அதிக வியர்வை ஆபத்தா?

Spread the love

மனிதன் சூடான ரத்தம் உள்ள பிராணி. சூழ்நிலையால் பாதிக்கப்படாத தேக உஷ்ண நிலை உடையவன். காரணம் உடலை ‘கூலாக’ வைக்க வியர்வை மூலம் சூட்டை உடல் வெளியேற்றுகிறது. கோடை காலங்களில் உடலிலிருக்கும் சிறுநீரகம் வெளியேற்ற வேண்டிய நீரை, வியர்வை சுரப்பிகள் வியர்வையாக வெளியேற்றி விடுகின்றன. மழைக்காலத்தில் அதிக வெப்பம் இல்லாததால் சிறுநீரகமே சிறுநீராக வெளியேற்றுகிறது. வியர்வை நாளங்கள் மூலம் மேல் தோலை அடைந்து அங்கு ஆவியாகி விடுகிறது. இதனால் உடல் குளிர்ச்சி அடைகிறது.

வியர்வை சுரப்பிகள்

வியர்வை சுரப்பி நாளமுள்ள சுரப்பி. பாம்பு போல் சுருண்டிருக்கும் நாளத்துடன் தோலின் அடியில் இருக்கும். அதன் நீண்ட நாளம் (குழாய்) வியர்வையை புறத்தோலுக்கு கொண்டு செல்கிறது. வியர்வை சுரப்பிகள் உடலின் முக்கால்வாசி சர்மத்தில், பல இடங்களில் பரவியுள்ளன. குறிப்பாக அக்குள், உள்ளங்கைகள், கால் பாதங்கள் மற்றும் நெற்றியில் அதிகமாக உள்ளன. இதனால் தான் இந்த இடங்களில் வியர்வை அதிகம் சுரக்கிறது. நாம் எவ்வளவு வியர்க்கிறோம் என்பது நம் உடலில் எவ்வளவு வியர்வை சுரப்பிகள் உள்ளன என்பதைப் பொருத்தது. பிறக்கும் போது நம் உடலில் 2 லிருந்து 4 மில்லியன் வியர்வை சுரப்பிகள் இருக்கின்றன. பருவமடையும் போது, முழுவதாக, வியர்வை சுரப்பிகள் வேலை செய்ய துவங்கி விடும். பெண்களுக்கு ஆண்களை விட அதிக வியர்வை சுரப்பிகளிருக்கும். ஆனால் ஆணின் சுரப்பிகள் அதிகமாக வேலை செய்யும்.

வியர்வை

முக்கால்வாசி நீரான வியர்வையில், சோடியம் குளோரைட், யூரியா உள்ளன. வியர்வை சுரப்பது உடல் உஷ்ணத்தை சமநிலையில் வைப்பதற்காக மட்டுமல்ல. நைட்ரஜன் கழிவுகளை வெளியேற்றுவதற்காகவும் தான். உடல் உஷ்ணம் அதிகமானால் சுரப்பிகள் அதிகம் சுரக்கும்.

வியர்வை அதிகம் சுரக்க இதர காரணங்கள்

நரம்புத் தளர்ச்சி

சில மருந்துகள் (ஹார்மோன் மருந்துகள் முதலியன)

ஸ்ட்ரெஸ், பரபரப்பு

மது அருந்துதல்

அதீத உடல் பயிற்சி

தைராய்டு கோளாறுகள்

அதீத வெயில்

ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைவு

வியர்வை கோளாறுகள்

அதீத வியர்வை ஏற்படுதல்

வியர்ப்பது உடலின் உஷ்ணத்தை குறைப்பதற்காகத்தான். பருவ காலங்கள், சுற்றுப்புற சூழ்நிலைக்கேற்ப வியர்வை அதிகமாகவோ, குறைவாகவோ வெளியேறும் இது இயற்கையான நிகழ்வு. ஆனால் இந்த காரணங்கள் இல்லாமல், குளிர்காலத்தில், படுக்கையில் ஓய்வாக படுத்திருக்கும் போது வியர்த்துக் கொட்டினால் சிகிச்சை தேவை.

உள்ளங்கை, அக்குள், கால்களில் அதீதமாக வியர்வை சுரக்கும். சிலருக்கு விட்டு விட்டு வியர்க்கலாம். சிலருக்கு வியர்த்துக் கொண்டே இருக்கும். இது ஒரு வேதனையான நிலை. ஜனத்தொகையில் 2 (அ) 3% பேர் இந்த அதிக வியர்வையால் பாதிக்கப்படுகின்றனர். ஆனால் இவர்களில் 40% க்கும் குறைந்த நபர்களே சிகிச்சை மேற்கொள்கின்றனர்.

