மசாலா பப்பட்
தேவையான பொருட்கள்
பப்பட் – 4
வெங்காயம் – 1
குடைமிளகாய் – பாதி
தக்காளி – 1
கறுப்பு உப்பு – சிறிது
சாட் மசாலா – சிறிது
கொத்தமல்லி – சிறிது
உப்பு – தேவையான அளவு
செய்முறை
பப்பட்டை எண்ணெயில் பொரித்தோ அல்லது மைக்ரோவேவில் பொரித்தோ எடுத்துக் கொள்ளவும். வெங்காயம், குடைமிளகாய், தக்காளி, கொத்தமல்லி நான்கையும் பொடிப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். அதோடு சிறிது உப்பு சேர்த்து பிசறி, பொரித்து வைத்துள்ள பப்பட் மீது பரவலாக வைக்கவும். மேலே சாட் மசாலா மற்றும், கறுப்பு உப்பு தூவி பரிமாறவும்.
சோயா சங்க்ஸ் வடை
தேவையான பொருட்கள்
சோயா சங்க்ஸ் – 20
கடலைப் பருப்பு – 1 கப்
மிளகு – 1 டீஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
சோம்பு – 1 டீஸ்பூன்
இஞ்சி – 1/2 இன்ச்
பச்சை மிளகாய் – 2
புதினா – 1/4 கப்
வெங்காயம் – 1
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – பொரிக்க
செய்முறை
சோயா சங்க்ஸை கொதிக்கும் வெந்நீரில் போட்டு 20 நிமிடம் மூடி வைக்கவும். கடலைப் பருப்பை அரைமணி நேரம் ஊற வைக்கவும். சோயா சங்க்ஸை பிழிந்து எடுத்து கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும். ஒரு மிக்ஸியில் கடலைப் பருப்பு, மிளகு, சீரகம், சோம்பு, இஞ்சி, பச்சை மிளகாய், உப்பு போட்டு கரகரப்பாக அரைத்து கடைசியாக சோயா அரைத்ததையும் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும். வெங்காயம், புதினாவை பொடியாக நறுக்கி இந்த மாவுடன் சேர்த்து பிசைந்து கொள்ளவும். பின்னர் இதனை வடைகளாக தட்டி எண்ணெயில் பொரித்து எடுத்து பரிமாறவும்.
ஆலூ ஃப்ரெட் பஜ்ஜி
தேவையான பொருட்கள்
ஃப்ரெட் ஸ்லைஸ் – 6
கடலை மாவு – 1 கப்
உருளைக்கிழங்கு – 2
வெங்காயம் – 1
பச்சை மிளகாய் – 2
மிளகாய் பொடி – 2 டீஸ்பூன்
சீரகம் – 1/2 டீஸ்பூன்
மஞ்சள் பொடி – சிறிது
எலுமிச்சம் ஜுஸ் – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – பொரிக்க
செய்முறை
உருளைக் கிழங்கை வேக வைத்து தோலை உரித்து விட்டு மசித்துக் கொள்ளுங்கள். வெங்காயம், பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்குங்கள். வாணலியில் ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெயைக் காய வைத்து, சீரகம் போட்டுத் தாளித்து வெங்காயம், மிளகாய் சேர்த்து வதக்கி, மிளகாய் பொடியில் பாதி, மஞ்சள் தூள், உப்பு, எலுமிச்சம் ஜுஸ், உதிர்த்து வைத்துள்ள உருளைக்கிழங்கு ஆகியவற்றைச் சேர்த்து கிளறி இறக்குங்கள். கடலை மாவில், மிளகாய்ப் பொடி, உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்துக் கரைத்துக் கொள்ளுங்கள். ஃப்ரெட் ஸ்லைஸ் ஓரங்களை நீக்கி, முக்கோண வடிவில் வெட்டி அதன் மீது உருளைக்கிழங்கு மசாலாவை பரவலாக வைத்து, மசாலா உள்ள பகுதியை மட்டும் கடலை மாவால் மூடவும். வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய வைத்து, மசாலா ஃப்ரெட் பீஸைப் பொரித்தெடுங்கள். தக்காளி சாஸுடன் பரிமாறுங்கள்.
