பயங்கரவாதத்திற்கு அடுத்ததாக, தற்போது உலகை உலுக்கிக் கொண்டிருக்கும் நோய் Swine Flu எனப்படும் பன்றிக்காய்ச்சல். ஒவ்வொரு வருடமும் உலகெங்கும் “இன்ஃப்ளூயன்சா’ (Influenza – Flu) ஒரு பரவலான தாக்குதலை நடத்துகிறது. பயங்கர ஒட்டு நோயான ‘ஃப்ளூ’ 20 ஆம் நூற்றாண்டிலேயே 5 தடவை மனித குலத்தை தாக்கி ஏராளமான உயிரிழப்பை உண்டாக்கி இருக்கிறது. 1918-19 ஏற்பட்ட ஃப்ளூ இரண்டு கோடி மக்களை பலி கொண்டது. வருடா வருடம் ஃப்ளூ தோன்றும் இடத்தின் பெயர் அல்லது ஃப்ளூ வைரஸ் தோன்றிய பிராணியின் பெயர்கள் ஃப்ளூவிற்கு வைக்கப்படும். உதாரணம் ஹாங்காங் ப்ளூ, பன்றி ப்ளூ.
பன்றி ஃப்ளூ, (ஸ்வைன் ஃப்ளூ) இன்ஃப்ளூயன்சா குடும்பத்தை சார்ந்த வைரஸ்களில் ஒன்று. பன்றியை இருப்பிடமாக கொண்டது. இந்த வைரஸ் ‘ஸ்வைன் இன்ஃபுளூயன்ஸா வைரஸ்’ எனப்படுகிறது. H1 N1 என்ற இந்த ஃப்ளூ மனிதனுக்கு மனிதன் தொற்றிக் கொண்டு, விரைவில் பரவும். பன்றிகளோடு வேலை செய்பவர்களுக்கு இந்த ஃப்ளூ ஏற்படும் சாத்தியக் கூறுகள் அதிகம்.
மனிதனாலும் பன்றிக்கு வரலாம்! 1918ல் ஏற்பட்ட ஃப்ளூவில் இது நடந்திருக்கிறது. 1976, 1988, 1998, 2007ல் ஃப்ளூ படையெடுப்பு ஏற்பட்டிருக்கிறது.
இன்ப்ளூயன்ஸா என்றால் என்ன?
ஃப்ளூ, நுரையீரலை பாதிக்கும். அங்கு தொற்று நோயை உண்டாக்கும். இதனால் ஜுரம், ஜலதோஷம், தொண்டைப்புண், தலைவலி, இருமல் இவை ஏற்படும். சுவாச மண்டலம் பாதிக்கப்படும்.
பரவும் விதம்
பன்றி பண்ணை, கோழிப் பண்ணையில் வேலை பார்ப்பவர்களுக்கு பன்றி ஃப்ளூ ஏற்படும் சந்தர்ப்பங்கள் அதிகம். அதுவும் பன்றிகள் மூன்று வகை ஃப்ளூ நோய்க்கு சுலபமாக ஆளாகின்றன. பன்றி, பறவை, மனிதன் இந்த மூன்று ப்ளூவும் பன்றிக்கு வரும். இப்போது வந்திருக்கும் ஸ்வைன் ஃப்ளூ பன்றியிலிருந்து பரவவில்லை. மனிதனுக்கு மனிதன் பரவியது.
ஒருவரிடமிருந்து ஒருவருக்கு, இருமல், தும்மல், தொடுதல் இவற்றால் பரவும். பாதிக்கப்பட்டவரிடமிருந்து, மற்றவர்க்கு கண், மூக்கு, வாய் வழியாக பரவும். பன்றி ஃப்ளூ பன்றி மாமிசத்தால் ஏற்படாது. உணவு மூலம் பரவாது. காற்று மூலமாக பரவும். காய்ச்சல் வந்த 5 முதல் 8 நாட்களில் சுலபமாக மற்றவர்களுக்கு தொற்றி விடும். முதல் 10 நாட்கள் வரை கூட, மற்றவர்களை குறிப்பாக குழந்தைகளை தாக்கும்.
அறிகுறிகள்
· தொற்று ஏற்பட்ட 24 லிருந்து 48 மணி நேரத்தில் அறிகுறிகள் திடீரென்று தோன்றும்.
· குளிர், குளிர் ஜுரம் முதல் அறிகுறிகள்.
· முதல் நாட்களில் ஜுரம் அடிக்கும். ஜுரம் 102 – 103 டிகிரி பாரன்ஹீட் வரை உயரும்.
· அசதி, உடலெங்கும் வலி, குறிப்பாக கால்கள், உடல் பின்பாகம் இவற்றில் வலி தோன்றும்.
