நோய் தீர்க்கும் தேயிலையும் தெரியாத விஷயங்களும்

Spread the love

தண்ணீருக்கு அடுத்தபடி உலகிலேயே மக்கள் அதிகம் அருந்தும் பானம் ‘டீ’. தேயிலை, பெயருக்கு ஏற்றபடி கொழுந்து, இலைகளின் பானம். செடியின் மொட்டுக்கள், இளசான தண்டுகளும் உபயோகிக்கப்படுகின்றன.

தேயிலை செடி இந்தியாவிலும், தென்னிந்தியாவிலும் 7000 அடிக்கு மேலான மலைப் பிரதேசங்களில் உற்பத்தி செய்யப்படுகிறது. தேயிலையில் குறைந்தபட்சம் ஆறு வகைகள் உள்ளன. அவற்றில் நான்கு மார்க்கெட்டில் கிடைப்பவை. அவை வெள்ளை, பச்சை, ஊலங் மற்றும் கறுப்பு தேயிலைகள். எல்லா விதங்களும் ஒரே இனத்தைச் சேர்ந்த செடிகளிலிருந்து தான் தயாரிக்கப்படுகின்றன. வெள்ளை ரக தேயிலை பிரத்யேகமாக பயிரிடப்படுகிறது.

“மூலிகை டீ’ தேயிலை அல்ல. வேறு மூலிகைகள், பூக்கள், பழங்களிலிருந்து தயாரிக்கப்படுகிறது. ‘சிகப்பு டீ’ என்றால் தென் ஆப்ரிக்காவில் தேயிலை அல்லாத ‘ரூயிபாஸ்’ செடியிலிருந்து தயாரிக்கப்படும் கஷாயம். ஆனால் இதே ‘சிகப்பு டீ’ என்ற வார்த்தை சீன, ஜப்பானிய இதர கிழக்காசிய மொழியில் கறுப்பு தேயிலையிலிருந்து தயாரிக்கப்படும் டிகாக்ஷனைக் குறிக்கும்.

தேயிலை அதன் பெயருக்கேற்ப, சிறுமரம் (செடி) ஒன்றின் கொழுந்து இலைகளிலிருந்து தயாரிக்கப்படுகிறது. உஷ்ண பிரதேசங்கள், உஷ்ணம் குறைந்த பிரதேசங்களில் பயிரிடப்படுகிறது. நல்ல மழை தேவை. வருடத்தில் குறைந்தபட்சம் 127 செ.மீ. (50 அங்குலம்) மழை வேண்டும். அமிலத்தன்மையுள்ள மண்களில் தேயிலை நன்கு வளரும். கடல் மட்டத்திலிருந்து 1500 மீட்டர் உயரத்தில் பயிரிடப்படும் தேயிலை மெதுவாக வளர்ந்து தரத்திலும், சுவையிலும் சிறப்பாக இருக்கும். ‘டார்ஜிலிங்’ தேயிலை உயரத்தில் பயிரிடப்படுவதால் தான் தரத்தில் மிக மேன்மையாக இருப்பதின் காரணம்.

செடியின் ‘தலை’ நடுவில் ‘கத்தரித்து’ வந்தால் பக்கவாட்டில் கொழுந்து இலைகள் நன்றாக துளிர்விடும். ஒவ்வொரு செடியும் (புதர் செடி எனலாம்) வருடத்தில் 0.75 கிலோ (2 பவுண்ட்) எடை இலைகளை தரும். செடிகள் விதைகள் மூலம் நடப்பட்டு பண்ணைகளில் (நாற்றங்கால்) வளர்த்து பயிரிடப்படலாம். இல்லை செடித்துண்டுகளை நட்டும் பயிரிடலாம். பயிரிட்டதிலிருந்து 4 (அ) 6 வருடத்தில் “கைகளால்” பறிக்கப்படும் பழக்கம் இன்றும் தொடருகிறது. பறிப்பவர் ஒரு மொட்டையும், இரு தளிர்களையும், இளம் கிளைகளிலிருந்து பறிப்பார். மறுபடியும் புதுக் கொழுந்து இலைகள் 7 (அ) 10 நாட்களில் செடி வளரும் பருவத்தில் துளிர்க்கும். தேயிலை செடிகள் பறிப்பதற்கு சுலபமாக, இருப்பு வரை வளர்க்கப்படுகின்றன. அப்படியே விட்டு விட்டால் தேயிலை மரமாகிவிடும்!

பரவலாக பயிரிடப்படும் ரகங்கள் இரண்டு. சீமை தேயிலை, அஸ்ஸாம் செடி. இலைகளின் ‘சைஸை’ வைத்துத்தான் தேயிலையின் ரகங்கள் சொல்லப்படுகின்றன. சீனத்தேயிலை இலைகள் சிறியவை. அஸ்ஸாமிய தேயிலை இலைகள் அளவில் பெரியவை.

https://www.youtube.com/watch?v=dyDKavetT84


Spread the love
error: Content is protected !!