சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு வரை பள்ளி, கல்லூரிகளில் படித்த, படித்துக் கொண்டிருந்த இளம் தலைமுறையினர் ஆண்களும் சரி, பெண்களும் சரிஞ் இரவு 8 மணி ஆகி விட்டதா? சீக்கிரம் படுத்து காலையில் எழுந்திரு, படித்தது போதும் என்று செல்லமாக, அன்பாக சத்தம் போட்டு தூங்கச் சொல்லி விடுவார்கள் பெற்றோர்கள். அது மட்டுமின்றி அக்காலத்தில் ஒரே பொழுது போக்கு வானொலிப் பெட்டியில் இரவின் மடியில் இனிமையான திரைப்பாடல்கள் கேட்டு, மெய் மறந்து இரசித்துக் கொண்டே தூங்கி விடுவோம்.
வீட்டில் பெரியவர்களும் என்ன வேலை இருந்தாலும், இரவு 10 மணிக்கு கேல் தூங்காமல் இருக்க மாட்டார்கள். அடுத்தடுத்த பத்தாண்டுகளில் மனித வாழ்க்கையில், ஒவ்வொரு குடும்பத்திலும் தொலைகாட்சி, கணினி, இணைய வசதி கொண்ட ஸ்மார்ட் போன் என்று புது நபர்களாக நுழைய நீண்ட நேர உறக்கமும், ஆழ்ந்த உறக்கமும் தொலைந்து போனது.
இப்பொழுதெல்லாம் பள்ளி, கல்லூரி செல்லும் வயதில் உள்ள இளைய தலைமுறையினர் கையில் செல்போன் இல்லாதவர்களே கிடையாது. அவர்கள் இரவில் இணைய வழி ஃபேஸ்புக், வாட்சப், ட்விட்டர் என்னும் இனிமையான ஒலி, ஒளிக் காட்சியாக திரைப்படப் பாடல்களும் திரைப்படமும் பார்க்க, இரவில் நேரமோ 10 மணி, 11 மணி என்று நேரம் போனதே தெரியாமல் நடு இரவுக்குப் பின் தான் தூங்கச் செல்கிறார்கள்.
வழக்கமாக இரவு நேர வேலைக்குச் செல்பவர்களைத் தவிர்த்து மற்ற அனைவரும் காரணமின்றி, இரவு நேரத்தில் தூங்கச் செல்வது குறைந்து கொண்டே வருகிறது. இதன் காரணமாக பலவித நோய்களின் தாக்குதலுக்கு ஆளாகித் துன்பமடைகிறார்கள். தவறான வாழ்க்கைச் சூழல் மாற்றம் காரணமாக அவர்கள் புற்று நோய், சர்க்கரை நோய், உடல் பருமன், இரத்த அழுத்தம் போன்ற பல நோய்களினால் பாதிக்கபடுகிறார்கள். திடீர் மாரடைப்பு, பக்கவாதம் போன்றவைகளும் ஏற்படக் காரணமாக உள்ளன.
தூக்கம் வராமலிருக்கக் காரணம் என்ன?
ஒரு மனிதன் உடல் ரீதியாக அல்லது மன ரீதியான அல்லது இரண்டும் கலந்த பிரச்சனைகளால் தான் தூக்கம் வர இயலாமல் இருக்கக் காரணமாக இருக்கும் என்று எளிதாக கூறிவிட முடியும். ஆனால், இதையும் தவிர்த்து நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதும் ஒரு காரணமாக உள்ளது இளைய தலைமுறையினரில் பணி புரிபவர்களில் பெரும்பாலானோர் தகவல் தொழில் நுட்பத் துறையில் தான் உள்ளனர். அல்லது அது சார்ந்த வேலை மற்றத் துறைகளில் பணிபுரிகின்றனர்.
பொதுவாக 8 மணி நேரம் தான் வேலை நேரம் என்று கூறினாலும் அவர்கள் அதிக நேரம் பணி புரிகின்றனர். அது போல கடை, தனியார் கம்பெனி மற்றும் தொழிற்சாலைகளில் வேலை பார்ப்பவர்கலும் தினாரி 10 மணி நேரத்திற்கு குறையாமல் மற்றும் ஒரு சில மணி நேரங்கள் ஓவர் டைமாகவும் பணிபுரிகின்றனர்.
விற்பனை இலக்கை எட்ட வேண்டும். உற்பத்தியை இன்னும் அதிகமாக உயர்த்த வேண்டும் என்று வேலை பார்க்கும் இடங்களில் நிர்வாகம் அவர்களை நெருக்கும் பொழுது வேலைப் பளு அதிகரிக்கின்றன. இதன் காரணமாகவும், இரவு பேருந்து பிடித்து வீடு திரும்புவதிலும் காலதாமதம் ஆக சோர்வுடன் வீட்டில் நுழைகின்றனர்.
