மின்னும் பல்வரிசை, இனிமையான புன்னகைக்கு வித்திடுகிறது. பற்கள், இளம்பிராயத்தில் வெண்மையாகவும், தூய்மையாகவுமே முளைக்கின்றன. நாம் பற்களுக்குத் தரும் பராமரிப்பைப் பொறுத்தே அவை வெண்மையாகவோ, பழுப்பு அல்லது மஞ்சள் நிறமாகவோ ஆகிவிடுகின்றன. பற்கள், உடலின் இன்றியமையாத மிக முக்கியமான உறுப்பு. உணவினைக் கடித்து, மென்று சுவைத்து உண்ணவும், தெளிவாகப் பேசவும், களிவாகப் புன்னகை பூக்கவும் செய்வது பற்கள் தான்.
குழந்தைகளுக்குப் பற்களின் தூய்மையைப் பற்றி எடுத்துச் சொல்லி அவர்களுக்கு, பல் துலக்கும் பழக்கத்தை இனிமையான, பொழுதுபோக்காக கற்றுத் தரவேண்டும். பால் பற்கள் (milk teeth) எனப்படும் இருபது சிறு பற்கள் பல் ஈறுகளில் பிறக்கும் பொழுதே தொக்கிக் கொண்டிருக்கின்றன. குழந்தை பிறந்த ஐந்து மாதம் முதல் 2 வருடங்கள் வரையிலான இடைப்பட்ட காலத்தில் அடிக்கடி நமநமவென்று மேல் ஈறுடன் கீழ் ஈற்றினைச் சேர்த்துக் கடித்துக்கொண்டே இருப்பதனால், ஈறுகளின் உள்ளே புதைந்திருக்கும் பற்கள் சிறிது சிறிதாக வெளியே வருகின்றன. பல் முளைக்கும் கால அளவு குழந்தைக்கு குழந்தை மாறுபடுகின்றது.
5 முதல் 8 மாதங்களில் மேலும் கீழாக மான்டிபுலார் இன்சிசர், மாக்சிலாரி இன்சிசர் என்னும் 4 பற்கள் (Mandibular Incisor, Maxillary Incisor) முதலில் முளைக்கின்றன. அதன் பின்னர் குழந்தையின் ஒன்றரை வயதில் இரண்டு இன்சிசர் மற்றும் இரண்டு மோ லார் பற்கள் ஏறத்தாழ ஒரே காலகட்டத்தில் முளைக்கத் தொடங்குகின்றன.
பக்கவாட்டுப் பகுதிகளிலும், முன்வரிசைகளில் காணப்படும் எஞ்சிய பற்கள் குழந்தையின் 18_30 மாதங்கள் வரையிலான இடைப்பட்ட காலத்தில் முளைக்கின்றன. இது தவிரப் பற்கள் முளைத்தே பிறந்த குழந்தைகளும் உண்டு.
குழந்தையின் 6 வயது முதல் பத்து அல்லது பதினொரு வயது வரையிலான பருவத்தில் பால் பற்கள் விழுந்து நிரந்தரப் பற்கள் முளைக்கின்றன. குழந்தைகளுக்கு பால் பற்கள் முளைக்கத் தொடங்கும் சமயத்தில் கன்னங்கள் சிவந்து, வாந்தி, வயிற்றுப் போக்கு, காய்ச்சல், தாடைகளில் வலி போன்ற தொந்தரவுகள் ஏற்படலாம். பல் முளைக்கத் தொடங்கும் காலத்தில் குழந்தை எந்த பொருளை எடுத்தாலும் முதலில் அதை வாயில்தான் வைத்துக் கொள்ள முயற்சிக்கும். இவ்வேளைகளில் குழந்தைகளுக்கு மொறுமொறுப்பான ரஸ்க், பிஸ்கட் போன்றவற்றைக் கொடுக்கலாம்.
குழந்தை பிறந்த முதல் இரண்டு வருடங்களுக்கு அவற்றிற்கு கை சூப்பும் பழக்கம் இருக்கும். ஆனால் இதனால் எவ்விதப் பின்விளைவுகளும் ஏற்படுவதில்லை. இப்பழக்கத்தால் அவ்வாறு ஏதேனும் இடர்பாடுகள் வருமாயின் அவற்றை ஐந்து வயதிற்குள்ளேயே டாக்டரிடம் காண்பித்து நிவர்த்தி செய்துவிட வேண்டும். தொடர்ந்து இப்பழக்கத்தினால் முன்பற்கள் துருத்திக்கொண்டு, தாடையின் வடிவையே குலைத்துவிடக்கூடும்.
