பருவமடைந்த ஒரு பெண் பூப்பெய்த நிகழ்ச்சிக்குப் பின்பு அவளது திருமண வாழ்க்கையும் அதனைத் தொடந்து அவள் தாய்மை அடைவதும் அவளது வாழ்வில் ஒரு முக்கிய நிகழ்வுகள்… தாய்மை என்பது ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒரு புதுமையான அனுபவம். தனக்குப் பிறக்கப்போகும் குழந்தை ஆரோக்கியமாக, அழகாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படாத பெண்களே இவ்வுலகில் இல்லை. ஆரோக்கியமுள்ள ஒரு குழந்தைக்காக சில முக்கியமான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். பெண்ணின் உடல் அமைப்பு ஆணின் உடல் அமைப்பை விட மிகவும் சிக்கலானது. பெண்ணின் உடல் அமைப்பின் குறிக்கோள் உயிர் வாழ்ந்து கருத்தரிப்பது மட்டுமல்ல. ஒரு புதிய உயிரை தன்னுள்ளே உண்டாக்குவதாகும்.
கருத்தரித்த நேரத்திலிருந்தே ஒரு புது மனிதனை உருவாக்கும் பொறுப்பு தாய்க்கு ஏற்படுகிறது. மனித வாழ்க்கையில், கருப்பையில் தான் வெகு வேகமான வளர்ச்சியும், முன்னேற்றமும் ஆரம்பிக்கிறது. கண்ணுக்குத் தெரியாத ஒரு அணுவிலிருந்து ஒரு உயிர் உற்பத்தியாகி, நாளுக்கு நாள் பெரிதாகி, உடலின் கண், காது, இதயம் போன்ற ஒவ்வொரு உறுப்புகளும் முதல் மூன்று மாதங்களுக்குள்ளேயே உருவாக்கப்படுகின்றன. இந்த முதல் மூன்று மாதங்களில் தாய்க்கு ஏற்படும் எந்த நோயும், சத்துக் குறைவான உணவும், சில மருந்துகளும், எக்ஸ்-ரே கதிர்களும் புதிய ஜீவன் நல்ல முறையில் உருவாவதைத் தடுக்கும். இவற்றின் விளைவால் எளிதில் கருச்சிதைவு ஏற்படலாம் அல்லது பிறக்கும் குழந்தை ஊனமுற்றுப் பிறக்கலாம். எனவே, கருத்தரித்த முதல் மூன்று மாதங்களும் மிக முக்கியமான காலமாக கருதப்படுவதால் தாய்மார்கள் அதிகக் கவனமாக இருத்தல் வேண்டும். கண்ட கண்ட மருந்துகளைச் சாப்பிடக் கூடாது.
மூன்று மாதங்களுக்குப் பிறகு உடல் உறுப்புகள் அமைவதுடன், கருவும் விரைவில் வளர்ந்து சிசுவாகிறது. வெகு விரைவாக வளரும் இச்சிசுவிற்கு ஊட்டச் சத்துக்கள் அதிகம் தேவைப்படுகிறது. கருச் சிசுவின் எலும்புகள், தசைகள், இரத்தம், மூளை முதலியவைகள் தோன்றி, வெகு விரைவில் வளருவதால், அதிகமான அளவில் சத்துக்கள் தேவைப்படுகின்றன. சிசு தாயின் உடம்பிலிருந்து தொப்புள் கொடியின் மூலம் தனக்குத் தேவையான சத்துக்களை பெற்றுக் கொள்கிறது. தாயின் கர்ப்பப் பையில் உள்ள சிசு மட்டும் வளரவில்லை. ஒரு வகையில் தாயும் கூட சேர்ந்து வளர்கிறாள் என்று தான் கூற வேண்டும். வளரும் குழந்தையைத் தாங்கிக் கொள்ள கருப்பையும் வேகமாக வளருகிறது. கருத்தரிப்பதற்கு முன்னர் கருப்பை 40 முதல் 50 கிராம் எடையில் இருந்து கர்ப்பத்தின் போது ஒரு கிலோ எடை அடைகிறது. கரு வளர, வளர கர்ப்பப் பையின் அளவும் பெரிதாகிறது. கர்ப்பக் காலத்தில் 3 வது மாதம் 16 செ.மீ. உயரம் கொண்ட கர்ப்பப்பை 9 வது மாதம் 32 செ.மீ அளவு உயரம் அடைகிறது. அதனோடு தாயின் மார்பகங்களும் வளருகின்றன.
