இன்றைய தலைமுறை அறிவை மட்டுமின்றி வயிற்றையும் அதீதமாகவே வளர்த்துக் கொண்டு இருக்கிறது. இதில் ஆணுக்கு பெண் சளைத்தவர் இல்லை என்று போட்டி போட்டுக் கொண்டு இருபாலருமே முன்னிலையில் இருக்கின்றனர். எந்த முயற்சியும் செய்யாமல் வளர்ந்த வயிறு எவ்வளவு முயற்சி செய்தும் குறைய மறுக்கும்போதுதான். வயிற்றின் முக்கியத்துவம் வாழ்வில் தெரிய வருகிறது. வயிற்றின் அளவு பெருகப் பெருக நோய்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போகிறது.
நோய்களின் தொடக்கம் முதலில் வயிற்றிலிருந்துதான் ஆரம்பிக்கிறது. அதனால்தான் நமது முன்னோர்கள் ‘ மலச்சிக்கலும் செரியாமையும் ஆதி நோய்கள் மற்றவை எல்லாம் மீதி நோய்கள்’ என்று நோய் தொடங்குமிடத்தை நன்கு காட்டியுள்ளனர்.
இன்றளவும் நாம் மலச்சிக்கல் என்னும் நோயை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை. அதனாலே நமது உடல் நலம் கெட்டு வேறு பல நோய்களாக உருமாற்றம் அடைந்து ஒவ்வொரு நோய்க்கும் தனித்தனி சிறப்பு மருத்துவர்களிடம் தவம் கிடந்து சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கிறோம். எல்லா நோய்களுக்கும் அடிப்படையான மலச்சிக்கலைத் தவிர்த்தாலே ஆரோக்கியம் என்னும் அணிகலன் நம்முடன் ஒட்டிக்கொள்ளும்.
மலச்சிக்கல் குழந்தைப் பருவத்தில் இருந்தே உண்டாகிறது. பிறந்த குழந்தை தாய்ப்பாலை மட்டுமே உணவாகக் கொள்ளும் வரை மலச்சிக்கல் ஏற்படுவதில்லை. அதற்கு தாய்ப்பாலை தவிர்த்து பிற உணவுகளைக் கொடுத்துப் பழகும்போதே மலச்சிக்கல் ஏற்பட தொடங்குகிறது. பின்னர் மருத்துவர் கூறும் அறிவுரைப்படி உணவுகளைக் கொடுக்கிறோம்.
இதற்கு அடுத்தபடியாக பள்ளிப் பருவத்திலேயே தொடக்கப்பள்ளிக் குழந்தைகள் முதல் மேல்நிலைப் பள்ளி சிறுவர்கள் வரை மலச்சிக்கல் உள்ள மாணவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது. இதற்கு உணவுப் பொருளும் பெருங்காரணமாக அமைந்துவிடுகிறது.
முன்பெல்லாம் குழந்தைகளும் பெரியவர்களும் தின்பண்டங்களாகச் சுவைத்து வந்த கடலை உருண்டை, பொரி உருண்டை, வெல்லம்&பயத்தம் பருப்பு கஞ்சி, அதிரசம், கேழ்வரகு புட்டு, கேழ்வரகு அடை போன்ற சத்தும் சுவையும் நிறைந்த உணவுகள் மாறிப்போய் இன்று பானிபூரி, பர்கர், பிரட், கேக் வகைகள் போன்ற எளிதில் ஜீரணிக்காத சத்துக்கள் குறைந்த உணவுகளை உண்பது நாகரிகமாகவும் பழக்கமாகவும் மாறிவிட்டது. தொடர்ச்சியாக இதுபோன்ற உணவு வகைகளை உண்ணும் குழந்தைகள் நாளடைவில் அஜீரணம், உப்புசம், வயிற்றுவலியுடன் நீடித்த மலச்சிக்கலையும் துணையாகக் கொள்கின்றனர். மலம் கழிப்பது சுமையாகவும், துன்பமாகவும் மாறும்போது நம் ஆரோக்கியமும் கேள்விக் குறியாக மாறி விடுகிறது.
முதல் நாள் தங்கிய கழிவுகள் மறு நாளுக்குள் வெளிவந்துவிட்டால் உடல் தூய்மை பெறும். மாறாக அக்கழிவுகள் உடலிலேயே தேக்கமுறும்போது அது உடல் முழுவதற்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
அதிகளவு தண்ணீர் குடிப்பது மலச்சிக்கலைத் தவிர்க்கும் எளிய வழியாகும். அதிலும் வெதுவெதுப்பான தண்ணீர் நல்ல பலனளிக்கும்.
மேலும் நாம் உண்ணும் உணவில் கீரை வகைகளையும் நார்ச்சத்து நிறைந்த காய்கறிகள், பழ வகைகள் முதலியவற்றை சேர்த்துக்கொள்வது அவசியமாகும். மாவுப் பண்டங்களை முடிந்த வரை குறைத்துக் கொண்டு எளிதில் ஜீரணிக்கக் கூடிய கஞ்சி வகை உணவுகளை அதிகம் சேர்த்துக் கொள்வது நல்லது.
தினசரி சிறிது நேரம் தவறாது உடற்பயிற்சி, பிராணாயாமம் உள்ளிட்ட மூச்சுப் பயிற்சிகள் மற்றும் யோகாவும் தவறாது செய்துவந்தால் மலச்சிக்கலைப் போக்கி வயிற்றுப் பகுதியை உறுதிப்படுத்தும்.
குழந்தைகளையும் இளம் வயது மாணவ&மாணவிகளையும் காலந்தவறாமல் மலங்கழிக்கப் பழக்குவதுடன் மலம் வரும் உணர்வு ஏற்படும்போதே அதை அடக்கி வைக்காமல் உடன் கழிக்கப் பழகுவதும் நாம் கற்றுக் கொடுக்க வேண்டிய முக்கிய நெறியாகும். மேலும் முடிந்தவரை இயற்கை உணவுகளான பழங்கள், காய்கறிகளை உட்கொள்ள வேண்டும்.
வீட்டில் உள்ள பெண்மணிகள் அன்றைய தினம் சமைத்த மீதமுள்ள உணவை வீணாக்க மனமில்லாமல் குப்பையில் போடுவதற்குப் பதிலாக, தொப்பையில் போடும் பழக்கத்தையும் தவிர்த்தல் வேண்டும்.