சென்ற நூற்றாண்டு வரை கிராமம் என்றாலும் சரி… நகரம் என்றாலும் சரி… காலை எழுந்தவுடன் பெட் காபி என்பது போல வெற்றிலை, பாக்கு கலந்த தாம்பூலம் வாயில் போட்டு மெல்வது என்பது பெரும்பாலானவர்கள் அடிமையாகி இருந்தனர்.
கி.பி.17 ஆம் நூற்றாண்டிலேயே, தாம்பூலம் எட்டு போகங்களுள் ஒன்று என்று கருதப்பட்டது. தாம்பூலத்தைச் சுவைக்காத வாய் வாயே அல்ல என்று கன்னட நாட்டின் சர்வக்ஞன் கூறினான். 16&17 ம் நூற்றாண்டிலேயே புரந்தரதாசர், சிக்கணி பாக்கு, தாளம், ஏலம், ஜாதிக்காய், லவங்கம், முத்தால் அமைந்த சுண்ணாம்புடன் கூடிய தாம்பூலத்தை கமலவதனனுக்கு அம்புஜாஷி கையால் அளித்து வந்தார். அதே நூற்றாண்டிலேயே, கற்பூர தாம்பூலம் கொடுப்பது விஜய நகர அரசில் வழக்கமாக இருந்தது.
அக்பர் ஆட்சியிலே தாம்பூலத்தைக் குறித்து, “பசியை நீக்குகிறது; வயிறு நிறைந்தவர்களுக்கு பசி தருகிறது” என்று அபுல்பஸல் கூறினார். 13 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட சமஸ்கிருத ஸில்களில் தாம்பூலத்தைப் பற்றிய குறிப்புகள் கிடைக்கின்றன.
தாம்பூலத்தின் வரலாற்றை 1500 ஆண்டுகளுக்கு முன்பு வரை கொண்டு போக இயலும் என்பதை சிலப்பதிகாரம் மூலமும் கூறலாம். தாம்பூலம் காமத்தைத் தரும். உடல் எழிலை அதிகப்படுத்தும், உடம்புக்கு வலிமை தரும், நட்பை உண்டாக்கி வளர்க்கும், களைப்பை நீக்கும். இன்னும் இதர பயன்களைத் தரும் என்று 6-வது நூற்றாண்டில் எழுதப்பட்ட பிருகத் ஸம்ஹிதையில் தாம்பூலத்தைப் பற்றிய மூன்று சுலோகங்கள் காணப்படுகின்றன.
வெற்றிலை, அடக்காய்(பாக்கு), தக்கோலம் லவங்கம், ஜாதிக்காய்களைக் கொண்ட தாம்பூலம் சுவைப்பதால் இன்ப நுகர்ச்சி அதிகமாகும் என்று இன்னொரு சுலோகம் கூறுகிறது. தாம்பூலத்தில் நீண்ட காலமாக சேர்க்கப்படும் பொருள்கள் மூன்று தான். வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு. வெற்றிலைக் கோடி, பாக்குமரம் இந்தியாவிற்கு சொந்தமான தாவர வகைகள் இல்லை. எங்கிருந்தோ வந்து, நமது மண்ணில் வேர் ஊற்றி வர்த்தகப் பயிராக மாறி விட்டது.
சமஸ்கிருத நூலான பிருஹத் ஸ்ம்ஹிதையில் உள்ள ஒரு செய்யுள் தாம்பூலத்திற்கு 13 குணங்கள் உண்டு என்று கூறுகிறது. அவை,
1. காரம்
2. கசப்பு
3. இனிப்பு
4. உப்பு
5. துவர்ப்பு
6. உஷ்ணம்
7. வாதம் நீக்குதல்
8. சிலேஷ்மம் நீக்குதல்
9. பூச்சி கொல்லுதல்
1௦. தூர்க்கந்தம் நீக்குதல்
11. தூய்மை அளித்தல்
12. அழகை அளித்தல்
13. காமத்தை உண்டாக்குதல்
பாக்கில் இருக்கும் அரிகொலின் (aricoline) என்ற ஆல்கலாயிடு சத்து, நரம்புகளை லேசாக முறுக்கேற்றுகிறது. வெற்றிலையில் அடங்கியுள்ள நறுமணமும் (essential oil) சுமார் இதேத் தன்மையைக் கொண்டுள்ளது. சுண்ணாம்பினால், இவ்விரண்டு பொருட்களும் தம்மிடமுள்ள சத்துக்களை வெளிப்படுத்துகின்றன. உடல் பொதுவான எழுச்சி நிலையை அடைகிறது. இதனால் மனமும் கூர்மையாகச் செயல்படுகிறது.