அறிகுறிகள்

கைகளில், குறிப்பாக உள்ளங்கைகளில் வியர்த்துக் கொண்டும் எப்போதும் உடலின் வியர்க்கும் பாகங்கள் ஈரமாக இருக்கும். இவர்களால் காகிதத்தை உபயோகிக்க முடியாது. மற்றவர்களுடன் கை குலுக்க முடியாது, எழுத முடியாது.

நெற்றியிலிருந்து வியர்வை பெருகிக் கொட்டும்.

அபூர்வ சமயங்களில் உடல் (மார்பு, வயிறு) மற்றும் தொடைகளில் வியர்வை வழியும்.

இரவில் வியர்த்தல்

இரவில் திடீரென்று தூக்கம் கலைந்து எழுந்து பார்த்தால் படுக்கையெல்லாம் வியர்வையால் நனைந்திருக்கும்.

காரணங்கள்

பெண்களின் மெனோபாஸ் – மாத உதிரப்போக்கு நிரந்தரமாக நிற்கும் போது, இந்த இரவில் வியர்க்கும் கோளாறு ஏற்படலாம். முதிய ஆண்களுக்கும் ஏற்படலாம்.

தூக்கத்தில் மூச்சு விட சிரமப்படுதல், குறட்டை விடுதல் இவைகளால் இரவில வியர்வை உண்டாகலாம்.

நீரிழிவு, எய்ட்ஸ், க்ஷயரோகம் – இவற்றாலும் இரவில் வேர்க்கும்.

கார சாரமான உணவுகள், சில மருந்துகள், மதுபானங்களும் காரணமாகலாம்.

இதய நோய் சம்பந்தமாக வியர்ப்பது.

திடீரென்று அபரிமிதமாக வியர்த்துக் கொட்டினால் அது மாரடைப்பின் அறிகுறிகளில் ஒன்றாக இருக்கலாம். வியர்த்துக் கொட்டுவது மட்டுமின்றி கீழ்க்கண்ட அறிகுறிகளும் இருக்கும்.

மார்பில் அழுத்தம், வலி ஏற்படும்.

ஆனால் நீரிழிவு நோயாளிகளுக்கும், வயதானவர்களுக்கும் இந்த வலி இல்லாமல் போகும்.

மூச்சுத்திணறல்

வாந்தி

மேல் முதுகு, மேல் வயிறு, கழுத்து, தாடை, மேல் புஜங்களில் வலி (அ) அழுத்தம் இருக்கும்.

தலை சுற்றல்

விரைவான மார்பு துடிப்பு.

மேற்சொன்ன அறிகுறிகள் (வியர்ப்பதையும் சேர்த்து) ஒய்வெடுத்தும் குறையாமல் 5 நிமிடங்களுக்கு மேல் நீடித்தால் உடனே ஆஸ்பத்திரி / டாக்டரிடம் செல்லவும்.

சிகிச்சை

வியர்வை எதிர்ப்பிகள் கிடைக்கின்றன. இவை வியர்வை நாளங்களை அடைத்து விடும். டியோடோரன்ட்டுகள் அதிக வியர்வை வருவதை கட்டுப்படுத்தாது. ஆனால் வியர்வை நாற்றத்தை குறைக்கும்.

படுக்கும் முன் குளிர்ந்த நீரில் குளிக்கவும்.

சில ஆயுர்வேத மூலிகைகள்

சல்பியா சேஃபாகஸ் எனும் மூலிகை இலைகள் எடுத்து 2 கப் நீரிலிட்டு கொதிக்க வைத்து, மேலும் 5 நிமிடம் சிறு தீயில் வைத்து காய்ச்சி, வடிகட்டி கஷாயமாக தினமும் மாலை 2 முறை குடித்து வரவும்.

இந்த மூலிகை கஷாயம் வியர்வை சுரப்பியை சமன்படுத்துகிறது.

வியர்வை அதிகமானால் உடலின் தாது உப்புகள், நீர்மச்சத்து குறைத்து உடல் வறட்சி – Dehydration ஏற்படும். இதற்கு உப்பு + சர்க்கரை கரைசல் கொடுக்க வேண்டும். இவை ரெடிமேடாக கிடைக்கின்றன.

பெப்பர் மிண்ட் ,லெமன் பால்ம் மற்றும் பெருஞ்சீரகம் – இவை மூன்றும் சேர்த்து தயாரித்த தேநீர் கஷாயம் மனபதட்டத்தால் ஏற்படும் வியர்வையை மட்டுப்படுத்தும்.


Spread the love