நிரந்தரப் பற்களுக்குத் தரப்படும் அதே பராமரிப்பைப் பால்பற்களுக்கும் கொடுத்து வர வேண்டும். எனவே ஜவ்வு போன்றிருக்கும் இனிப்புப் பொருள்கள், மிட்டாய், சாக்லேட்டுகளைக் குழந்தைகளுக்கு கொடுக்கக்கூடாது. குழந்தைகளுக்குப் பற்கள் முளைக்கும் தருவாயில் கால்சியமும், பாஸ்பரஸீம் தேவைப்படுவதால், பாலுடன் சமச்சீர் உணவுகள் அடங்கிய உணவுகளைக் கொடுத்து வந்தால் பற்களின் வளர்ச்சியில் எவ்வித குறைபாடும் ஏற்படாது. எனவே பால்பற்கள் முளைக்கும் தருவாயிலும், குழந்தைகளின் உணவு விஷயத்தில் அதிக கவனமுடன் இருக்க வேண்டும். புரதம் (Protein) வைட்டமின்கள், மணிச்சத்துகள் (Minerals) அடங்கிய உணவுப் பொருட்கள் பற்களின் வளர்ச்சிக்கும், பழங்கள் மற்றும் பச்சைக் காய்கறிகள் போன்ற நார்ச்சத்து அடங்கிய உணவுகள் பற்களைத் தூய்மைப்படுத்துவதற்கும் துணைபுரிகிறது.
பிரட், பிஸ்கட், பால், சீஸ், கொட்டைகள், காரட், ஆப்பிள் போன்றவைகளில் அதிக சர்க்கரை இல்லாதிருப்பதால், அவை பற்களுக்கு எவ்விதத் தீங்கையும் ஏற்படுத்துவதில்லை. மாறாக சாக்லேட், கேக், புட்டிங்குகள், போன்ற இனிப்புப் பண்டங்களில் சர்க்கரை அதிகம் இருப்பதால் அவை பால் பற்களிலேயே கூட குழிகளை ஏற்படுத்திவிடுகின்றன. உணவு இடைவெளிகளிலும், இரவு படுக்கைக்குச் செல்லும் முன்னரும், குழந்தைகளுக்கு சர்க்கரைப் பண்டங்களைக் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும். அதே போன்று பள்ளிப் பரீட்சைகளில் அதிக மதிப்பெண்கள், பெறுவதற்கு, இனிப்பு சாக்லேட்டுகளைக் காட்டி ஆசை காட்டக்கூடாது, இதனால் குழந்தைகளுக்கு இனிப்பே கொடுக்கக்கூடாது என்பதாக அர்த்தமில்லை. இனிப்பான பண்டங்கள் உட்கோண்ட பின்னர் ஒவ்வொரு முறையும் குழந்தைக்குப் பல் துலக்கும் பழக்கம் இருப்பின் குழந்தைகளுக்கு இனிப்பினால் எவ்விதக் கெடுதலும் நேருவதில்லை. பத்து முதல் பன்னிரண்டு பற்கள் முளைக்கத் தொடங்கியதுமே, குழந்தைகளுக்கு பிரஷ்ஷினால் பல் துலக்கும் முறையைக் கற்றுக் கொடுக்க வேண்டும். அதற்கு முன்னர், நாம் தான் குழந்தைகளுக்கு பற்களைத் தேய்த்து விட வேண்டும். பற்களையும், ஈறுகளையும் மேலிருந்து கீழாக லேசாக அழுத்தி தேய்க்க குழந்தைகளுக்குச் சொல்லித் தர வேண்டும். பற்களின் உட்புறமும் போதிய கவனமுடன் தேய்ப்பதற்குப் பழகித் தரவேண்டும்.
குழந்தைகள் பற்பசையின் சுவையை பெரிதும் விரும்புவதால் அவற்றைக் கொப்புளித்து வெளியே துப்பாமல், விழுங்கி விடுகின்றன. எனவே குழந்தைகளுக்கு சிறிதளவு பற்பசையையே கொடுத்துப் பழக்க வேண்டும். கொஞ்சம் கொஞ்சமாக குழந்தைகள் தாமே பல் துலக்கக் கற்றுக் கொண்டுவிடுவார்கள் என்றாலும், பத்து வயது வரை, குழந்தைகள் பல் துலக்குவதை கவனமாகக் கண்காணிக்க வேண்டும்.
பற்பசைக்கு அடுத்தபடியாக பல் துலக்கும் புருசுகள் (brushes) பற்களின் பராமரிப்பில் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. அதிகக் குச்சங்களுடைய மென்மையான நைலான் இழைகளுடைய (bristles) புருசகள் தான் குழந்தைகளுக்கு ஏற்றவை. மார்க்கெட்டில் பல விதமான பற்பசைகளும், புருசுகளும் தற்போது கிடைக்கின்றன. இவற்றில் சரியானவற்றை தேர்ந்தெடுத்துப் பயன்படுத்தினால் அவற்றினால் எவ்வித பின் விளைவுகளும் ஏற்படுவதில்லை.
சாதாரண புருசுகளைக் காட்டிலும் கடினமான புருசுகள் பெரிய விந்தை எதையும் சாதிப்பதில்லை. மேலும் கடினமான புருசுகள் பற்கூச்சத்தையே உண்டாக்குகின்றன.