வீட்டிற்குள் நுழைந்தவுடன் நாம் அப்படியே நாற்காலியில் அமர்ந்தவர்கள் தொலைக்காட்சித் தொடர் அல்லது ஸ்மார்ட் போனை தான் கையில் எடுக்கிறோம். இரவுச் சாப்பாடு அதன் பின்பு தான். டிஜிட்டல் சாதனங்கள் அதிக அளவு பொழுது போக்கு அம்சங்களை வைத்திருக்க தனது டென்ஷன், கவலை, அசதியை மறந்து அதிக நேரம் அவற்றில் மூழ்கி விடுகின்றனர்.
சமூக வலைதளங்கள் இக்காலத்தில் பெரியவர்களையும் சரி, டீன்-ஏஜ் வயதினரையும் சரி ஒவ்வொருவரையும் ஒரு மயக்கத்தில் போதையில் வைத்திருக்கின்றன. 20 ஆண்டுகளுக்கு முன்னர், தாத்தா பாட்டி காலங்களில் இந்த வசதிகள் கிடையாது.
இதனால் இரவு 8 மணி ஆயிற்றா? சாப்பாட்டை முடித்து விட்டு திண்ணை அல்லது வராண்டாவில் உட்கார்ந்து/சாய்ந்து கொண்டே ஓரிரு மணி நேரம் பேசி விட்டு அப்படியே தூங்கியும் விடுவர். ஒரு நாள் செல்போன் கையில் இல்லையென்றாலும் இக்காலத்துப் பிள்ளைகள் குடிகாரன் பரபரப்பானது போல டென்ஷனாகி பித்துப் பிடித்து விடுகிறார்கள்.
இரவில் சரியான தூக்கம் இல்லையெனில் என்ன நேரிடும்?
நம்மைச் சுற்றியுள்ள செடி, கொடி, விலங்குகளை சற்றே உற்று நோக்கிப் பாருங்கள். பகல் பொழுது வெளிச்சத்தில் மலரும், சுறுசுறுப்பாக இயங்கும். மாலை 6 மணிக்கு மேல், இருட்டான பின்பு ஓய்வெடுக்க ஆரம்பித்து விடும். இயற்கையோடு இணைந்த வாழ்க்கை வாழ்வது தான் உடலும், உள்ளமும் ஆரோக்கியம் பெறும்.
மனிதர்கள் பகல் நேரம் முழுவதும் தங்கள் அன்றாட வேலைகளைச் செய்வதற்கும், இரவானால் நன்றாக ஓய்வெடுப்பதற்கும் என்று கடவுளால் படைக்கப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் ஓய்வை அளிக்கும் மெலோட்டனின் போன்ற ஹார்மோன்கள் நமது உடலில் சுரக்கும். மேலும், இரவு நேரம் நாம் எடுத்துக் கொள்ளும் ஓய்வும், தூக்கமும் வளர்சிதை மாற்றத்தை உடலில் சீராக இயங்க வைக்கும்.
உடல் வளர்ச்சிக்குத் தேவையான வளர்ச்சி ஹார்மோன்கள், ஆண்கள், பெண்களுக்கான ஈஸ்ட்ரோஜன், டெஸ்டோஸ்டிரான் போன்ற செக்ஸ் ஹார்மோன்களை சமநிலையில் சீராக சுரக்க உதவும். முறையற்ற இரவு உறக்கம் கொள்ளும் பொழுது மேற்கூறிய ஹார்மோன்கள் சீராக உற்பத்தி செய்ய இயலாது போகும்.
இது பல நோய்கள் உருவாவதற்கு வாய்ப்புகளைப் பல நேரங்களில் காண்பிக்கும். செக்ஸில் ஆர்வம் குறைவது, கருத்தரித்தலில் பல சிக்கல்கள் தோன்றி நவீன இளம்தலைமுறையினர் ஆண், பெண் இருபாலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இக்குறைபாடுகள் இப்போதைய காலத்தில் அதிகம் காணப்படுகின்றன.
ஒழுங்கற்ற தூக்கத்தின் காரணமாக பயம், பதட்டம், சோர்வு, உடல் களைப்பு ஏற்படுகிறது. ஒழுங்கற்றத் தூக்கமானது, நீண்ட நேரம் தூங்காமல் காலதாமதமாக தூங்கச் செய்வது, போதுமான அளவில் இரவு நேரம் தூங்காமல் இருத்தல், ஆழந்த திருப்தியான,
நிம்மதியான தூக்கம் இல்லாமல் கோழித் தூக்கம் கொள்வது போன்ற பட்டியல்களில் அடங்கும். இதன் காரணமாக மனிதர்கள் உடல் பருமன், இரத்த அழுத்தம், சர்க்கரை நோய், பக்கவாதம் ஏற்பட சந்தர்ப்பம் உண்டு என்பதை முன்னரே தெரிவித்திருந்தோம்.
