துன்பமும், துயரமும் சூறாவளி போல் சூழ்கின்ற போது மனிதன் இறைவனைத் துணைக்கு அழைக்கிறான். இது ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினரிடையே மட்டுமின்றி உலகெங்கிலும் பரவலாகக் காணப்படுகின்ற ஒரு பழக்கம், இறை நம்பிக்கை இல்லாதவர்கள் கூட இன்னல்களால் சூழப்படுகின்ற போது இறைவனை எண்ணத் தொடங்குவது இயல்பு.
நடுக்கடலில் தத்தளிக்கும் ஓருவன் கையில் கிடைக்கும் ஒரு சிறு மரத்துண்டைப் பற்றிக் கொண்டு கரை சேர முயல்வது போல் துன்பக் கடலில் தத்தளிக்கும் மனிதனுக்கு இறையுணர்வு துணையாகிறது. பெரும்பாலான மக்களது ஆழ் மனதில் பதிந்திருக்கும் இறை நம்பிக்கையும் இறை வழிபாட்டின் மீதுள்ள நம்பிக்கையும் தான் இதற்கு காரணம்.
இறை வழிபாட்டின் தேவை உணரப்படுகிறதோ இல்லையோ நடைமுறையில் வாழ்வில் மனிதர்களது இதயத்தை அமுக்கிக் கொண்டிருக்கும் இன்னல்களை, துயரச் சுமைகளை, உணர்ச்சிக் கொந்தளிப்பை, வெளிக் கொணர ஒரு வடிகால் தேவைப்படுகிறது. இது போன்றதொரு வடிகால் இல்லாது தங்களது உள்ளத்து உணர்ச்சிகளைத் தங்களுக்குள்ளே அடக்கிக் கொண்டு மருகுகின்றவர்களைக் குடற்புண்ணும், புற்றுநோயும், மனநோய்களும் எளிதாகத் தாக்குகின்றன.
இறை வழிபடும் போது நமது இதயத்தை அழுத்துகின்ற துயரத்தை, இன்னல்களை அச்சத்தை, பற்றார்வத்தை இறைவனுக்குத் தெரிவிக்கின்றோம். முறையிடுகின்றோம், மன்றாடுகின்றோம் இதனால் நமது உணர்வுகள் வெளிப்பட்டு நமது மனம் இலேசாகிறது.
நம்பிக்கை
இறை வழிபாடு பெரும்பாலும் முறையீடுகளாகவும், வேண்டுதல்களாகவும் அமைகிறது. துன்பத்தின் பிடியில் சிக்கித் துவள்கின்ற மனித மனதில் இறைவன் நம்மைக் காத்து புரந்தருவான் என்றிருக்கின்ற ஆழ்ந்த நம்பிக்கையும் பற்றுதலுமே இதற்குக் காரணம். இந்த நம்பிக்கை மெய்யானதா, ஈடேறக் கூடியதா அல்லது ஒரு மாயையா என்றால் நிச்சயமாக ஈடேறக் கூடியது என்றே சொல்ல வேண்டும்.
எல்லா நம்பிக்கைகளுமே மெய்யானவை தான். மனிதன் வாழ்வற்கான உள்ளத் துணிவையும், உறுதியையும் தருவது இந்த நம்பிக்கை தான்.
வாழ்ந்தே தீருவேன் என்ற உறுதியும், உந்துதலும் நம்பிக்கையும் உடைய மனிதர்களே நெடு நாட்கள் வாழ்கிறார்கள் என்று மனித இன நூலார் (Anthropologists) பலர் தெரிவிக்கின்றனர். நடப்பிலும் சிந்தனையிலும் தம்முயிரைக் காத்துக் கொள்ள வேண்டிய அனைத்தையும் மனிதர்கள் செய்கின்றனர்.
இதற்கு நேர்மாறாக, தங்களிடத்திலும், இறைவனிடத்திலும் நம்பிக்கை இழந்தவர்கள் தங்களை அறியாமல் தங்களைத் தாங்களே கொன்று கொள்ளும் முயற்சியில் ஈடுபடுகின்றனர். எதிலும் பிடிப்பின்றி இருக்கிறார்கள். ஏமாற்றத்தால் தவிக்கின்றார்கள். தக்க உணவுகளையும் நோய் தீர்க்கும் மருந்துகளையும் இவர்கள் தவிர்க்க முயல்கின்றனர். வேறு சிலர் கண்டவற்றைத் தின்றும் கணக்கின்றிக் குடித்தும் தங்களை அழித்துக் கொள்கின்றனர்.
இறை வழிபாட்டில் இறைவனுக்கு நன்றி செலுத்துதல் ஒரு வகையாகும். இதன் மூலம் மனிதன் தன்னுடைய வாழ்க்கையின் ஒளிமிக்க, பிரகாசமான பகுதியைப் பார்க்கிறான். அதற்காக இறைவனுக்கு நன்றி செலுத்துகிறான். இதனால் அவனது மனப்பாங்கு கண்ணோட்டம் சீரடைகின்றது. இது அவனது உடல் நலத்தை உயர்த்த உதவுகின்றது.