகுதிகளும், புட்டப் பகுதிகளும் புடைத்தும், இடுப்புப் பகுதி இல்லையோ என்று கூறுமளவுக்கு சுருங்கியும் இருக்க வேண்டும் என்பது இலக்கியத்தில் ஒரு விதியாகும். இன்றைய அழகுப் போட்டியில் கலந்து கொள்ளும் பெண்களுக்கு உலகமே 36 18 36 என்று தான் அளவு எடுக்கிறது. இதன் படி மார்பும், புட்டமும் 36 அங்குல அளவும் இடுப்பு 18 அங்குலம் சுற்றளவும் இருக்க வேண்டும் என்று கூறுகிறார்கள்.

திருவள்ளுவரின் 1115வது குறளில்

அனிச்சப்பூக் கால்களை யாள்பெய்தாள் நுசுப்பிற்கு

நல்ல படாஅ பறை     

என்ற குறள் வழியாக அவர் கூறுவது அனிச்சப் பூவை காம்புகளைக் களையாமல் அவனுடைய காதலி பறித்து தலையில் சூடிக் கொண்டாளாம். அந்த சுமையைத் தாங்க மாட்டாமல் இடுப்பு ஒடிந்ததாம். இந்த காட்சியை மங்கலமாக பறைகள் ஒலிக்க மாட்டாது என்று கூறுகிறார். இதன் மூலம் நாம் அறிந்து கொள்ள வேண்டியது பெண்களின் இடுப்பானது சுருங்குதல் அவர்களுக்கு அழகைத் தருகிறது என்று இலக்கியமும், அறிவியலும் தெளிவாகக் கூறுகின்றன எனலாம்.

இதில் உண்டி என்னும் சொல் பலவித அர்த்தம் தருகிறது என்று ஒரு சிலர் கூறுகின்றனர். உண்டி என்றால் உணவு என்பது தான் அர்த்தமாகிறது. கர்ப்பமாகியிருக்கிறாள் என்றும் பொருள் எடுக்கலாம். ஆனால் உண்டிகை என்பது இடுப்பைக் குறிக்கும் என்று தமிழ் அறிஞர்கள் எண்ணுகின்றனர். அவ்வையாரும் இதனை உணர்ந்தே பாடியிருக்கலாம். உணவை அடிக்கடி அல்லது அதிக அளவில் உண்பதால் வயிறு புடைத்துக் கொள்ளும். இதனால் அழகு கெடும். அளவைக் குறைக்க பெண்களின் இடுப்பு சுருங்க வழி ஏற்படும். இதன் மூலம் அவர்களின் அழகு கூடும் என்பது அர்த்தம் தருகிறது.


Spread the love