குழந்தை பிறந்த நிமிடத்திலிருந்தே பால் கொடுக்க வேண்டிய அவசியம் இருப்பதால் மார்பகங்கள் பெருத்து, பால் சுரக்கும் சுரப்பிகள் பக்குவமடைகின்றன . வளரும் சிசுவிற்குத் தேவையான புரதம், கலோரி, இரும்பு, சுண்ணாம்புச் சத்து, வைட்டமின் ஏ, டி முதலியவற்றை தாய் தன் இரத்தத்தின் மூலம் தர வேண்டியிருக்கிறது. குழந்தை பிறந்த பிறகு தனக்குத் தேவைப்படும் இரும்புச் சத்து, கொழுப்புச் சத்து, வைட்டமின் எல்லாவற்றையும் கர்ப்பிணியானவள் சத்துள்ள பாலைக் கொடுக்க தாய் தன்னுள் அதிக சத்துக்களை சேர்த்து வைக்க வேண்டியுள்ளது. குழந்தைக்குத் தேவையான நோய் எதிர்ப்பாற்றல் சக்தியையும் அதிக அளவில் உற்பத்தி செய்ய வேண்டியுள்ளது. இதனை கருத்தில் கொண்டு கர்ப்பம் தரித்த பெண் நல்ல சத்துணவுகளை உட்கொள்வது அவசியமாகிறது. இவ்வாறு பெருகிக் கொண்டே போகும் தன் வயிற்றிலுள்ள குழந்தையின் தேவைகளை சமாளிக்க, தாயின் உடலில் இரத்த சதவீகிதம் அதிகமாகிறது. ஆரோக்கியமான குழந்தையைப் பெற தாய் நல்ல சத்துணவு உண்ண வேண்டும். அவ்வாறு உண்டால் தான் கருப்பையில் உள்ள சிசுவின் வளர்ச்சியும் நன்றாக இருக்கும். தாய்மார்களுக்கு இருக்கும் சத்துக் குறை நோய்களால் பிறக்கும் போது குழந்தைகள் வளர்ச்சிக் குன்றி குறை எடையோடு பிறக்கிறார்கள். குறை எடையுடன் பிறக்கும் குழந்தை பலம் குன்றியதாக அமைந்து, எளிதில் நோய்வாய்ப்படவும் நேரிடுகிறது.
குழந்தை கருத்தரித்த நாளிலிருந்தே சத்துணவுகளை உண்ணுவதுடன், உடல் பரிசோதனைகளை தவறாமல் செய்து கொண்டு தங்கள் உடல் நலத்தைப் பேணுதல் அவசியம். கர்ப்பம் சுகமாக முடிய உடற்பயிற்சி அவசியம். கர்ப்பப் பையில் உள்ள சிசு சிறந்த முறையில் வளர கர்ப்பிணிகளுக்கு தூக்கமும் மிகவும் அவசியமானது.
தாய் நல்ல உணவு அருந்தி, குழந்தையைப் பாதுகாப்பது போல, பிறந்த பின் அதனைத் தாக்கும் நச்சுக் கிருமிகளை எதிர்க்கும் திறனையும் அளிக்க வேண்டும். பிறந்த குழந்தை சன்னி எனப்படும் டெடனஸ் டாக்ஸ்ய்டு என்ற தடுப்பூசியை கர்ப்பம் தரித்த 8, 9, 10 ம் மாதங்களில் மாதத்திற்கு ஒரு ஊசி வீதம் மூன்று ஊசிகள் போட்டுக் கொள்ள வேண்டும்.
தாயானவள் தனக்கு மட்டுமின்றி, தன்னுள் வளரும் சிசுவிற்காகவும் சேர்த்து சாப்பிட வேண்டும். கர்ப்பிணிக்கு மாமிசம், மீன், முட்டை போன்ற விசேஷமான உணவு தான் கொடுக்க வேண்டும் என்பதில்லை. ஆனால் நாள் தோறும் சாப்பிடுவதையே அதிக அளவில் சாப்பிட வேண்டும். அரிசி சாப்பிடுபவர்கள் அரிசியை அதிகமாகச் சாப்பிட வேண்டும். அத்துடன் கீரை, பருப்பு, மொச்சை முதலியவைகளை அதிகளவில் சாப்பிட்டால், வயிற்றில் வளரும் குழந்தை மிகப் பெரியதாக வளரும் என்று கவலைப்பட வேண்டியதில்லை. அதிக அளவில் சாப்பிட்டால் குழந்தை ஆரோக்கியமாக இருக்கும். தாயும் குழந்தையைப் பெற்றெடுக்கத் தேவையான பலத்தைப் பெறுவாள். பிரசவமும் சுலபமாகும். கர்ப்பிணிப் பெண்களுக்கு இரத்தக் குறைவால் சோகை அதிக அளவில் காணப்படும். இதனால் சோர்வும், பலவீனமும் அதிகமாகும். இந்நிலையில் கர்ப்பத்தில் வளரும் சிசுவும் சிறியதாகவும் பலவீனமாகவும் இருக்கும். இந்நிலை நீடித்தால் பிரசவ சமயத்தில் அபாயம் நேரிடலாம். இதற்கு கீரை வகைகளை அதிகம் உணவில் சேர்த்துக் கொள்வதுடன், இரும்புச் சத்துள்ள மாத்திரையை நாள் தோறும் சாப்பிட வேண்டும். தாயின் உடம்பில் நல்ல இரத்த ஓட்டம் இருந்தால் தான் அவள் சிசுவும் பலம் உள்ளதாக இருக்கும். அதற்கும் நல்ல இரத்த ஓட்டம் இருக்கும். எனவே எல்லாக் கர்ப்பிணிப் பெண்களும் இரும்புச் சத்துள்ள மாத்திரைகளை நாள்தோறும் சேர்த்துக் கொள்வது மிகவும் அவசியம்.