தூக்கம் தடைபடுவதற்கு எலெக்ட்ரானிக் சாதனங்களும் முக்கியப் பங்காற்றுகின்றன. அளவுக்கு மீறிய வெளிச்சம் இரவை பகல் போல ஒளிக் கதிரகளை உமிழ்வதால் தூக்கம் வருவது காலதாமதமாகிறது. இரவு நேரங்களில் தொலைக்காட்சி, கணினி, ஸ்மார்ட் போன் போன்ற சாதனங்களைப் பார்க்கும் பொழுது, அறையில் விளக்கு வெளிச்சம் இருத்தல் அவசியம் இல்லையெனில் இருட்டில் மேற்கூறிய எலெக்ட்ரானிக் சாதனங்களில் உமிழும் ஒளிக் கதிர்கள் தொடுதிரையைப் பார்க்கும் கண்களை அதிக வெளிச்சத்தினால் பாதிக்கப்பட்டு, கண்களையும், மூளையையும் பாதிக்கிறது.
தூக்கம் வர என்ன செய்ய வேண்டும்?
நீண்ட நேரம் இரவில் படிப்பது, தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பார்ப்பது, இணையத் தொடர்பினால் ஃபேஸ்புக், வாட்சப், கணினியில் அதிக நேரம் மூழ்கி இருப்பதை தவிர்க்க வேண்டும். இரவு உணவினை 8 மணிக்குள் முடித்து 9 மணிக்கெல்லாம் உறங்கச் சென்று விட வேண்டும். விரைவில் உறங்கச் சென்று அதிகாலை எழுந்து விடும் பழக்கம் அறிவியல் பூர்வமாக சுறுசுறுப்பைத் தரும் ஒரு செயலாகும்.
இதன் மூலம் உங்கள் உடலும், மனதும் கூடுதல் நேரம் ஓய்வெடுக்கச் செய்ய இயலும். இரவு வேளைகலில் உங்கள் வேலைகளை, அடுத்த நாள் செய்யப்பட வேண்டிய வேலைகளைப் பற்றி எண்ணுவதோ, செய்வதோ கூடாது.
உங்கள் உடலில் உள்ள வாதம் மற்றும் மனநிலையைச் சமன்படுத்த இனிப்பு, புளிப்பு, உப்பு உணவில் சேர்த்துக் கொள்ளுதல் வேண்டும். சூப்புகள், பழச்சாறுகள், இனிப்புகள் சேர்க்க வேண்டும். உணவில் நெய் சேர்த்துக் கொள்ளுதல் வேண்டும். தினசரி உடற்பயிற்சியாக நடை பயிற்சி, மெது ஓட்டம் போன்ற்வைகளை ஒரு மணி நேரமாவது செய்ய வேண்டும்.
அஸ்வகந்தா என்று கூறப்படும் மூலிகையானது, உடலில் களைப்படைந்த் நரம்பு மற்றும் தசை மண்டலங்களின் இயக்கத்தை மீண்டும் சுறுசுறுப்பாக்கும் ஆற்றல் கொண்டது. அஸ்வகந்தா உடலில் அதிக வாதத்தைச் சமன்படுத்துகிறது.
விளையாட்டு வீரர்கள், சுறுசுறுப்பாக இயங்கும் மனிதர்கள், விளையாட்டு மற்றும் படிப்பில் ஆர்வம் அதிகமாக உள்ள மனிதர்கள் அஸ்வகந்தாவை அதிகம் பயன்படுத்துகிறார்கள். மேலும், யோகாசனம் செய்வதும் நல்ல தூக்கத்தை வரவழைக்கும். காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் நீர் அருந்துங்கள்.
நீருடன் எலுமிச்சைச் சாறும் ஒரு ஸ்பூன் தேனும் கலந்து கொண்ட சாறை அருந்துங்கள். உங்கள் குடல், மலக்குடல் இயக்கத்தை சரி செய்து தேவையற்ற கழிவுகளை எளிதாக வெளியேற்ற உதவும். இரவு படுக்கைக்குச் செல்லும் முன்னர், இரண்டு திரிபலா மாத்திரைகளை வெந்நீரில் உட்கொள்ளவும். இதனால் மறுநாள் காலைக் கடன் செல்ல எளிதாக இருக்கும்.