மூட்டு வலியினால் நீர்க்கோத்துக் காணப்படும் வீக்கமும் சரியாகும். காய்ந்த பழுப்பு இலையுடன், தேங்காய் எண்ணெய் சேர்த்து அரைத்து சரும நோய்களுக்கு வெளிப் பூச்சாகப் பூசலாம். பழுப்பு இலையைத் தீயில் கருக்கி சாம்பலாக்கி, அதனைத் தேங்காய் எண்ணெயுடன் கலந்து தேய்த்தால், சரும அரிப்பு, கரப்பான் உள்ளிட்டவை குணமாகும்.
பூவரசுப் பட்டையை சிறு சிறு துண்டுகளாக்கி நீரில் இட்டுக் காய்ச்சி தண்ணீரை வடிகட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் வடிகட்டிய தண்ணீருடன் தேங்காய் எண்ணெய் கலந்து மீண்டும் காய்ச்சி எடுத்துக்கொண்டு சரும வெடிப்பு மற்றும் கரும்படை உள்ள பகுதிகளில் தேய்த்து வந்தால், விரைவில் குணமாகும். பட்டையை எரித்துச் சாம்பலாக்கித் தேங்காய் எண்ணெயுடன் கலந்தும் சரும நோய்க்குப் பயன்படுத்தலாம். வயிற்றுக் கழிச்சலுக்கு பட்டைக் கஷாயம் கை கொடுக்கும்.
பூவரசு மரத்தின் காயை மஞ்சளுடன் சேர்த்து அரைத்து சிரங்கு, கால் சேற்றுப்புண் இவற்றுக்கு வெளிப்புறமாகப் பூச நல்ல குணம் கிட்டும். காயை இடித்துச் சாறு எடுத்து, சருமத்தில் தடவிவந்தால் தேமல் மறையும். தலை முடி மற்றும் மீசை, புருவத்தில் வரும் ‘புழு வெட்டு’ப் பிரச்னைக்குப் பூவரசுக் காயை இடித்து அதனுடன் உப்பு சேர்த்து அரைத்துப் பூசலாம். மேலும் வைரஸ் தொற்றைத் தடுக்கும் தன்மையும் இந்தக் காய்க்கு உண்டு.
அழகிய மஞ்சள் நிறத்திலான பூவரசம் பூவை அரைத்தெடுத்து சருமத்தில் பூசிவர, தோல் வெடிப்பு நீங்கி சருமம் பளபளக்கும். பூவோடு விளக்கெண்ணெய் சேர்த்து அரைத்து, பித்த வெடிப்பு, ஆசனவாய் வெடிப்பு, மூலநோய் இவற்றுக்கு வெளிப்புறமாகத் தடவிவர விரைவில் குணமாகும்.
சத்யா