பெண்களின் மனஅழுத்தம் சமாளிக்க சில யோசனைகள்

Spread the love

அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு என்று இருந்த சமூதாயம் இன்று வேகமாக மாறிக் கொண்டிருக்கிறது. பெண்கள் தங்களின் அறிவுத் திறமையினாலும், உழைப்பாலும், தன்னம்பிக்கையாலும் பல துறைகளில் சாதித்து வருகின்றனர். நேரம், காலம் பார்க்காமல் உழைக்கும் அவர்களுக்கு மனஅழுத்தம் வருவதும் இயல்பே.

பெண்கள் அதிகமாக வேலை செய்வதால் தங்களின் உடல் நலனையும், மன நலனையும் கவனிக்கத் தவறி விடுகின்றனர். என்னதான் வீட்டு நிர்வாகம், ஆபிஸ் நிர்வாகம் இவற்றில் எல்லாம் பெண்கள் கோலோச்சினாலும் அவர்களும் மனிதப் பிறவிதானே.

எனவே, மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் பெண்களுக்கும், தான் மன அழுத்தத்திற்கு உள்ளாகி இருப்போமா என்று சந்தேகத்திலிருக்கும் பெண்களுக்கு சமாளிக்க சில யேனசனைகளைப் பார்ப்போம். இவ்வழிகளைப் பின்பற்றுவதன் மூலம் பெண்கள் தங்களின் மன அழுத்தத்தை குறைக்கலாம். புத்துணர்ச்சி பெற்று, மகிழ்ச்சியாக வாழலாம்.

நேர்மறை சிந்தனை அவசியம்

பாசிட்டிவ் எனர்ஜி எனப்படும் நேர்மறை சிந்தனைகள் ஒரு மனுஷியை எந்த ஒரு தடை வந்தாலும் வெற்றி பெற வைக்கும். நேர்மறையை உருவாக்கும் சில பயிற்சிகள் இருக்கின்றன. யாருமில்லா உங்களின் வீட்டில் கதவைப் பூட்டி விட்டு, அமைதியாக ஒரு விரிப்பை விரித்து உட்காருங்கள். கண்களை மூடி, இழுத்து மூச்சு விட்டு, உங்கள் உடலை உங்களின் தலை உச்சியிலிருந்து உள்ளங்கால் வரை ரிலாக்ஸ் செய்யுங்கள். உங்களின் ஆழ்மனதிற்குள் ‘நான் ஆரோக்கியமாக இருக்கிறேன். நான் எதையும் செய்து முடிக்கக் கூடியவள். என்னால் எதுவும் முடியும்.’ என்று நினைத்து, அந்த எண்ணத்தை உடல் முழுக்க கடத்துவதாக பாவனை செய்யுங்கள். தினமும் இவ்வாறு செய்தால், உங்களுக்குள் ஒரு மாற்றம் உருவாவதை கண்டிப்பாக உணர்வீர்கள்.

சவால் நிறைந்த உலகில் அதிகம் சாதிக்க, வரும் பிரச்சனைகள் ஒரு வாய்ப்பாகும். இந்த நேர்மறை சக்தி உங்களுக்கு பல அணுகுமுறைகளை கொடுத்து உங்கள் வாழ்வை ஒளிரச் செய்யும்.

நேர விரையத்தைக் தவிர்த்தல்

வீட்டிலும் வேலை செய்து குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி விட்டு, கணவனையும் வேலைக்கு அனுப்பி விட்டு தாங்களும் வேலைக்குச் செல்லும் பெண்களின் நிலை பரிதாபமாக இருக்கும். ஒரே ஓட்டமாக வாழ்க்கையைக் கொண்டிருக்கும் அத்தகையவர்களுக்கு, எந்த ஒரு விஷயத்தையும் திட்டமிட்டுச் செய்தால், நேரம் விரையத்தையும், ஆரோக்கியமற்ற சூழ்நிலைகளையும் அடியோடு மாற்றலாம். இதனால், மன அழுத்தம் இருக்காது.