வெந்தயக் கீரை புலவ்
தேவையான பொருட்கள்
பாஸ்மதி அரிசி – 2 கப்
வெண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
தாளிக்க சோம்பு – 1 டீஸ்பூன்
சீரகம் – 1/4 டீஸ்பூன்
பிரிஞ்சி இலை – 1
வெங்காயம் – 1/2 கப்
மஞ்சள் பொடி – 1/2 டீஸ்பூன்
தனியா பொடி – 2 டீஸ்பூன்
மிளகாய் பொடி – 2 டீஸ்பூன்
கரம் மசாலா – 1 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன்
தக்காளி – 1 கப்
வெந்தயக்கீரை – 2 கப்
கொத்தமல்லி – 1/2 கப்
தண்ணீர் ரைஸ் குக்கர் 1 : 3 குக்கர் 1 : 2
செய்முறை
ஒரு குக்கரில் எண்ணெய் சூடாக்கி அதில் சோம்பு, சீரகம், பிரிஞ்சி இலை போட்டு தாளித்து வெங்காயம் போட்டு வதக்கவும். பின் மஞ்சள் பொடி, தனியா பொடி, மிளகாய் பொடி, கரம் மசாலா போட்டு வதக்கி, இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு வதக்கவும். பின் தக்காளி போட்டு வதக்கவும். பின் வெந்தயக் கீரை, கொத்தமல்லி போட்டு லேசாக வதக்கவும். ஒரு வாணலியில் வெண்ணெய் போட்டு உருக்கி அதில் சோம்பு, பிரிஞ்சி இலை போட்டு தாளித்து அரிசியைப் போட்டு வதக்கி குக்கரில் உள்ள மசாலாவுடன் கொட்டி தண்ணீர் ஊற்றி உப்பு போட்டு வேக விட வேண்டும். சுவையான வெந்தயக்கீரை புலவ் தயார். இறக்கி வெங்காய தயிர் பச்சடியுடன் பரிமாறவும்.
சோயா பிரியாணி
தேவையான பொருட்கள்
சோயா பீன்ஸ் – 1 கப்
பச்சரிசி – 2 கப்
வெங்காயம் – 1
தக்காளி – 1
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன்
புதினா – 1/2 கப்
கொத்தமல்லி – 1/2 கப்
சிவப்பு குடமிளகாய் – 1
பச்சை மிளகாய் – 4
தயிர் – 1/4 கப்
தண்ணீர் – 3 கப்
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு
முந்திரிப்பருப்பு – 10
நெய் – 2 டேபிள் ஸ்பூன்
தாளிக்க
சோம்பு – 1 டீஸ்பூன்
பட்டை – 1
கிராம்பு – 2
செய்முறை
வெங்காயம், பச்சை மிளகாயை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். குடமிளகாயை மீடியம் சைஸ் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
குக்கரில் எண்ணெய் அல்லது நெய் காய வைத்து அதில் சோம்பு, பட்டை, கிராம்பு போட்டு தாளித்து, வெங்காயம் போட்டு வதக்கி, பின் இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு வதக்கி, தக்காளியைப் போடவும். தக்காளி வதங்கியதும் சோயா பீன்ஸ், புதினா, கொத்தமல்லி, சிவப்பு குடமிளகாய், பச்சை மிளகாய் என்று ஒன்றன் பின் ஒன்றாகப் போட்டு வதக்கவும். பின் தயிர் ஊற்றி ஒரு வதக்கு வதக்கி பச்சரிசியைப் போடவும். பின் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி உப்பு போட்டு வேக விடவும். வெந்தவுடன் திறந்து நெய்யில் வறுத்த முந்திரி சேர்த்து தயிர் பச்சடியுடன் பரிமாறவும்.
காலிஃப்ளவர் மஞ்சுரியன்
தேவையான பொருட்கள்
காலிஃப்ளவர் – 1
மைதா – 3 டேபிள் ஸ்பூன்
கார்ன் ஃப்ளார் – 1 டேபிள் ஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன்
மிளகாய் பொடி – 1 டீஸ்பூன்
சோயா சாஸ் – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – பொரிக்க
வெங்காயம் – 1
கொத்தமல்லி – சிறிது
வெள்ளை மிளகுத்தூள் – 1/2 டீஸ்பூன்
செய்முறை
காலிஃப்ளவரை சிறு சிறு பூக்களாக நறுக்கி, ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து வெந்நீரில் ஐந்து நிமிடம் போடவும். பிறகு நீரை வடித்து விட்டு மைதா, கார்ன்ஃப்ளார், இஞ்சி பூண்டு பேஸ்ட், மிளகாய் பொடி, சோயா சாஸ், உப்பு சேர்த்துக் கலந்து பிசறி அரை மணி நேரம் ஊற விடவும். வாணலியில் எண்ணெயை ஊற்றிக் காய வைத்து, அதில் காலிஃப்ளவர் போட்டுப் பொரித்து எடுக்கவும். மேலே பொடியாக நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி தூவி, சிறிது வெள்ளை மிளகுத்தூள் தூவி சாஸுடன் பரிமாறவும்.