எத்தகைய நிலத்திலும் வளரும் உயர் மருத்துவக் குணங்கள்கொண்ட மரம் பூவரசு. இதய வடிவத்தில் இலை, நீண்ட காம்பு, மஞ்சள் நிறப் பூக்களைக்கொண்ட பூவரசு மரத்தின் இலை, பட்டை, பூ, காய் என அனைத்துப் பாகங்களும் பல்வேறு நோய்களைக் குணப்படுத்தும் குணம்கொண்டவை.
சிறுசிறு விஷ வண்டுகளை வீட்டுக்குள் வரவிடாமல் தடுக்கும் இயல்பு பூவரசு இலைக்கு உண்டு. இதனால், கிராமப்புறங்களில், வீட்டு முற்றத்தில் வண்ணக் கோலமிட்டு, பூவரசு இலையில், பசுவின் சாணத்தை வைத்து, அதன் மேல் பூசணிப் பூ அல்லது பூவரசு மரத்தின் பூவினை வைப்பார்கள். பூவரசு இலையில் கொழுக்கட்டை செய்வதும் இன்று வரை கிராமங்களில் வழக்கில் உள்ளது.
எவ்வளவு சூடு செய்தாலும் இதன் நிறம் கொழுக்கட்டையில் கலக்காது. மேலும், பூவரசு இலையில் இருக்கிற குளோரோஃபில் என்கிற பசுங்கனிகம் உடலுக்குக் குளிர்ச்சியை அளிப்பதோடு,நோய்எதிர்ப்புத்தன்மையையும் கூடுதலாக்கும்.
இதில் நிறைந்திருக்கிற லியூப்னோன், லியூப்யோல், அல்கேன்ஸ் போன்ற வேதிப் பொருட்கள் தீமை செய்யும் பாக்டீரியாக்களைக் கொல்லும் தன்மைகொண்டவை. இதில் உள்ள பாப்யுல் மீத்தேன் மற்றும் ஹெர்பசெடின் போன்ற வேதிப் பொருட்கள் கருப்பையைப் பலப்படுத்தும் டானிக்குகளில் பயன்படுத்தப்படுகின்றன.
வீக்கம் மற்றும் வலியால் அவதிப்படுபவர்கள், பூவரசு இலையை நன்கு இடித்துத் துவையலாக மசித்து, பின் சூடுசெய்து துணியில் பொட்டலமாகக் கட்டிவைத்துக் கொள்ள வேண்டும். பிறகு உடலில் அடிபட்டு வீக்கமான இடங்களில் இந்தப் பொட்டலத்தால் ஒத்தடம் கொடுக்க, வீக்கமும் வலியும் ஒருசேரக் குறையும்.
தொடரும் …