மகிழ்ச்சியாகப் பழகுதல்

எவருடனும் பேசும் பொழுது, சிறு புன்னகையுடன் அவர்களின் கண்களைப் பார்த்து, நேரிடையாக சொல்ல வந்த செய்தியை சுருங்கக் கூறுதல் வேண்டும். பிறரைக் குறை கூறவும் கூடாது. நாம் வாழும் ஒவ்வொரு நொடியையும் சந்தோஷமாக அனுபவிக்க வேண்டும், நம்முடன் இருப்போரை சந்தோஷப்படுத்த வேண்டும். எனவே, உங்களுக்கு, உங்கள் சூழலுடன் ஒரு புரிந்துணர்வு ஏற்படும். பின் மன அழுத்தமாவது… நோ சான்ஸ்.

என்னுடைய இலக்கு என்ன?’

உங்களுடைய இலக்கு என்னவென்பதை சரியாக வரையறுத்துக் கொண்டு, அதை நிறைவேற்றப் போதுமான கால அவகாசம் என்னவென்பதை தீர்மானியுங்கள். தினமும், இலக்கை அடைய உங்களின் பயணம் என்ன? என்று ஒவ்வொரு நாளும் கேட்டுக் கொள்ளுங்கள். செயலிலும் இறங்குங்கள்.

ஒரு இலக்கை அடைந்து வென்றவுடன் அடுத்தடுத்த இலக்குகளுக்கு உங்களை தயார் படுத்திக் கொள்ளுங்கள். வெற்றி என்பது ஒரு முறை மட்டும் அடைவதல்ல. வெற்றி ஒரு தொடச்சியான பயணமே.

பிறருக்கு மனிதம் காண்பியுங்கள்

நாம் ஒருவர் மட்டும் வாழ்ந்தால் அது குடும்பம் அல்ல. தனி மரம் என்றுமே தோப்பாகாது என்று உங்களுக்கே தெரியும். எனவே, நம்மைச் சுற்றி இருப்பவர்களின் வாழ்க்கையில் நமது பங்கும், நமது வாழ்க்கையில் நம்மைச் சுற்றி இருப்பவர்களின் பங்கும் இருப்பதை உணர்ந்து கொள்ளுங்கள். அவர்களின் மகிழ்ச்சியே உங்களின் மகிழ்ச்சி என்று அவர்களை உணர வையுங்கள். அந்த புரிதல் உங்களை மன அழுத்தத்திலிருந்து விடுவித்து விடும்.

வெற்றியை கைகொள்ள நாட்குறிப்பு அவசியம்.

ஒவ்வொரு நாளும் உங்களின் முன்னேற்றத்திற்கு என்னென்ன செய்தீர்கள் என்று ஒரு நாட்குறிப்பேட்டில் (டைரியில்) குறித்து வைத்துக் கொள்ளுங்கள். குறிப்பேட்டைப் பார்த்து ஒவ்வொரு காலைப் பொழுதிலும் நீங்கள் நேற்று வரை, என்ன தவறை செய்தீர்கள்… என்னென்ன சரியான விஷயங்களைச் செய்தீர்கள் என்று தெரிந்து, அன்றைய நாள் முதல் தவறுகளை திருத்தி வாழவும், சரியான விஷயங்களை தொடர்ச்சியாக செய்யவும் உறுதி கூறுங்கள்.

மனித மனமும், உடலும் பழக்கங்களுக்கு அடிமையாகக் கூடியது. இவ்வாறு சில நாட்கள் செய்தால் உங்கள் மனமும், உடலும் தற்செயலாக சரியான திசை நோக்கிப் பயணிக்கும். மன அழுத்தமே இல்லாத வாழ்வு வசப்படும்.

ஆயுர்வேதம்.காம்


Spread the love