வெள்ளை மருது

Spread the love

வெள்ளை மருது எனப்படும் TERMINALIA ARJUNA, ஆயுர்வேதத்தில் அர்ஜுனா எனவும் தாவலா எனவும் அழைக்கப்படுகிறது. வெள்ளை மருது COMBRETACEAE எனும் குடும்ப வகையாக தாவரவியலில் பிரிக்கப்பட்டுள்ளது. வெள்ளை மருது, மருது எனவும் அழைக்கப்படுகின்றது. இதன் இலைகள், மரப்பட்டை, காய்கள், மருத்துவ குணம் பெற்றவை.

மருது ஓங்கி வளரக் கூடிய மர வகையாகும் அதன் கிளைகள் தொங்குகின்ற விதமாக அமைந்திருக்கும் சுமார் 70 அடி முதல் 100 அடி வரை வளரக் கூடியவை மருத மரம். இந்த மரப்பட்டை எளிதாக உரிக்கக் கூடியவை இலைகள் 10 – 15 செ.மீ. அளவு உள்ள நீள வடிவமாக அமைந்திருக்கும்.

மருத மரம் இந்தியாவில் தோன்றி பழமையான மருத்துவ குணம் படைத்த மரங்களுள் முதன்மையானது. பழங்கால சுவடிகளிலும் குறிப்புகளிலும் இதன் மருத்துவ குணங்கள் விளக்கப்பட்டுள்ளன. இம் மரத்தின் பட்டைகள் இதயத்திற்கு மிகவும் உகந்தவை. இதய நோய்களுக்கு இன்றியமையாத மருந்துகளின் முக்கிய மூலப் பொருளாக இவை பயன்படுகின்றன. ஆயுர்வேத மூலிகை மருத்துவ முறையில் இதயத்திற்கான தயாரிப்புகளில் மருதப்பட்டை முதலிடத்தைப் பெறுகின்றது.

மருத மரங்கள் இந்தியாவில் மட்டுமே காணப்படுகின்றன. இந்தியாவெங்கும் இம் மரங்கள் பயிரிடப்பட்டு வந்திருக்கின்றது. இவை மருத்துவ குணத்திற்காக மட்டுமல்லாது நிழல் தரும் மரமாகவும் அழகு தரும் மரமாகவும் சாலை ஓரங்களிலும் பூங்காக்களிலும் காணப்படுகின்றது. பொதுவாக இம் மரங்கள் இந்தியாவில் பஞ்சாப், மேற்குத் தொடர்ச்சி மலைகள், பீகார் ஒரிசா போன்ற மாநிலங்களில் அதிகமாகக் காணப்படுகின்றது. தமிழகத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் இவை அதிகமாகக் காணப்படுகின்றன.

சராசரியாக ஒரு மரம் ஒரு ஆண்டிற்கு 45 – 50 கிலோ மரப்பட்டையை தரலாம். மருத மரத்தின் காய்களில் அதிக மூலப் பொருட்கள் கிடைத்தாலும் குறைவாகக் கிடைக்கக் கூடிய மரப் பட்டைகளே மருத்துவ குணம் பெற்றவை. எனவே ஆயுர்வேத மருத்துவ முறையில் இவ்வகை மரப்பட்டைகளே அதிகம் பயன்படுத்தப்படுகின்றது.

மரப் பட்டைகளில் சுமார் 34 சதவிகிதம் சுண்ணாம்புச் சத்து CALCIUM CARBONATE வடிவில் காணப்படுகின்றன இந்த மரப்பட்டைகளை தண்ணீரிலிட்டு காய்ச்சி வடித்தால் அந்த நீரில் சுமார் 25% சதவிகிதம் சுண்ணாம்புச் சத்து இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மரப்பட்டையில் மேலும் அலுமினியம், டானின், மெக்னிஷியம் போன்றவையும் அர்ஜுனின் ARJUNIN என்ற தாவரவியல் மூலப் பொருளும் காணப்படுகின்றது. இவை தவிர அர்ஜுனிடின் , லேக்டோன் போன்றவையும் அர்ஜுனிக் அமிலமும் காணப்படுகின்றது.