பல் துலக்க உதவும் புருசுகளைப் போன்று பற்பசைகளும் பலவகைப்படுகின்றன. பற்பசைகளில் அழுக்கை நீக்கக்கூடிய மென்மையான சில வேதிகள், பல் வலியை குணப்படுத்தும் கிராம்புத் தைலம், ஆன்ட்டிபயாடிக் குணமுள்ள ஸோடியம் லாரல் சல்பேட் போன்றவைகள் சேர்க்கப் படுகின்றன. பற்பசைகளைத் தவிர பல் துலக்க உதவும் டூத் பவுடர்களும் பற்களுக்கு நல்ல பாதுகாப்பைத் தருகின்றன.
பற்பசைகளில் அடங்கியுள்ள பொருட்களைக் (Ingredients) கொண்டு, பற்பசைகளைத் தேர்ந்தெடுக்கலாம். மின்ட் சுவையுடன் கூடிய பற்பசைகளையே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யாவரும் விரும்புகின்றனர். ப்ளுரைடு அடங்கிய பற்பசைகள் பற்குழிகளுக்கு நல்லது ஆனால் இதை உபயோகப்படுத்துவதில் கவனமாக இருக்கவேண்டும். பற்களில் கறை படிவதைத் தவிர்க்கவும், உணவுத் துணுக்குகள், பாக்டீரியா போன்றவை பற்களின் ஊடே இருப்பின் அவற்றை வெளியே எடுத்து சுத்தப்படுத்தவும், புருசுக்குச்சங்களால் நீவும் (Dental floss) முறையில் சுத்தம் செய்து கொள்ளலாம்.
குழந்தைகளின் பால் பற்களில் நுண்ணுயிர்த் தொற்று அல்லது குழி தென்பட்டால் அவற்றை உடனடியாக பல் டாக்டரிடம் காண்பித்து சிகிச்சை செய்ய வேண்டும். குழந்தைகளுக்கு பால் பற்கள் சரியான பருவத்தில் விழாமல் போனால் அது, நிரந்திர பற்கள் முளைக்கும் இடத்தை அடைத்துக் கொண்டு புதிய பற்கள் முளைப்பதற்குப் போதிய இடம் கிடைக்காமல் செய்துவிடுவதுடன் பற்கள் ஏறுமாறாகத் திருகிக் கொண்டு முளைக்கவும் வழி செய்துவிடும்.
பற்களின் இடையே உணவுத் துணுக்குகள் படிந்தால் அது பற்களில் மாசுப்படலங்கள் தோன்ற ஏதுவாகிறது. இவை பல் எனாமலை அரித்துவிடக்கூடிய பாக்டீரியாக்களை உற்பத்தி செய்வதுடன் சில சமயங்களில் பற்களை முற்றிலுமாக அழித்துவிடவும் கூடும். இந்த நிலை தொடருமானால் இவை ஈறுகளில் மேலும் கடினமாகப் படிந்து டார்ட்டார் (Tartar) எனப்படும் பல் காரையைத் தோற்று விக்கின்றன.
காரைகளும் சில பாக்டீரியாக்களும் சேர்ந்து பல வேதிகளை உற்பத்தி செய்து பல் ஈறுத் திசுக்களில் அரிப்பையும், அழற்சியையும் ஏற்படுத்தி ஜிங்ஜிவைட்டிஸ் (Gingivitis) எனப்படும் ஈறு அழற்சிக் குறைபாட்டை உண்டாக்குகிறது. சில வேளைகளில் பல் எலும்புகளையும் தாக்கி, பற்களை அப்படியே ஒன்றன் பின் ஒன்றாக விழச் செய்கிறது. மருத்துவர்கள் இதை பெரியோடான்டல் நோய் (periodontal disease) என்று குறிப்பிடுவார்கள். பல சமயங்களில் பற்களில் சீழினைத் தோன்றச் செய்து தாங்கொணாத வலியையும் ஈறு வீக்கத்தையும் ஏற்படுத்தி பற்களின் வேர்கள் வரை சென்று பாதித்துவிடக்கூடும்.
எனவே, குழந்தைப் பருவம் முதற்கொண்டே பற்களை, அதிக கவனத்துடன் பராமரித்து வரவேண்டும். கிராமப்புற மற்றம் நகர்ப்புறப் பள்ளிகளில் குறிப்பிட்ட கால இடைவெளிக்கு ஒரு முறை குழந்தைகள் டாக்டரிடம் பற்களைக் காட்டி ஆலோசனை பெறத்தக்க வசதியையும் ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும். குழந்தைகளுக்கு பல் பராமரிப்பைப் பற்றிப் போதிப்பதில் பெற்றோர்கள் அதிலும் குறிப்பாக தாய்மார்கள் அதிக ஈடுபாடு காட்ட வேண்டும்.