· தலைவலி, கண்களை சுற்றி வலி இருக்கும். தலைவலி அதிகமாகவே இருக்கும். அதிக வெளிச்சம் தலைவலியை அதிகமாக்கும்.
· சுவாச மண்டல பாதிப்புகள் ஆரம்பமாகும். லேசான தொண்டை பொருமல், மூக்கு ஒழுகுதல், மார்பில் எரிவது போன்ற உணர்ச்சி, இவைகள் உண்டாகும்.
· இருமல் ஏற்பட்டு கோழை உண்டாகும்.
· முகத்தின் தோல் சூடாக இருக்கும். வாய், தொண்டை சிவக்கும். கண்களில் நீர் வடியும். கண்கள் ரத்தச் சிவப்பாகும்.
· பேதி, பிரட்டல், வாந்தி ஏற்படும்.
இந்த அறிகுறிகள் 2, 3 நாட்கள் இருக்கலாம். ஜுரம் 5 நாள் வரை இருக்கும். இருமல் 10 நாட்களுக்கு மேலும் நீடிக்கலாம். சுவாச பாதைகள், உறுப்புகள் சரியாக 6-8 வாரங்கள் ஆகும்.
இன்ஃப்ளூயன்ஸாவின் அபாய சிக்கல், அது நுமோனியாவாகக் (Pneumonia) கூட மாறலாம்.
சிகிச்சை
வருமுன் தடுப்பது சிறந்தது. இதற்கு வழி தடுப்பூசி போட்டுக் கொள்வது தான். தடுப்பூசி மருந்தில் “கொல்லப்பட்ட வைரஸ்கள்” இருக்கும். அந்தந்த வைரஸ் வகைக்கு ஏற்றபடி, வருடா வருடம் தடுப்பூசி போடப்படும். விஞ்ஞானிகள், ஒவ்வொரு வருடம் எந்த வம்ச ஃப்ளூ தாக்கும் என்பதை ஊகித்து தடுப்பூசி மருந்தை தயாரிக்கின்றனர்.
இப்போது டாமிப்ளூ (Tamiflu) மற்றும் ரெலன்சா (Relenza) போன்ற மாத்திரைகள் கொடுக்கப்படுகின்றன. இந்த மாத்திரைகளை டாக்டரின் கண்காணிப்பில்லாமல் எடுத்துக் கொள்ளக் கூடாது.
தடுக்கும் வழி
மனிதனுக்கு மனிதன் வருவதை தவிர்க்க கைகளை அடிக்கடி கிருமி நாசினிகளால் கழுவ வேண்டும். சாப்பிடும் முன் கண்டிப்பாக கைகளை கழுவ வேண்டும். உடல், கை, கால்கள் மற்றும் வாயை சுத்தமாக வைத்திருக்கவும். நோயாளிகள் இருக்கும் வீட்டை அடிக்கடி பினாயில் போன்றவற்றால் கழுவ வேண்டும்.
ஆன்டி – வைரஸ் மருந்துகள் பன்றி காய்ச்சலுக்கு கொடுக்கப்படுகின்றன.
ஆயுர்வேதப் பார்வை
ஸீஸன்களின் மாறுதலால் ஏற்படும் திரிதோஷ பாதிப்புகளால் ஃப்ளூ வருவதாக ஆயுர்வேதம் சொல்கிறது. அஜீரணம், மலச்சிக்கல், சுவாச மண்டல கோளாறுகள் உள்ளவர்கள், இவர்களை ஃப்ளூ சுலபமாக பற்றும்.
முதலுதவி
· துளசி சாறுடன், சம அளவு தேன் சேர்த்து, ஒரு நாளுக்கு இரண்டு வேளை குடித்து வரலாம். இதை ஊரெங்கும் ஃப்ளூ பரவும் போது குடித்து வந்தால், வராமல் தடுக்கலாம். இதே போல கருமிளகு, இஞ்சி ‘டீ’ குடித்து வரலாம். மிளகுக்கு பதில் திப்பிலி (Piper Longum) யையும் உபயோகிக்கலாம். திப்பிலி ஃப்ளூவுக்கு சிறந்த மருந்து.
· ஒரு தேக்கரண்டி மஞ்சள் பொடியை ஒரு கப் பாலில் இட்டு காய்ச்சி, சர்க்கரை சேர்த்து குடிக்கவும்.
மேற் கண்டவற்றை வருமுன் காக்கும் முறைகளாக எடுத்துக் கொண்டு
ஒரு வேளை உங்களுக்கு மேற்சொன்ன ஃப்ளூவின் அறிகுறிகள் இருந்தால் உடனே டாக்டரிடம் செல்லவும். ஸ்வைன் ஃப்ளூ தீவிரமானது. உடனடி மருத்துவ சிகிச்சை தேவைப்படும்.