ஆயுர்வேத மருத்துவ முறையில் மருத மரப்பட்டைகள் உடல் உஷ்ணத்தை தணிக்கக் கூடியவை. கப மற்றும் பித்த நாடிகளை சீராக்கக் கூடியது. இவை ஆயுர்வேத மருத்துவத்திலும் யுனானி மருத்துவ முறையிலும் எண்ணற்ற தயாரிப்புகளில் குறிப்பாக இதயம் காக்க இதய நோய்கள் நீக்க இதய வலுவூட்டியாக பயன்படுத்தப்படுகின்றது. ஆயுர்வேத மருத்துவர்கள் மருதப்பட்டை (அர்ஜுனா மரப்பட்டையை) விரும்பி இதய குறைபாடுகளுக்கும், இதய வலுவூட்டியாக பயன்படுத்துகின்றனர்.

மருதப்பட்டையை பாலுடன் சேர்த்து கை கால் எலும்பு முறிவிற்கு உபயோகிக்கலாம். நாளொன்றிற்கு 750 மி.கி. முதல் 2 கிராம் வரை வெறும் வயிற்றில் பாலுடன் கலந்து சாப்பிட நல்ல பலன் தெரியும். எலும்பு சிதைவுகளுக்கு தேனுடன் கலந்து சாப்பிடலாம். பித்த வாந்தி பித்தத் தலைவலி போன்றவற்றிற்கு காய்ச்சி வடித்து நீரினால் புண்களைக் கழுவினால் புண்கள் எளிதாக ஆறும். பருக்களுக்கு சிறிது மருதப்பட்டையை தேனில் கலந்து போட்டு வர நல்ல பலன் தெரியும்.

இவைகளின் சாற்றை காது வலிக்கு உபயோகிக்கலாம். மருதப்பட்டையை தொடர்ந்து பாலுடன் 48 நாட்கள் சாப்பிட்டு வர நரம்புத் தளர்ச்சி நீங்கும். பாலுறவில் விருப்பம் ஏற்படும். ஆயுர்வேதத்தில் மருதப்பட்டை ஆஸ்துமாவிற்கும் பயன்படுத்தப்படுகின்றது.

மருத மரத்தில் அதிகமாக டானின் காணப்படுவதால் அது தோல் பதனிடப்படும் பொழுது உபயோகப்படுத்தப்படுகின்றது. மருத மரம் வலிமை வாய்ந்த மரமாதலால் அவை விவசாய உபகரணங்களுக்கு உபயோகப்படுகின்றது. படகுகள் தயாரிப்பதற்கும் பயன்படுகின்றது. இந்தியாவில் சுமார் 14 வகையான மருத மரங்கள் காணப்படுகின்றன. இம் மரப்பட்டைகள் மருதப்பட்டை எனவும் அர்ஜுனா மரப்பட்டை எனவும் விற்கப்படுகின்றது.

சரகரின் பார்வையில் . . .

மருத மரம் மூன்று நிறத்தில் காணப்படுகின்றது வெள்ளை, கறுப்பு மற்றும் சிவப்பு நிறம். சிறிது புளிப்புத் தன்மை கொண்டது இம் மரப்பட்டை. இரத்தத்தை சுத்தப்படுத்தக் கூடியது உஷ்ணத்தை தணிக்கக் கூடியது. பலஹீனத்தை போக்கிடக் கூடியது. சர்க்கரை நோயில் பயன்படக்கூடியது. உடலின் தேவையற்ற கொழுப்பை நீக்கிடக் கூடியது.

கிருமி நாசினியாகவும், புண்களை ஆற்றிடக் கூடியது. மூலம், இதய நோய்கள், நீரிழிவு, சிறுநீர்க் கோளாறுகள், இரத்த சோகைக்கும் பயன்படக் கூடியது இம் மரம்.


Spread the love
error: Content is protected !!