வியர்வை தரும் ஆரோக்கியம்

Spread the love

உடம்புக்கு மேல் போர்வையாக சருமம் அமைந்து கொண்டு தன் கீழுள்ள பாகங்களைப் பாதுகாக்கிறது. தோலை உள் துணி கொடுத்துத் தைக்கப்பட்ட போர்வை ஒன்றுக்கு ஒப்பிடலாம். ஏனெனில் அதை மேல் தோல், உள் தோல் என்று இரண்டாகப் பிரிக்கலாம். கொதிக்கும் நீர் உடம்பின் மேல் பட்டு கொப்புளம் உண்டாகும் போது, கொப்புளத்தின் நீர் இந்த இரண்டு பிரிவுகளுக்கு இடையில் தான் இருக்கிறது.

உள் தோலில், லட்சக்கணக்கான வேர்வைக் கோளங்கள் காணப்படுகின்றன. ஒவ்வொரு கோளத்திலிருந்தும் ஒரு சிறு குழாய் உடம்பின் மேற்புறத்திற்கு வருகிறது. கைகள் சூடாகியிருந்தால், விரல் நுனியை, அழுத்திப் பார்த்து, வேர்வைத் துவாரங்களின் வழியாக வேர்வைத் துளிகள் வருவதைப் பார்க்கலாம்.

வேர்வை முழுவதும் என்றால் இல்லை என்றே கூற வேண்டும். நீருடன் உப்பும் கழிவுப் பொருளும் கலந்துள்ளன. இந்த கழிவுப் பொருட்கள் சிறுநீரில் உள்ள பொருள்களை மிகவும் ஒத்து அமைந்திருக்கின்றன.

சிறுநீரகங்களும், தோலும் கழிவுப் பொருட்களை நீக்காவிட்டால் விரைவில் உடம்பின் விஷப் பொருட்கள் உடம்புக்கு தீங்காக அமைந்து விடும். தோல் மட்டுமே, பெரும் பகுதியான விஷப் பொருட்களை நீக்குகிறது. வேர்வை வெளி வராதபடி ஏதாவது ஒரு சாயம் அல்லது எண்ணெயையாவது பூசினால், ஒரு சில மணி நேரத்திற்குள் ஒருவன் இறந்து விடுவான்.

உடம்பு மேல் வேர்வை நன்றாகத் தெரியும் போது தான் உடம்பு வேர்க்கிறது என்று பலர் நினைக்கிறார்கள் இது தவறான கருத்து. வேர்வையானது, எல்லா நேரங்களிலும், உடம்பிலுள்ள வேர்வைக் கோளங்களிலிருந்து வந்து கொண்டே இருக்கிறது. ஆனால், அனேகமாய் வந்தவுடனே காய்ந்து போகும் படியாக அவ்வளவு மெதுவாய் வருவதால் அது கண்ணுக்குப் புலப்படுவதில்லை.

உஷ்ணமும், உடற்பயிற்சியும் வேர்வையை அதிகரிக்கச் செய்கின்றன. உடம்பு நன்றாக வேர்க்கும்படி ஒருவனுக்கு நாள் தோறும் போதுமான உடற்பயிற்சி அவசியம். ஏனெனில், தோலானது செம்மைப்பட்டு, ஆரோக்கியம் பெறுவதுடன், இரத்தமும் அழுக்கில்லாமல் சுத்தமாய் வைக்கப்பட்டிருக்கிறது.

நன்றாக வேர்த்த உடம்பை வேர்வை காயந்ததும், நாம் கவனித்தால் உடம்பின் மேல் லேசான ஒரு உப்புப் பூச்சை கவனிக்கலாம். இந்த உப்பு வேர்வையோடு உடம்பிலிருந்து வந்தது. உப்போடு கூட வேறு கழிவுப் பொருள்களும் இருக்கின்றன.

நாம் அடிக்கடி குளிக்காவிட்டால் என்ன நேரிடும்?

மேற்கூறிய கழிவுப் பொருட்கள் உடம்புக்கும், உடுத்தும் ஆடைக்கும் துர்நாற்றத்தை கொடுக்கின்றன. உப்பு, கழிவுப் பொருள்கள் மற்றும் இடைவிடாமல் உடம்பின் மேல் படிந்து வருகிற தூசியையும் அடிக்கடி குளித்து நீக்காமல் இருந்தால் அவைகள் வேர்வைத் துவாரங்களை அடைத்து விடும். இதனால் வேர்வைத் துவாரங்களின் வேலைக்கு இடையூறு செய்கின்றன. இதனால் விஷப் பொருட்கள் இரத்தத்திலே அதிகரிக்க நோய் உண்டாகின்றன. உஷ்ண தேசங்களில் ஒவ்வொருவரும் தினசரி ஒருமுறை குளிப்பது அவசியமாகும்.

உடம்பைச் சுத்தம் செய்ய வென்னீரையும், சோப்பையும் பயன்படுத்துவது நல்லது. குளிர்ந்த நீரிலே குளித்து ஒரு துண்டின் உதவியால் ஈர உடம்பை நன்றாக தேய்ப்பது மிகவும் நல்லது. இதன் மூலம் ஜலதோஷம், மற்ற நோய்களும் எளிதில் அண்டாது. உடம்பு பலம் பெறும்.

குளிர்ந்த நீரிலே குளிப்பதற்கு ஏற்ற நேரம் காலை நேரம் தான். உடம்பு சூடாக இருக்கும் போதாவது அல்லது களைத்திருக்கும் போதாவது குளிர்ந்த நீரில் குளிக்கக் கூடாது. சாப்பிட்ட உடனேயும் வென்னீரில் அல்லது குளிர்ந்த நீரில் குளிக்கக் கூடாது.

ஆரோக்கியமாக இருப்பவர்கள் நோய்கள் வராதபடி அமைத்துக் கொள்ள அடிக்கடி குளித்தல் மிகவும் அவசியம். வியாதியாய் இருப்பவர்களை தினந்தோறும் குளிப்பாட்டுவது இதைக் காட்டிலும் அவசியமானது. ஏனெனில், நோயுற்றவன் உடம்பில் மேல் உள்ள கழிவுப் பொருள் அளவிலும் விஷத் தன்மையிலும் அதிகமாக இருக்கின்ற்ன.

நோயாளிகளைத் தினந்தோறும் குளிப்பாட்டி வர பெரும்பாலான நோயாளிகள் குணமடைவது விரைவாக நடைபெறும். நோயாளியைக் குளிப்பாட்ட வென்னீர் வேண்டும். முதலில் வலது கையை வென்னீரால் குளிப்பாட்டித் துடைத்து, ஒரு துணியைக் கொண்டு போர்த்த வேண்டும். பிறகு இடது கைக்கும் இவ்வாரே செய்ய வேண்டும். மார்புக்கும் உடம்பின் மற்ற பகுதிகளுக்கும் இப்படியே செய்ய வேண்டும். இவ்வாறு நோயாளியைக் குளிப்பாட்ட, அவனுக்கு ஜலதோஷம் பிடிக்குமோ என்று பயப்பட அவசியமில்லை.

பா. முருகன்


Spread the love